Thursday, July 1, 2010

மரத்தின் கீழ் கைவிடப்பட்ட அம்மாவிடமிருந்து

என்னிடம் கூறப்பட்டதைப்போலவே - அதிகாலையில்
மகனின் வாகனத்திலேறி அதிக தொலைவு பயணித்து
நகரமொன்றின் தெருவோர மரநிழலில் வாகனத்தை நிறுத்தியவேளை
மூச்சுத் திணறியபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை நான்

நன்றாக நினைவுள்ளது இதே மரம்தான் மகனே
உன்னைத் தூக்கிக்கொண்டு பிரயாணக் களைப்பைப் போக்கவென
நின்றேனிங்கு முன்பொரு இரவில் - அதிசயம்தான்
மீண்டும் அந்த இடத்துக்கே எனை அழைத்து வந்திருப்பது

உனைப் பெற்றெடுத்த நாள்முதலாய்
இணையற்ற அன்பைப் பொழிந்தவளிடம்
போய்வருகிறேன் என்றேனும் பகராமல் நீ செல்கையில்
உள்ளம் பொங்கி வழிகிறது விழிகளினுடாக

கைக்குள் திணித்துச் சென்ற ஆயிரம் ரூபாய் நோட்டு பெரும் சுமையாகிட
உள்ளத்தின் உறுதியைக் கண்களில் திரட்டுகிறேன்
பதற்றமேதுமின்றி வாகனத்தை ஓட்டிக்கொண்டு
பத்திரமாக வீடுபோய்ச் சேர்ந்திடுவாய் என் மகனே

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
        இலங்கை


நன்றி
# சொல்வனம் இதழ் - 27
# உயிர்மை
# நவீன விருட்சம்
# கூடு

10 comments:

கலையரசி said...

கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்.

மகாபிரபு said...

இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்று

விராடன் said...

கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.

நம்பி said...

பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி said...

சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.

M.Rishan Shareef said...

அன்பின் கலையரசி,

//கைவிடப் பட்ட போதும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று தவிக்கிறது தாயின் உள்ளம். உலகில் தலையாயதாய் தாய்மை போற்றப்படுவதற்கு இது தான் காரணம்//

நிச்சயமாக சகோதரி.
கருத்துக்கு நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் மகாபிரபு,

//இப்படியும் மகன்கள் இருப்பார்களா? கவிதை நன்று//

எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள். :-(
கருத்துக்கு நன்றி நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் விராடன்,

//கவிதையின் முடிவு பல உண்மைகளைச் சொல்லிநின்றாலும் ஆரம்பம் ஏதோ விளங்காத பானியில் சொல்லப்பட்டிருக்கிறது.//

அதிகாலையில் வெளியே கூட்டிப் போகிறேன் என அம்மாவிடம் கூறி, அதன்படியே கூட்டிப் போய் ஒரு மரத்தடியில் கையில் ஆயிரம் ரூபாவைக் கொடுத்து விட்டுவருகிறான் மகன்.

அந்த மரத்தின் நிழல், ஒரு பஸ் தரிப்பிடமாகவும் இருக்கலாம். ஆனால் முதியவள் தனித்துப் போகிறாள். அந்த நிலையிலும் மகனுக்காகப் பிரார்த்திக்கிறாள்.

கருத்துக்கு நன்றி நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் நம்பி,

//பெத்த மனம் பித்து பிள்ளை மனம்...... என்ற மாதிரியான உணர்வுகளை ஊட்டுகின்ற வரிகள்...பகிர்வுக்கு நன்றி!//

ஆமாம் நண்பரே.
கருத்துக்கு நன்றி.

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//சோகத்துக்கெனவே புணையப்பட்டக் கவிதை. எதார்த்தம் குறைவு.//

இல்லை நண்பரே. நிதர்சன வாழ்க்கையில் தினமும் இது போல நடந்துகொண்டேயிருக்கிறது. கருத்துக்கு நன்றி நண்பரே.