Friday, January 22, 2010

முதற்காதல்நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே
இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன்
கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும்
பாதங்களை முத்தமிட்ட பாதையில்
அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப்
பின்நடை போடுகிறேன்

கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில்
இருண்ட கறைகள் நிறைந்த
காலத்தின் மாபெரிய புத்தகத்தில்
ஒரேயொரு பக்கமே உள்ளது
அதில் ஒரேயொரு ஓவியம் உள்ளது
அநேக வர்ணங்கள் நிரம்பிய
வேறெந்த ஓவியத்திலும்
படிந்திராத வர்ணங்கள் நிரம்பிய

காலத்தின் ரேகைகளின் மீது
இன்னும் பளிச்சிட்டவாறு
இறந்த காலத்துக்குச் சொந்தமான
நாளொன்று உள்ளது அப்புத்தகத்தில்
பிரபஞ்சத்தின் அனேக நிறங்களை
ஒன்றாகக் கலந்து வரைந்த
வாழ்வின் அழகான ஓவியமொன்று
உள்ளது அதில்

பற்பல நிறங்களைக் கலந்து
இன்னும் வரைகின்ற
வாழ்வுப் புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாய் மூடிச்செல்கின்ற
ஒருபோதும் மீளப் பொருந்திவந்து
வரையப்பட முடியாத அது
புதிய தோற்றம் உள்ள
ஒரேயொரு ஓவியமே
இன்றும்

மூலம்: குமுதுனீ வித்யாலங்கார (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்

Wednesday, January 20, 2010

மரித்த உயிரை மீளப்பெறும் முறை    'செத்துப் போன உயிரொன்றை மீண்டும் பெற்றுத் தரக் கூடிய மருந்து என்ன?'

என ஒரு நாள், கொல்லனொருவன் வைத்தியரைக் கேட்டான். வைத்தியர் புன்னகைத்து,

    'செத்துப் போன உயிரை மீண்டும் பெற்றுத் தரக்கூடிய எந்தவொரு மருந்தும் இந்த உலகத்தில் இல்லை' என பதிலளித்தார்.

    ' அப்படியென்றால், செத்துப் போன உயிரை மீட்டுத் தர முடியுமான ஒருவன் உலகத்தில் இருக்கிறானா?'

    ' அப்படியொருவன் இருப்பானென்றும் நான் நினைக்கவில்லை'

    ' அப்படிப்பட்ட ஒருவனை எனக்குத் தெரியும்'

    ' அவன் யார்?'

    ' கொல்லன்'

    ' எப்படி உன்னால் இறந்த உயிரை மீளக் கொடுக்க முடியும்?'

    ' உருக்குகளுக்கு உயிர் போனவிடத்து என்னால் உயிர் கொடுக்கமுடியும்'

    ' ஆமாம். அது சரி. நீ சொல்வது உருக்குகளைப் பற்றி. நான் மனிதர்களை நினைத்துப் பார்த்தேன்'

    ' மனிதர்களுக்கும் அவ்வாறேதான்'

மீண்டும் புன்னகைத்தார் வைத்தியர்.

    ' உருக்குகளுக்கு நடப்பவையெல்லாம் மனிதர்களுக்கு நடக்குமென்றால், உயிர் போவதல்லாமல் உயிர் கிடைக்குமா?'

    ' அது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். அதாவது உருக்குகளுக்கு நடக்கும் அனைத்து அழுத்தங்களும் எனக்கும் நிகழ்வதோடு, எனது கை,கால்களும் உருக்குகளைப் போலவே பலம் வாய்ந்தது என்பது தெரியும்'

    'அவ்வாறெனில், அங்கு நடப்பவற்றைப் பார்வையிட நான் விரும்புகிறேன்'

    ' சரி. எனது பட்டறைக்கு வாருங்கள்'

    பிறகொரு நாள் கொல்லன் தனது பட்டறையில் இரும்பினை நெருப்பிலிட்டு உருக்கிக் கொண்டிருக்கும்பொழுது, அவ் வைத்தியர் அங்கு வந்தார். கொல்லன், ஆயுதங்களை நெருப்பிலிட்டு, காய்ச்சுவதைப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர், தன்னையறியாமல் கேட்டார்.

