Monday, November 30, 2009

எங்களது ராஜாக்கள் அல்ல



    ஒரு தேசத்தில் மக்கள் நோய்களால் துன்புற்றுக் கொண்டிருந்தார்கள். கொள்ளை நோயைப் போன்ற கடுமையான நோய்கள் கூட பரவும் அபாயம் இருந்தது. குடிமக்கள் நோயால் இறந்துகொண்டே இருப்பதால் உடனடியாக ஏதாவது தீர்வொன்றினைக் கண்டறியும்படி அந் நாட்டு மக்கள் அரசனைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

    அரசன், தனது ராஜ சபையைக் கூட்டி விசாரித்தபோது 'சட்டதிட்டங்கள் போதாது' என்பது மந்திரி, பிரதானிகளின் கருத்தாக இருந்தது. அதனால் ஒரே இரவில் புதுத் திட்டமொன்று கொண்டு வரப்பட்டது.

    ' நோய்க்குக் காரணமான அனைத்தும் அழிக்கப்படவேண்டும்' என்பதே அந்தத் திட்டமாக இருந்தது.

    'இனி நோய்ப்பயம் நீங்கிவிடும்' என மக்கள் எண்ணினாலும், நோய் மேலும் மேலும் பரவிக் கொண்டே இருந்தது. இருந்த மருந்துகளையெல்லாம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். போலி மருந்துகள் நாடு முழுவதும் விற்கப்பட்டன. போலி வைத்தியர்களும் நிறைய உருவாகியிருந்தனர். மந்திரி, பிரதானிகளுக்கு மருந்துக் கொள்ளையர்களிடமிருந்தும், போலி வைத்தியர்களிடமிருந்தும் தீர்வை, கப்பமென நிறையக் கிடைத்தன.

    சாவுகள் முடிவின்றித் தொடர்ந்ததால் பொதுமக்கள் அரண்மனைக்கு முன் கூடி கோஷங்களை எழுப்பினர்.
   
    ' நோய்க் காரணிகள் எதுவும் அழிக்கப்படவில்லை' எனக் கூச்சலிட்டனர்.

    'நோய்க் காரணிகள் இன்னும் கொஞ்சம்தான் எஞ்சியிருக்கின்றன. அது மட்டுமன்றி, இது போன்ற வியாதிகள் மற்ற நாடுகளிலும்தான் இருக்கின்றன. உங்களில் எவனுக்காவது அதைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்குமென்றால் முன்னால் வரலாம்' என அரசன் கூறினான்.

    அப்பொழுது ஒரு ஆண்மகன் முன்னால் வந்தான்.

    ' இந்த வியாதிகளின் விஷக் கிருமிகள் அத்தனையையும் உன்னால் அழிக்க முடியுமா?' என அரசன் அவனிடம் கேட்டான்.

    'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்' என்றான் அவன்.

    குடிமக்களும் அதையே ஏகோபித்தனர்.

    'நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்கள் யார்?' இது அரசனின் கேள்வியாக இருந்தது.

    'அவர்கள் வேறு யாருமல்ல. அரசன், மந்திரி பிரதானிகள்தான்' அவன் பதிலளித்தான்.

    கடுங்கோபங்கொண்ட அரசன்,

    'இவன் ஒரு ராஜதுரோகி. உடனே கொல்ல ஏற்பாடு செய்யுங்கள்' என அரச பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.

    'ராஜதுரோகியான பின்பு, இம் மரணதண்டனையை இல்லாமலாக்கச் செய்யும்படியான காரணங்கள் ஏதாவது உன்னிடம் இருக்கிறதா?' அரசன் அவனிடம் கேள்வியெழுப்பினான்.

    அவன் இவ்வாறு பதிலளித்தான்.

    ' உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.

மூலம் (சிங்கள மொழியில்) - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா 
(Mawatha anka 42 - 1987 April-June)
 

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி 
# உயிர்மை


11 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷான்,
கதை முன்னரே எழுதப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்திற்கும் அப்படியே பொருந்துகிறது. எல்லா காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் இப்படிதான் இருப்பார்கள் போலிருக்கின்றது. உங்களுடைய மொழிப் பெயர்ப்பும் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் நண்பா.

வி.சு. said...

