Wednesday, December 14, 2011

வெளிச்சம்


அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது

எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது

அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கைநன்றி
# நவீன நிருட்சம்
# வார்ப்பு
# திண்ணை

Monday, December 5, 2011

எமதுலகில் சூரியனும் இல்லை

 
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்

அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி

தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே

கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

- ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Friday, November 4, 2011

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு

கீழே
முற்புதர்கள் கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும்
பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு

அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து

ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது

மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி
அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் சென்றுவிட்டாலும்

கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று

சீராக முட்புதர்களை வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊரொன்றுக்கு

நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியபடி

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
#  மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# ஊடறு
# திண்ணை 

Wednesday, June 8, 2011

அம்மாவின் நடிகைத் தோழி


அம்மா சொல்வாள்
அந் நடிகையின் நடிப்பைப்
பார்க்க நேரும் போதெல்லாம்

'பள்ளிக்கூடக் காலத்தில்
உயிர்த் தோழிகள் நாம்
அமர்ந்திருந்தோம் ஒரே வகுப்பில்
ஒரே பலகை வாங்கில்
அந் நாட்களிலென்றால் அவள்
இந்தளவு அழகில்லை'

பிறகு அம்மா
பார்ப்பது தனது கைகளை
உடைந்த நகங்களை
காய்கறிகள் நறுக்குகையில்
வெட்டுப்பட்ட பெருவிரலை

அத்தோடு அவள் எங்களைப் பார்ப்பாள்
எனது முகத்தை, தம்பியின் முகத்தை
கண்களைச் சிறிதாக்கிப் புன்னகைப்பாள்
அவளது வதனத்தின் சுருக்கங்களையும் சிறிதாக்கி

மூலம் - இஸுரு சாமர சோமவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# காற்றுவெளி இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை

Tuesday, May 17, 2011

அரசியல்


கீதங்கள் இசைத்து
கிரிக்கட் விளையாடி
வெள்ளித் திரையில்
சின்னத் திரையில்
மேடைகளில் நடித்து
கொலை செய்து
கொள்ளையடித்து
தாதாவாகி மிரட்டி
அதுவும் முடியாதெனில்
குறைந்த பட்சம்
பாலியல் வன்முறையொன்றையாவது
பிரயோகித்து
பெயரை உருவாக்கிக் கொண்டு
உருவத்தை அலங்கரித்து
உடலைச் சமைத்து
அப் பெயரை விற்று
தேர்தலில் வென்று
அமைச்சரவையில்
ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும்
சோறுண்ணும் எருமைகள்
அநேகமுள்ள நாட்டில்
புல்லுண்ணும் எருமைகள் வாழ்க !!!

- பியன்காரகே பந்துல ஜயவீர (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# கீற்று

Thursday, March 3, 2011

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம்
கைக் குழந்தைகள் தவிர்த்து
ஆண் வாடையேதுமில்லை
எல்லோருமே பெண்கள்
வயதானவர்கள்
நடுத்தர வயதுடையோர்
யுவதிகள்
எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்பா!
பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான
இவ் விசித்திர நகரில்
எஞ்சியுள்ள
எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்
சகோதரரைப் புத்திரர்களை
சீருடை அணிவித்து
வீரப் பெயர்கள் சூட்டி
மரியாதை வேட்டுக்களின் மத்தியில்
புதைத்திட்டோம்
செத்துப்போனவர்களாக

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# மறுபாதி முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# நவீன விருட்சம்
# கீற்று
# பெண்ணியம்

Sunday, January 16, 2011

பேரரசன் பார்த்திருக்கிறான்


முன்போர் நாளில்
தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று
யாரோ பெண்ணொருத்தி
நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால்

அரசனின் குற்றமொன்று
தவறொன்று
வஞ்சகமொன்று
காரணம் எதுவாயினும்
எரிந்ததாம் முழு நகரமும்

பேரரசன்
பார்த்திருக்கிறான்

அதோ..அதோ
குற்றம்
தவறு
அத்தோடு
தவறிழைத்தல்
எல்லா இடங்களிலும்

கவனமாயிருங்கள் கவனமாயிருங்கள்

யாரேனும்
இனித் தாங்கவே முடியாத கட்டத்தில்
திரும்பவும்
நிலத்திலடிக்கக் கூடும் சிலம்பொன்றினை

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# மறுபாதி மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்
# உயிர்மை
# தடாகம்
# பெண்ணியம் 
# திண்ணை