Showing posts with label THAKSHILA SWARNAMALI. Show all posts
Showing posts with label THAKSHILA SWARNAMALI. Show all posts

Wednesday, June 7, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 01



     லங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களிலும், அவர்களும், அவர்களது மொழியும் வியாபித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

     இலங்கையின் மூன்று தசாப்த காலப் போரின் வடுக்களாக, அவர்களையும், அவர்களது மொழியையும் கொடூர எதிரிகளாக சித்தரித்துக் காட்டியுள்ளன சர்வதேச ஊடகங்கள். அதன் பலனாக, இன்றும் கூட தமிழ் வாசகர்களிடத்தில் பரிச்சயமாக உள்ள ரஷ்ய இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்களுக்கு மத்தியில், புறக்கணிக்கப்பட்டு, தொலைவாகிப் போயுள்ள மொழியாக சிங்கள மொழி மாறி விட்டிருக்கிறது.

     சிங்கள மொழி, உலகில் இலங்கை எனும் நாட்டில் மாத்திரமே பாவனையிலுள்ள ஒரு பிரத்தியேகமான மொழி என்பதில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வாறே சிங்கள மொழி இலக்கியங்களும், நம் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றன. நம் மூதாதையர்கள் கூறி மகிழ்ந்த எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளை இன்னும் பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா?

     இந்தப் பத்தித் தொடர் மூலமாக, நம் பழங்கால வாழ்வியலை, நிகழ்கால ஜீவிதத்தை சிங்களக் கவிதைகளினூடாக உணரத் தலைப்படும் அதே வேளை, தமிழ் வாசகர்கள் பெரிதும் அறிந்திராத சிங்கள மொழிக் கவிஞர்களை அறியச் செய்யும் முயற்சியாகவும் அமைகிறது.

ளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் கவிஞரும், எழுத்தாளருமான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, நவீன தலைமுறை சிங்களக் கவிஞர்களில், படைப்புக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரியையாக இருப்பதால், சமகால சிறுவர்கள், மாணவர்களின் உளப்பாங்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவரது கவிதைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தி, வளர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.

சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் இவர், இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 சிறுவர் இலக்கியப் பிரதிகள், 3 சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதையொன்றைக் கீழே தருகிறேன்.

உதிக்காதே சூரியனே



வேண்டாம் சூரியனே நீ உதிக்க
எனக்குப் பிடித்திருக்கிறது
இப்படியே சுருண்டு படுத்திருக்க
உதிக்கவே இல்லையாயின் சூரியன்
உலகம் எவ்வளவு அழகானதாயிருக்கும்

சூரியன் உதித்ததுமே
ஓடத் தொடங்குவாள் எனது தாய்
என்னையும் இழுத்தபடி.

கழிவறைக்குப் போனாலும் அம்மா கத்துவாள்
'சீக்கிரம் வா… தாமதமாகுது'
வழிநெடுக காலையுணவைப் பாதி தின்றவாறு
சீருடையைச் சரி செய்தபடி ஓடிப் போய் நின்றால்
தடியை நீட்டியவாறு அதிபர் கேட்கிறார்
'விரைவாக வரத் தெரியாதா… தாமதிக்கிறாய்'

தாமதமானவர்களின் வரிசையில் காத்திருந்து
வகுப்பறைக்குப் போனால்
ஆசிரியை உத்தரவிடுகிறாள்
'வீட்டுப் பாடம் செய்யவில்லைதானே
முழங்காலில் நில் வெளியே போய்'

பள்ளிக்கூடம் விட்டு
பிரத்தியேக வகுப்புக்கும் சென்றுவிட்டு
வீட்டுக்கு வந்தால்
அப்பாவின் கட்டளை
'விளையாடப் போகக் கூடாது,
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது,
புத்தகத்தைக் கையிலெடு'

உதிக்காதே சூரியனே
எனக்கு சுருண்டு படுத்திருக்க
இரவு எவ்வளவு அழகானது
  ***

ஒரு சிறுபராயத்துப் பிள்ளையின் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ள இக் கவிதை, தற்கால சமூகத்தில், அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் மிகவும் பொருந்துகிறது அல்லவா? குழந்தைகளுக்கான எல்லாச் சட்டங்களும் பெற்றவர்களாலேயே இயற்றப்படுகின்றன. குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுவதிலேயே அவர்களது எதிர்காலத்தின் வெற்றி அமைந்திருக்கிறது என்பதை மறந்து விடுபவர்களுக்கு, இவ்வாறான கவிதைகளே அதை நினைவுபடுத்துகின்றன.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்

Monday, March 20, 2017

சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது



சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை
கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது


சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ


கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை


'பொருட்களை வாங்கும்வரைக்கும்
கைக்குழந்தையை வைத்திருக்கட்டுமா?
இல்லாவிட்டால் காய்கறிப்பையை
தூக்கிக் கொள்ளட்டுமா?
நீ மிகவும் சிரமப்படுகிறாய்' என
கூற வேண்டுமெனத் தோன்றியபோதும்
கூறி விட இயலவில்லை என்னால்


- தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி- வாசல், று, மிழ் எழுத்தாளர்கள் இணைத்ளம், வார்ப்பு, திவுகள்
Painting - Jen Adam

Wednesday, August 10, 2016

பூனையாகிய நான்…


உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

- தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்


   ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

     பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

     பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - நவீன விருட்சம், வல்லமை, இனியொரு, று, பதிவுகள்