தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது.
என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.
"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?"
என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.
'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை'
என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.
"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்"
சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார்.
தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து,
"திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.
'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்'
சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.
'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டி புதைத்திருக்கிறேன்'
என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.
"என்ன சொல்கிறான் இவன்?"
கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார். அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.
"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனை சுட்டுத் தள்ளட்டுமாம். அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்கு தைரியமில்லையாம்."
மூலம் - சமபிம (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
Showing posts with label குறுங்கதை. Show all posts
Showing posts with label குறுங்கதை. Show all posts
Tuesday, June 1, 2010
Monday, February 22, 2010
நடுநிலைவாதியின் கொள்கைகள்
ஓர் தினம் இருவரிடையே சண்டை மூண்டது. ஒருவன் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து, மற்றவனின் உடலிலிருந்து இறைச்சியை வெட்டியெடுக்க மல்லுக்கட்டினான். மற்றவனோ தனது உடலிலிருக்கும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினான்.
இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர். இறைச்சி வெட்டுபவனின் பக்கமும் அவனது சகாக்கள் சிலரிருந்தனர்.
இந்த இருபுறமும் சாராமல் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடுநிலைவாதியும் அங்கிருந்தார்.
' ஒரு வார்த்தையாலாவது உதவாமல் நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதேனோ?' என ஒரு பக்கத்தைச் சார்ந்திருந்தவன் அவரிடம் கேட்டான்.
' நான் இந்த இரண்டு பக்கங்களுக்கும் இல்லை' என பதில் கூறினார் அவர்.
' பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் செய்வது, அநீதியின் பக்கம் சார்வதுதான்' அவன் சொன்னான்.
' ஏதாவதொன்றில் கலந்துகொள்ளாமல், எதுவும் செய்யாமல் இருக்கும்போது ஒரு பக்கம் சார்ந்திருப்பதென்று சொல்வதெப்படி?'
' அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன் பக்கம் சார்வதுதான்'
' இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து, இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம் இவ்வாறு கேட்டார்.
' உங்கள் தேவை என்ன?'
' எனக்குப் புதிய தேவைகள் எதுவுமில்லை. எனது உடலின் சதைகளை இந்த இறைச்சி வெட்டுபவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதன்றி'
' நல்லது. உங்கள் வேண்டுகோள் என்ன?' என்று இறைச்சி வெட்டுபவனிடமும் கேட்டார்.
' எனக்கு இவனின் உடலிலிருந்து சதை வேண்டும்' என உறுதியாகச் சொன்னான்.
' ஆமாம். உங்கள் இருவரினதுமே எதிர்பார்ப்புகள் ஈடேறுவதுதான் நடுநிலைமையானது!' நடுநிலைமைவாதி சொன்னதும்,
' நீங்கள் மிக மிகச் சரி!' எனக் கூறிய இறைச்சி வெட்டுபவன், ' இவனின் சதையை வெட்டிக்கொள்வது நடுநிலையானதென மத்தியஸ்தரே கூறி விட்டார்' என மேலும் உற்சாகத்தோடு சதையை வெட்டியெடுக்க முற்பட்டான்.
மூலம் - எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
நன்றி - உயிர்மை
Labels:
S.G.PUNCHI HEWA,
ஈழம்,
உயிர்மை,
குறுங்கதை,
சிறுகதை,
நிகழ்வுகள்
Wednesday, January 20, 2010
மரித்த உயிரை மீளப்பெறும் முறை
'செத்துப் போன உயிரொன்றை மீண்டும் பெற்றுத் தரக் கூடிய மருந்து என்ன?'
என ஒரு நாள், கொல்லனொருவன் வைத்தியரைக் கேட்டான். வைத்தியர் புன்னகைத்து,
'செத்துப் போன உயிரை மீண்டும் பெற்றுத் தரக்கூடிய எந்தவொரு மருந்தும் இந்த உலகத்தில் இல்லை' என பதிலளித்தார்.
' அப்படியென்றால், செத்துப் போன உயிரை மீட்டுத் தர முடியுமான ஒருவன் உலகத்தில் இருக்கிறானா?'
' அப்படியொருவன் இருப்பானென்றும் நான் நினைக்கவில்லை'
' அப்படிப்பட்ட ஒருவனை எனக்குத் தெரியும்'
' அவன் யார்?'
' கொல்லன்'
' எப்படி உன்னால் இறந்த உயிரை மீளக் கொடுக்க முடியும்?'
' உருக்குகளுக்கு உயிர் போனவிடத்து என்னால் உயிர் கொடுக்கமுடியும்'
' ஆமாம். அது சரி. நீ சொல்வது உருக்குகளைப் பற்றி. நான் மனிதர்களை நினைத்துப் பார்த்தேன்'
' மனிதர்களுக்கும் அவ்வாறேதான்'
மீண்டும் புன்னகைத்தார் வைத்தியர்.
' உருக்குகளுக்கு நடப்பவையெல்லாம் மனிதர்களுக்கு நடக்குமென்றால், உயிர் போவதல்லாமல் உயிர் கிடைக்குமா?'
