Monday, February 22, 2010

நடுநிலைவாதியின் கொள்கைகள்


               ஓர் தினம் இருவரிடையே சண்டை மூண்டது. ஒருவன் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து, மற்றவனின் உடலிலிருந்து இறைச்சியை வெட்டியெடுக்க மல்லுக்கட்டினான். மற்றவனோ தனது உடலிலிருக்கும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினான்.

             இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர். இறைச்சி வெட்டுபவனின் பக்கமும் அவனது சகாக்கள் சிலரிருந்தனர்.

             இந்த இருபுறமும் சாராமல் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடுநிலைவாதியும் அங்கிருந்தார்.

' ஒரு வார்த்தையாலாவது உதவாமல் நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதேனோ?' என ஒரு பக்கத்தைச் சார்ந்திருந்தவன் அவரிடம் கேட்டான்.

' நான் இந்த இரண்டு பக்கங்களுக்கும் இல்லை' என பதில் கூறினார் அவர்.

' பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் செய்வது, அநீதியின் பக்கம் சார்வதுதான்' அவன் சொன்னான்.

' ஏதாவதொன்றில் கலந்துகொள்ளாமல், எதுவும் செய்யாமல் இருக்கும்போது ஒரு பக்கம் சார்ந்திருப்பதென்று சொல்வதெப்படி?'

' அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன் பக்கம் சார்வதுதான்'

' இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து, இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க விரும்புகிறேன்' எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம் இவ்வாறு கேட்டார்.

' உங்கள் தேவை என்ன?'

' எனக்குப் புதிய தேவைகள் எதுவுமில்லை. எனது உடலின் சதைகளை இந்த இறைச்சி வெட்டுபவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதன்றி'

' நல்லது. உங்கள் வேண்டுகோள் என்ன?' என்று இறைச்சி வெட்டுபவனிடமும் கேட்டார்.

' எனக்கு இவனின் உடலிலிருந்து சதை வேண்டும்' என உறுதியாகச் சொன்னான்.

' ஆமாம். உங்கள் இருவரினதுமே எதிர்பார்ப்புகள் ஈடேறுவதுதான் நடுநிலைமையானது!' நடுநிலைமைவாதி சொன்னதும்,

' நீங்கள் மிக மிகச் சரி!' எனக் கூறிய இறைச்சி வெட்டுபவன், ' இவனின் சதையை வெட்டிக்கொள்வது நடுநிலையானதென மத்தியஸ்தரே கூறி விட்டார்' என மேலும் உற்சாகத்தோடு சதையை வெட்டியெடுக்க முற்பட்டான்.

மூலம் - எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.


நன்றி - உயிர்மை

Monday, February 15, 2010

அப்பாவும் பனியும்

அப்பாவும் பனியும்
(வாழ்வில் முதல்முறையாக பனியைக் கண்டது அப்பாவின் பிறந்த தினத்தன்றே)

அப்பா சொல்லித் தந்த கதையொன்றில்
பனி உறைந்திருந்தது

செந்நிறப் படைவீரனொருவன்
பனியின் மீது தவழ்ந்தவாறு சென்றான்
துப்பாக்கிச்சன்னம் பட்ட காலொன்றினால்
வெண் பனிக்கட்டிகளின் மீது
செந்நிற வழித்தடம் உண்டானது
வேதனை வழிகி்ன்ற
அப்பாவின் குரலுக்கு
சிறுவன் என்றாலும் என் மனது நொந்தது

பனி போர்த்திய சமதரையொன்றில்
அவருடன் பனியில் விளையாடிக்கொண்டிருந்த இடைவேளையில்
வேலை நிறுத்தக்காரரான எனது அப்பா
சைபீரியாவுக்கு அனுப்பிய கடிதம் தபாலில் கிடைத்தது
இறுக மூடப்பட்டிருந்த இடது கைக்குத் துணையாக
சிறிய கரமொன்று இணைந்திருந்தது

ஸ்டெப்ஸ் புல்வெளியை விடவும் நீளமான பசி
பனியைப் போல மனதில் இறுகிப்போனது
சிறிய மனதால் தாங்கவே முடியாமற் போகும்
கணமொன்றும் இருந்தது
அப்பாவின் பனி உறைந்த விழிகளின் தைரியத்தில்
பனிப் பந்தொன்றுக்கு உதை கிடைத்தது

ஆனாலும் நாம் பனியிடையே தரித்தோம்
எமது முழங்கால்கள் வரை கால்கள் புதைந்தன

வெந்நீர்ப் பானையிலிருந்து எழுந்து வந்த ஆவியில்
சீனியில்லாத தேனீர்ச் சாயத்தின் சுவை நிரம்பியிருந்தது
தேனீரின் நறுமணத்தில் திறபட்ட
சாயமற்ற விழிகள் இரண்டுக்கு
கவிதை எழுதும் வழித்தடங்கள் தென்பட்டன

*இர்த்து ஊடாக நெடுந் தூரம் நடந்த
காரிருளால் முடிச்சுகளும் கேசத்தின் அலைகளும் நிறைந்த
அந்தத் தலையில் பனி இதழ்கள் உறைந்தன
ஆனாலும் அந்தக் குரலின் கூர்மை பிரகாசித்தது
அந்தக் குரலில் கதையொன்று கேட்டது

கதையில் பனி உறைந்திருந்தது

மூலம் : மஞ்சுள வெடிவர்தன (சிங்களமொழி மூலம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான், 

                     இலங்கை

* இர்த்து - பிரேசில் அருகே உள்ள ஓரிடம்

நன்றி 
# உன்னதம் இதழ் - டிசம்பர், 2009

Sunday, February 7, 2010

சத்தியத்தின் தாமரை பூத்துவருவதை திஸ்ஸ கண்டாரா?

உண்மையைக் கொண்டுபோய் அடகுவைத்து
உரிமையை இரும்புச் சங்கிலி கொண்டு
சிறையிலிட்ட அந் நாளில்
திஸ்ஸ கண்டாரா
அதிகாரத்தால் உன்மத்தம் பிடித்தவோர் அரசனை

உண்மையை திரையிட்டு மூடி
புகழ் பெற்றுக்கொள்ளும் கொலைகாரர்களை
மனசாட்சிக்கு
இலக்கு வைக்கும் துறவிகளை
திஸ்ஸ கண்டாரா

உண்மையான உரிமைக்கும்
எழுதிய எழுத்துக்களுக்கும்
ஷெல்குண்டு வைத்தாலும்
திஸ்ஸ கண்டாரா
சத்தியத்தின் தாமரை
பூத்து வருவதை

மூலம் - அரவிந்த (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

                     இலங்கை

* திஸ்ஸ-ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்- தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியதால் இலங்கை அரசால் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பிணையில்  (13-01-2010) விடுவிக்கப்பட்டுள்ளார்.

நன்றி
# சொல்வனம் இதழ் - 17 (22.01.2010)

Monday, February 1, 2010

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

இன்றொரு கவிதை எழுதவேண்டும்
சொல்லும்பொழுதே தாளொன்று
பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று
உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும்

விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு

செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில்
எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின்
கவிதைத் தலைப்புகளே இங்கு
சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை

கரும்பலகையில் வெண்கட்டி போல
தேய்ந்துபோகும் வாழ்விடையே
கவிதைகள் கைவிட்டு நழுவி
எனக்கே மிதிபட்டு அலறும்

சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன்
இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன்
கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள்
எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன்

மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
                    இலங்கை


நன்றி 
# சொல்வனம் இதழ் 14, 11-12-2009
# நவீன விருட்சம்