Monday, February 22, 2010
நடுநிலைவாதியின் கொள்கைகள்
ஓர் தினம் இருவரிடையே சண்டை மூண்டது. ஒருவன் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து, மற்றவனின் உடலிலிருந்து இறைச்சியை வெட்டியெடுக்க மல்லுக்கட்டினான். மற்றவனோ தனது உடலிலிருக்கும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினான்.
இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர். இறைச்சி வெட்டுபவனின் பக்கமும் அவனது சகாக்கள் சிலரிருந்தனர்.
இந்த இருபுறமும் சாராமல் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடுநிலைவாதியும் அங்கிருந்தார்.
' ஒரு வார்த்தையாலாவது உதவாமல் நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதேனோ?' என ஒரு பக்கத்தைச் சார்ந்திருந்தவன் அவரிடம் கேட்டான்.
' நான் இந்த இரண்டு பக்கங்களுக்கும் இல்லை' என பதில் கூறினார் அவர்.
' பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் செய்வது, அநீதியின் பக்கம் சார்வதுதான்' அவன் சொன்னான்.
' ஏதாவதொன்றில் கலந்துகொள்ளாமல், எதுவும் செய்யாமல் இருக்கும்போது ஒரு பக்கம் சார்ந்திருப்பதென்று சொல்வதெப்படி?'
' அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன் பக்கம் சார்வதுதான்'
' இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து, இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம் இவ்வாறு கேட்டார்.
' உங்கள் தேவை என்ன?'
' எனக்குப் புதிய தேவைகள் எதுவுமில்லை. எனது உடலின் சதைகளை இந்த இறைச்சி வெட்டுபவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதன்றி'
' நல்லது. உங்கள் வேண்டுகோள் என்ன?' என்று இறைச்சி வெட்டுபவனிடமும் கேட்டார்.
' எனக்கு இவனின் உடலிலிருந்து சதை வேண்டும்' என உறுதியாகச் சொன்னான்.
' ஆமாம். உங்கள் இருவரினதுமே எதிர்பார்ப்புகள் ஈடேறுவதுதான் நடுநிலைமையானது!' நடுநிலைமைவாதி சொன்னதும்,
' நீங்கள் மிக மிகச் சரி!' எனக் கூறிய இறைச்சி வெட்டுபவன், ' இவனின் சதையை வெட்டிக்கொள்வது நடுநிலையானதென மத்தியஸ்தரே கூறி விட்டார்' என மேலும் உற்சாகத்தோடு சதையை வெட்டியெடுக்க முற்பட்டான்.
மூலம் - எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
நன்றி - உயிர்மை
Labels:
S.G.PUNCHI HEWA,
ஈழம்,
உயிர்மை,
குறுங்கதை,
சிறுகதை,
நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அது சரி...
//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்
போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//
அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன
பிரயோசனம்..?
வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(
தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய
சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்
பலஹீனமான ஒரு கேடயம்.
எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு
வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.
உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்
சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்
காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்
அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.
எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள
முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்
உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்
தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்
எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது
தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!
உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??
அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து
வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.
அன்புடன்
சுவாதி
ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...
//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை
நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்
பக்கம் சார்வதுதான்'//
சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை
சாற்றுபவர்கள்1:(
// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,
இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க
விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்
இவ்வாறு கேட்டார்.//
நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு
கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.
அன்பின் சிவா,
//அது சரி...
//இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப்
போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர்.//
அவனை காப்பாற்ற யாரும் முயலாத போது யார் எந்த பக்கம் இருந்தால் யாருக்கு என்ன
பிரயோசனம்..?
வாய்ப் பந்தல் போடுவதால் சதையை இழப்பவனுக்கு என்ன பயன் என்று புரியலே... :( :(//
நிச்சயமாக நண்பா!
இங்கு பலரும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டுமே இருப்பதனால்தான் அநீதிகள் பெருகி, அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். :(
கருத்துக்கு நன்றி நண்பா !
அன்பின் சுவாதி அக்கா,
//தற்போதைய சமூகத்தில் நடுநிலையென்பது ஒரு விதமான முகமூடி! தங்களுடைய
சார்புநிலையை, சுயத்தை மறைத்து , தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மிகவும்
பலஹீனமான ஒரு கேடயம். //
நிச்சயமாக.
