Showing posts with label JAGATH J EDIRISINGHE. Show all posts
Showing posts with label JAGATH J EDIRISINGHE. Show all posts

Sunday, May 2, 2010

சுய துரோகம்

நேற்று
நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்
காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்
காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்
காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்
எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்

நேற்று
நாங்கள் சந்திக்காதிருந்தோம்
இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்
காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம்
பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை
அனுபவிக்காதிருந்தோம்

நேற்று
நான் கண்ட அதே நிலவை
நீ காணாதிருந்தாய்
நான் அனுபவித்த தென்றலின் தழுவலை
நீ அனுபவிக்காதிருந்தாய்

நேற்று
நீயென்று ஒருவர் இருக்கவில்லை
நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்
இன்றும் அவ்வாறே
நான் மாத்திரமே
பாதம் பதிக்க இடமற்ற
வெற்று வெளியொன்றில்
புவியொன்றா பிரபஞ்சமொன்றா
பொருளொன்றா
சக்தியொன்றா
எண்ணமொன்றா
உணர்வொன்றா
இவை ஏதுமற்ற
வெற்று வெளியொன்றில்
வெறுமனே தரித்திருக்கிறேன்

நேற்று
சூரியன் உதித்திடவில்லை
நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை
அதுவுமன்றி
நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை

எல்லாமே வெறுமையாய்...

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை

நன்றி
#சொல்வனம் இதழ் - 24
# நவீன விருட்சம்
# கூடு 
# உயிர்மை