    ' நெருப்பினால் ஆயுதங்களுக்கு உயிர் கிடைப்பதென்பது ஆச்சரியம் தருகிறது. இல்லையா?'

அதற்கு எந்தப் பதிலும் அளிக்காத கொல்லன், அவ் ஆயுதங்களைத் தட்டுதல், தகர்த்தல் போன்றவற்றைச் செய்தான்.

    ' ஆயுதங்களுக்கு உயிர் கொடுப்பது நெருப்பு இல்லையா?' என வைத்தியர் மீண்டும் கேட்டார்.

    ' இல்லை' எனச் சொன்ன கொல்லன், நெருப்பைப் போலச் சிவந்த, உருகிய ஆயுதங்களை எடுத்து நீரில் அமிழ்த்தினான்.

    ' அருமை. எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது. உருக்குகளுக்கு உயிர் கிடைப்பது நீரில்தானே?'

    'இல்லை. இல்லை' எனச் சொன்ன கொல்லன், இவ்வாறு தொடர்ந்தான்.

    ' உருக்குக்கு உயிர் கிடைப்பது, தீயினால் உருக்கப்படும்பொழுது, குளிரடையச் செய்ய வேண்டிய நேரத்தில், குளிரடையும் பொழுது மட்டுமல்லாமல் தட்டுதல், தகர்த்தல் போன்ற எல்லாவற்றாலும்தான்'

    ' நீ சொல்வது சரி. மனிதர்களுக்கும் அவ்வாறேதான்' என வைத்தியர் அக் கருத்தோடு ஏகமனதாக ஒன்றுபட்டார்.

மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

                     இலங்கை.


நன்றி - உயிர்மை

Friday, January 15, 2010

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)தின்றுகொண்டு
தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
                    இலங்கை
நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்Wednesday, January 6, 2010

புத்தாண்டுக் கனவு (கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்)நிறைந்த கனவுகளின் பாரம் தாங்காது
மனப் பொதி ஒரேயடியாக வெடித்து
அதிர்ஷ்டத்தின் குறியுடனான ஒரு கனவு
கவிதையொன்றுக்கு மழையெனப் பெய்யும்

நாசிக்கடியில் குறு மீசைக்குப் பதிலாக
மீசை வளர்த்துக் கொண்ட ஹிட்லர்
*நீலப் படைகளுக்கு இடையிலும்
*சிவப்புப் படைகளுக்கு இடையிலும்
ஒரே நேரத்தில் நடமாடுவார்

ஒரே இடத்தில் சுழலும் ரூபாய் நாணயத்தில்
தலைப் பக்கத்திலும்
பூ பக்கத்திலும்
மீசை முறுக்கும் ஹிட்லர்
குப்புறக் கவிழ்ந்து
கனவுக்கு மெலிதாகச் சிரிப்பார்

*நீல வர்ணத்தை வானமும் வெறுக்கும்
**பச்சை வர்ணத்தை மரம்,கொடிகள் வெறுக்கும்
*சிவப்பு வர்ணத்தை குருதி வெறுக்கும்
கனவுக்கு ஹிட்லரே சிரிப்பார்

புது வருடத்துக்கு
புதிதாகக் காணும் கனவு
எத்தனை மென்மையானது?

பழைய கனவுக்கு உரித்தானவன் நான்
எவ்வளவு முரடானவன் ?

மூலம் - மஞ்சுள வெடிவர்த்தன (சிங்களமொழி மூலம்) 20091230
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


*நீலமும், சிவப்பும் - இலங்கையில் எதிர்க்கட்சிகளாக இருந்து ஒன்றாகிய தற்போதைய ஆளுங்கட்சியின் நிறங்கள்
** பச்சை - இலங்கையில் எதிர்க்கட்சியின் நிறம்.

நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்