Sunday, January 16, 2011

பேரரசன் பார்த்திருக்கிறான்


முன்போர் நாளில்
தீப்பற்றி எரிந்ததாம் நகரொன்று
யாரோ பெண்ணொருத்தி
நிலத்தில் ஓங்கியடித்த சிலம்பொன்றினால்

அரசனின் குற்றமொன்று
தவறொன்று
வஞ்சகமொன்று
காரணம் எதுவாயினும்
எரிந்ததாம் முழு நகரமும்

பேரரசன்
பார்த்திருக்கிறான்

அதோ..அதோ
குற்றம்
தவறு
அத்தோடு
தவறிழைத்தல்
எல்லா இடங்களிலும்

கவனமாயிருங்கள் கவனமாயிருங்கள்

யாரேனும்
இனித் தாங்கவே முடியாத கட்டத்தில்
திரும்பவும்
நிலத்திலடிக்கக் கூடும் சிலம்பொன்றினை

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# மறுபாதி மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்
# உயிர்மை
# தடாகம்
# பெண்ணியம் 
# திண்ணை

Sunday, December 5, 2010

மரித்தோரின் திருநாளில்...

இன்று உயிர் நீத்தோர் தினம்
என்னை நினைத்து நீ
கதறும் அழுகையின் ஓசையும்
எனக்குக் கேட்டது

நீ அழுததைப் போலவே
வானம் அழுதது
மின்னல் வெட்டி வெட்டி
பூமியை அதிர வைத்து அதிர வைத்து
துயரம் சொன்னது
வெண்முத்துக் குடை பிடித்து
நான் நடந்து போனேன்

நாங்கள் நடந்துபோன சாலையில்
உன் பாதச்சுவடு தேடினேன்
இரயில் நிலையப் பாலத்தின்
ஈரப்பாசி படிந்த
படிக்கட்டுகளின் மேல்

திருவாணைக் கல்லிருக்கும்
ஒற்றையடிப்பாதையில் நடந்துசென்று
நான்...
எனது கல்லறையருகில்
முழந்தாளிட்டேன்
விடையளிக்கும் பூச்செண்டை வைத்தேன்

எனதே எனதான விழிநீர்த் துளி
எனது கல்லறையின் மீதே
வீழ்ந்து சிதறியது
குளிர் மழைத்துளி போல

'ஐயோ அவனிருந்திருந்தால்
இந்த உலகம் முழுதும்
என்னைப் பற்றி
காதலுடன் கவிதை எண்ணங்களை
விதைத்திருப்பான்
தாரகைத் துண்டுகளைப் போல'

நீ அழும் ஓசை
எதிரொலிக்கிறது
விம்மலுடன்

அன்பான மனைவியான
உன் துயரம்
வெகு தொலைவிலிருந்து கேட்கிறது
சோக கீதத்தின் தாளத்துடன்

மூலம் - ஜயந்த களுபஹன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை

நன்றி

# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# திண்ணை
# ஓவியர் ரவி

Monday, November 15, 2010

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு...

நானா?

ஓமோம்

இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்
கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு

ஐயோ ஓம்
எழுத்துக்களையும் வாசிக்க முடியும்
பாண் தேயிலை சீனி சுற்றித் தரும்
தாள் துண்டுகளை வாசித்தே
நாட்டுநடப்புகளும்
கொஞ்சமேனும் புரிகிறது
உபகாரப் பணம்பெறும் படிவங்கள்
கிராமசேவகர் தாளெல்லாம்
பூரணப்படுத்துவது நான்தான்

ஆங்கிலம்....?

இல்லை ஐயா,

இங்கு ஆசிரியர்கள் இல்லையே
முழுப் பள்ளிக்கூடத்துக்குமே
இருவர்தான் இருக்கிறார்கள்

அரச தேர்வோ?
ஐயோ
அது மிகக் கடினமாம்
ஆசிரியர்கள் இல்லையே

கற்பிக்கவில்லை எங்களுக்கு
விஞ்ஞானம்
கணிதம்
அத்தோடு மொழியையேனும்

சமயமா?

சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை
மட்டுமே தெரியும்

நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஐயோ இல்லை ஐயா...

வீண் கனவுகளெதற்கு?
எழுதுவினைஞர்
ஆசிரியர்
பதவிகளை வகிக்க
எண்ணிப் பார்க்கவும் முடியாது எம்மால்
குறைந்தது
அட்டெண்டண்ட் வேலையாவது எடுக்கமுடியாது
ஆறு பாடமாவது சித்தியடையாமல்

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
*கார்மண்டுக்காவது போக வேண்டும்
காமண்டிலிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும்
அனுப்புகிறார்களாமே
அப்படியாவது போக முடியுமென்றால்
கொஞ்சமாவது
தலை தூக்க இயலுமாகும்

பொய்க் கனவுகளெதற்கு?

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
கார்மண்டுக்காவது போகவேண்டும்

* கார்மண்ட் - ஆடை தயாரிப்பு நிலையம்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உயிர்மை
# திண்ணை
# ஊடறு
# தடாகம்