ஒரு நாட்டு இலக்கியங்கள், சொல்லப் படும் கதைகள் அந்நாட்டு நிலையை
தெளிவாகச் சொல்லும். தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது இந்நாட்டில்
எத்தகைய அமைதி நிலவியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.

ஃபஹீமாஜஹான் said...

வாழ்த்துக்கள் ரிஷான்.
'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்'

இந்த வரிகள் எமது நாட்டின் இன்றைய அரசியலையும் சேர்த்தே பேசுகிறது.
காலத்துக்கேற்ற கதையொன்றை மொழிபெயர்த்துள்ளீர்கள். மொழிபெயர்ப்புக்கள் எல்லா மொழிகளுக்கும் விரிவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.நீங்களும் சிறப்பான மொழிபெயர்ப்புக்களை இத்தளத்தினூடாகக் கொண்டுவருவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'எங்களது ராஜாக்கள் அல்ல' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st December 2009 01:56:03 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/146286

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

பூங்குழலி said...

//உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.//

சரி இதன் பின்னால் என்ன நடந்தது ?
கதை முடியலையே அதான் ....

விஜி said...

ரிஷான்,
இப்படியான கருத்தெல்லாம் சிங்களத்தில் வருதோ?!!

நல்லாத்தான் இருக்கு கதை ஆனால் இந்த ராஜாவைப்படிக்கும் போது எனக்கு கருணாநிதியின் முகம் தான் நினைப்பில் வந்தது அதைத்தடை செய்யமுடியவில்லை:)

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//வாழ்த்துக்கள் ரிஷான்.
'ஆம். முதலில் உங்கள் சட்டதிட்டத்தின்படி நோய்க் காரணிகள் - அதாவது நோய்கள் உருவாகும் சூழலும், நோய்க் கிருமிகளை பாதுகாப்பவர்களும் அழிக்கப்படவேண்டும்'

இந்த வரிகள் எமது நாட்டின் இன்றைய அரசியலையும் சேர்த்தே பேசுகிறது.
காலத்துக்கேற்ற கதையொன்றை மொழிபெயர்த்துள்ளீர்கள். மொழிபெயர்ப்புக்கள் எல்லா மொழிகளுக்கும் விரிவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.நீங்களும் சிறப்பான மொழிபெயர்ப்புக்களை இத்தளத்தினூடாகக் கொண்டுவருவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.//

உங்கள் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியடைந்திட பெரிதும் முயற்சிக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல், எதிர்பார்ப்பு பூர்த்தியடைவது சாத்தியமில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வி.சு.


//ஒரு நாட்டு இலக்கியங்கள், சொல்லப் படும் கதைகள் அந்நாட்டு நிலையை
தெளிவாகச் சொல்லும். தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது இந்நாட்டில்
எத்தகைய அமைதி நிலவியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.//


நிச்சயமாக.
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உங்களது நாட்டில் எங்களுக்கென எஞ்சியிருப்பது மரணம் மட்டும்தான். நோய்க் கிருமிகளால் செத்துப் போவது அல்லது உங்களது கட்டளையின் பிரகாரம் கொல்லப்படுவது இவையிரண்டும் மட்டும்தான். இரண்டுமே உங்களது. ஆகவே நீங்களே இரண்டிலொன்றைத் தீர்மானிப்பது சிறந்தது'.

சரி இதன் பின்னால் என்ன நடந்தது ?
கதை முடியலையே அதான் ....//


தேசத்துக்கு நல்ல, நீதியான ஆட்சியாளர்கள் வரும்வரை இந்தக் கதை முடியாது சகோதரி. இது எல்லா தேசங்களுக்கும் பொருந்தும். அதுவரையில் இந்த ராஜாவை தத்தமது நாட்டு ராஜாக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, கதையின் முடிவைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டியதுதான்.

கருத்துக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//ரிஷான்,
இப்படியான கருத்தெல்லாம் சிங்களத்தில் வருதோ?!!

நல்லாத்தான் இருக்கு கதை ஆனால் இந்த ராஜாவைப்படிக்கும் போது எனக்கு கருணாநிதியின் முகம் தான் நினைப்பில் வந்தது அதைத்தடை செய்யமுடியவில்லை:)//


நீங்கள் தைரியசாலி. வெளிப்படையாகச் சொல்லிவிட்டீர்கள். :)

கருத்துக்கு நன்றி தோழி !