இன்றைய நடுநிலைவாதிகள் நீதியின், உண்மையின், நேர்மையின் பக்கம் சாராமல் சம்பந்தப்பட்டவர்களின் பண பலத்தையும் படை பலத்தையும் பார்த்து அதன் பக்கமே சார்ந்திருக்கின்றனர்.
//எந்தவொரு மனிதனும் சமூகப் பிரச்சினைகளில் நடுநிலை வகிக்க இயலாது. அப்படியொரு
வார்த்தையை பிரயோகிப்பவன் கட்டாயம் ஒரு கோழையாக மட்டுமே இருக்க முடியும்.//
நேர்மையான முறையில் நடுநிலை வகிக்க இயலாது எனில் அவரை நடுநிலைவாதி என்றே சொல்ல இயலாது அல்லவா? அநீதியின் பக்கம் சார்ந்திருப்பார் அவர்.
//உயிர் மீதான பயம் ,சுயநலமான வாழ்கை மீதான ஆவல், கெடு போன்றவையே தனிமனிதன்
சமூகப்பிரச்சினைகளுள் தன்னைப் புகுத்தாமல் விலகி இருக்கவும், நடுநிலைவாதியாகக்
காட்டிக் கொள்ளவும் காரணமாக இருக்கிறது. அதை தவறென்று குற்றம் சொல்லும்
அதிகாரம் நமக்கில்லை. எல்லா மனிதர்களும் சமூகப் பிரக்ஞையுடையவர்களாயிருக்க
வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் கொஞ்சம் குழந்தைத் தனமானது.//
ஆமாம்..உண்மைதான்..அதேபோலத்தான் எல்லா மனிதர்களும் உண்மையின் பக்கமே சார்ந்திருப்பார்களென நம்புவதும்.
//எந்தவொரு சிங்கள குடிமகனாலும் தமிழருக்கான சுதந்திரத்தின் தேவையை ஏற்றுக் கொள்ள
முடியாது; உயிரிழந்தோருக்காக பரிதாபப்படுவார்கள்; இனியாவது இப்படி சாகாமல்
உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; என்ற அதிகபட்ச அறிவுரையைத் தான்
தருவார்கள். அது தான் அவர்களுடைய நடுநிலையின் எல்லை.! அதைக் கடந்து அவர்களில்
எவரேனும் "தமிழர்கள் தங்களுடைய உரிமையைத் தானே கேட்கிறார்கள். அது நியாயமானது
தானே?" என்ற நியாய எல்லைக்குள் வர மாட்டார்கள்!//
சிங்களக் குடிமகனென்று மட்டுமில்லை..நாட்டிலுள்ள எந்தக் குடிமகனாலும் அரசனை நோக்கிக் கேள்வி எழுப்பமுடியாதுள்ளது. எனினும் நேர்மையான, தைரியமான ஒரு சிலர் மட்டும் தங்கள் எழுத்துக்களால் அரசனை நேரடியாகத் தாக்குகின்றனர்.
//உண்மையில் எது நடுநிலைமை?/ அதை யார் கணிப்பது??
அரச தரப்பினரால் இதை எழுதியவருக்கும் மொழிபெயர்த்தவருக்கும் ஏதும் ஆபத்து
வராமல் இருக்க இறைவனைப் பிராத்திப்போமாக.//
அருமையான கருத்துக்கு நன்றி அக்கா !
அன்பின் விஜி,
//ரிஷான்,
தங்கள் மொழியாக்கத்தில் எனக்கு மிகப்பிடித்திருந்தது இந்தப்பதிவு!...//
நன்றி தோழி :)
//அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை
நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன்
பக்கம் சார்வதுதான்'//
//சொன்னோமே!! செவிமடுத்தார்களா? நடுநிலமைவாதிகள் என்று தம்மைப்பறை
சாற்றுபவர்கள்1:(//
அவர்கள் உண்மையான, நேர்மையான நடுநிலைவாதிகளாக இல்லை தோழி. எதிர்பார்க்கவும் முடியாது.
// இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து,
இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க
விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம்
இவ்வாறு கேட்டார்.//
//நாங்கள் நிறையவே பார்த்திருக்கின்றோம். கடந்த வருடம் எங்களுக்கு
கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்.//
:(
கருத்துக்கு நன்றி தோழி !
Post a Comment