' அது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். அதாவது உருக்குகளுக்கு நடக்கும் அனைத்து அழுத்தங்களும் எனக்கும் நிகழ்வதோடு, எனது கை,கால்களும் உருக்குகளைப் போலவே பலம் வாய்ந்தது என்பது தெரியும்'
'அவ்வாறெனில், அங்கு நடப்பவற்றைப் பார்வையிட நான் விரும்புகிறேன்'
' சரி. எனது பட்டறைக்கு வாருங்கள்'
பிறகொரு நாள் கொல்லன் தனது பட்டறையில் இரும்பினை நெருப்பிலிட்டு உருக்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவ் வைத்தியர் அங்கு வந்தார். கொல்லன், ஆயுதங்களை நெருப்பிலிட்டு, காய்ச்சுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர், தன்னையறியாமல் கேட்டார்.
' நெருப்பினால் ஆயுதங்களுக்கு உயிர் கிடைப்பதென்பது ஆச்சரியம் தருகிறது. இல்லையா?'
அதற்கு எந்தப் பதிலும் அளிக்காத கொல்லன், அவ் ஆயுதங்களைத் தட்டுதல், தகர்த்தல் போன்றவற்றைச் செய்தான்.
' ஆயுதங்களுக்கு உயிர் கொடுப்பது நெருப்பு இல்லையா?' என வைத்தியர் மீண்டும் கேட்டார்.
' இல்லை' எனச் சொன்ன கொல்லன், நெருப்பைப் போலச் சிவந்த, உருகிய ஆயுதங்களை எடுத்து நீரில் அமிழ்த்தினான்.
' அருமை. எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது. உருக்குகளுக்கு உயிர் கிடைப்பது நீரில்தானே?'
'இல்லை. இல்லை' எனச் சொன்ன கொல்லன், இவ்வாறு தொடர்ந்தான்.
' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'
' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்.
மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி - உயிர்மை
Labels:
S.G.PUNCHI HEWA,
ஈழம்,
உயிர்மை,
குறுங்கதை,
சமூகம்,
சிறுகதை,
நிகழ்வுகள்
Monday, November 30, 2009
எங்களது ராஜாக்கள் அல்ல
அரசன், தனது ராஜ சபையைக் கூட்டி விசாரித்தபோது 'சட்டதிட்டங்கள் போதாது' என்பது மந்திரி, பிரதானிகளின் கருத்தாக இருந்தது. அதனால் ஒரே இரவில் புதுத் திட்டமொன்று கொண்டு வரப்பட்டது.
' நோய்க்குக் காரணமான அனைத்தும் அழிக்கப்படவேண்டும்' என்பதே அந்தத் திட்டமாக இருந்தது.
'இனி நோய்ப்பயம் நீங்கிவிடும்' என மக்கள் எண்ணினாலும், நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டே இருந்தது. இருந்த மருந்துகளையெல்லாம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். போலி மருந்துகள் நாடு முழுவதும் விற்கப்பட்டன. போலி வைத்தியர்களும் நிறைய உருவாகியிருந்தனர். மந்திரி, பிரதானிகளுக்கு மருந்துக் கொள்ளையர்களிடமிருந்தும், போலி வைத்தியர்களிடமிருந்தும் தீர்வை, கப்பமென நிறையக் கிடைத்தன.
சாவுகள் முடிவின்றித் தொடர்ந்ததால் பொதுமக்கள் அரண்மனைக்கு முன் கூடி கோஷங்களை எழுப்பினர்.
' நோய்க் காரணிகள் எதுவும் அழிக்கப்படவில்லை' எனக் கூச்சலிட்டனர்.
'நோய்க் காரணிகள் இன்னும் கொஞ்சம்தான் எஞ்சியிருக்கின்றன. அது மட்டுமன்றி, இது போன்ற வியாதிகள் மற்ற நாடுகளிலும்தான் இருக்கின்றன. உங்களில் எவனுக்காவது அதைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்குமென்றால் முன்னால் வரலாம்' என அரசன் கூறினான்.
அப்பொழுது ஒரு ஆண்மகன் முன்னால் வந்தான்.
' இந்த வியாதிகளின் விஷக் கிருமிகள் அத்தனையையும் உன்னால் அழிக்க முடியுமா?' என அரசன் அவனிடம் கேட்டான்.
'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்' என்றான் அவன்.
குடிமக்களும் அதையே ஏகோபித்தனர்.
'நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்கள் யார்?' இது அரசனின் கேள்வியாக இருந்தது.
'அவர்கள் வேறு யாருமல்ல. அரசன், மந்திரி பிரதானிகள்தான்' அவன் பதிலளித்தான்.
கடுங்கோபங்கொண்ட அரசன்,
'இவன் ஒரு ராஜதுரோகி. உடனே கொல்ல ஏற்பாடு செய்யுங்கள்' என அரச பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.
'ராஜதுரோகியான பின்பு, இம் மரணதண்டனையை இல்லாமலாக்கச் செய்யும்படியான காரணங்கள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?' அரசன் அவனிடம் கேள்வியெழுப்பினான்.
அவன் இவ்வாறு பதிலளித்தான்.
' உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.
மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா
(Mawatha anka 42 - 1987 April-June)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# உயிர்மை
Labels:
S.G.PUNCHI HEWA,
ஈழம்,
உயிர்மை,
குறுங்கதை,
சமூகம்,
சிறுகதை,
நிகழ்வுகள்
Subscribe to:
Posts (Atom)