Tuesday, March 23, 2010

வசந்த உதயம்
தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் - அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே.

தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் அப்பாவைப் போல.

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
அனைத்துத் துயரத்தையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயாகூட - வெறும்
சுண்ணாம்பாய்க் களப்பினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் - கடும்
இருளாயே இங்கு விடிகிறது.
வசந்தம் உதயமானாலும் உதிக்க மறுக்கிறது சூரியன்
இது கிழக்கு!

மூலம் : மஞ்சுள வெடிவர்தன
தமிழில் - ஃபஹீமாஜஹான்

நன்றி: இருக்கிறம் 50 வது இதழ்

Wednesday, March 10, 2010

அக்டோபர் கவியொன்று

அக்டோபர் வானம்
புதியதாக ஒரு கல்லறை
ஒரே ஒரு வெண்ணிறக்கொடி
வேதனையில் ஓலமிடும்
உனக்குப் பிடித்திருந்தால் அதனை
நிலா என்றழை

எமக்கென்றொரு சினேகிதன் இருக்கிறான்
பற்களால் சிரித்திடும்
விழிகளால் கதைத்திடும்
அக்டோபர் மாதத்தில் உயிர்த்தெழுந்து
மீள மரித்துப் போகும்படியான

துப்பாக்கி ரவைக்கும் இருக்கிறது
நிமிட நேர வாழ்க்கை
நண்பனுக்கென இருப்பது
அக்டோபரின் நாளொன்று மட்டுமா

கண்ணீருக்கும் இருக்கிறது
உஷ்ணத்தாலோ குளிராலோ ஆன ஒரு இருப்பிடம்
தாய்நிலமற்ற தோழனுக்கென இருப்பது
இருப்பிடம் கூட அற்ற மரணம் மாத்திரமா

அந்த நண்பனுக்குத்தான்
அக்டோபரில் உயிர் வருவதுவும்
அதே நண்பன்தான்
திரும்பத் திரும்ப மரித்துப் போவதும்

# மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டு , அக்டோபர் 19, 2009 க்கு 9 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு எழுதப்பட்ட கவிதை.

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் -2009
# உயிர்மை
# கூடு Tuesday, March 2, 2010

கொலைத் துணியல்லவா இது

அரசன் பொறுப்பாளனாகும் நேரத்தில்
சேனைத் தளபதி
சிம்மாசனத்துக்கு நகைக்கிறார்
தமிழர்களிடமிருந்து
வாக்குகளை வேண்டுகையில்
இறுதி வாரத்தில்
ஏழாயிரம் பேரைக் கொன்றொழித்தது
நான் தானா என்ற சந்தேகம் எனக்கு

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி
# உன்னதம் இதழ், டிசம்பர் - 2009