Thursday, July 15, 2010

பிறக்காத கவிதை

("வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட கர்ப்பிணித்தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்ததால்")

கண்களைக் கூட திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கர்ப்பத்துள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள்க் கொடியின் மேலாக
எச்சில்படுத்தப்படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தளும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரையொத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலால் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்.
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்.
வெறிபிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத்துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை.
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்தச் சுவை வேட்டைகளை.
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்.
வன்னி அதிக தூரம் எனக்கு. பொறுத்திருக்கிறேன்.
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டுசென்று
விரலைப் பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்

மூலம்: மஹேஷ் முணசிங்ஹ 2009 03 (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்


நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010

2 comments:

ராஜவம்சம் said...

மனசு கனத்து விட்டது.

Siva Ranjan said...

:(