Tuesday, July 18, 2017

அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 03



   
         இருவரதும் ஜீவித காலத்துக்கும், எத் துயரம் வந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்தே இருப்போம் என உறுதி கொண்டு இணையும் பல தம்பதிகள், திருமணத்துக்குப் பிறகு வரும் சிறு, சிறு பூசல்களுக்கும் விவாகரத்து செய்து பிரிந்து செல்லும் மிக மோசமான மனப்பாங்கு அண்மைக்காலமாகப் பரவிவருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனங்களும், ஊடகங்களும் இப் பிரிவுகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.

            தாம் பெற்ற குழந்தைகளது எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொள்ளாது, தம்பதிகள் இருவரும், தமது நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு விலகிச் செல்லும் இப் போக்கு கிராமப்புறங்களை விட, நகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. என்றாலும், நகரங்களை விடவும் கிராமங்களில் இடம்பெறும் இவ்வாறான ஒன்றிரண்டு நிகழ்வுகள் கூட அக் கிராமங்களில் பெரிதாகப் பேசப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, தற்கொலை வரை கொண்டு சென்று விடுகின்றன.

            கதைப்பதற்கு எளிதாகத் தோன்றும் இவ் விடயம், சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, அவர்களது இடத்திலிருந்து பார்த்தால்தான் உண்மையான சிக்கல் புரியும். நாட்டில் திருமண மண்டபங்கள் பெருகிவருவதைப் போலவே, விவாகரத்து வக்கீல்களும் தினந்தோறும் பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.

            இனி, விவாகரத்து சம்பந்தப்பட்ட கவிதையொன்றைப் பார்ப்போம். சிங்கள மொழியில் இக் கவிதையை எழுதியிருப்பவர் பெண் கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி.

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு



கீழே
முற்புதர்கள், கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள்
நிறைந்திருக்கும் பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு



அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து



ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது



மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்தவாறு
அவளைக் கைவிட்டு
அவர்களெல்லோரும் சென்று விட்டாலும்


கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று



இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
முட்புதர்களை சீராக  வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊருக்கு


நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியவாறு

****

            கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி ஒரு வழக்கறிஞர். இலங்கையில் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்து வரும் பெண் சட்டத்தரணி இவர். தமிழை எழுத, வாசிக்கக் கற்றிருக்கிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு சிறந்த இளைஞர் இலக்கியத்துக்கான விருதினை வென்றது. இந்தக் கவிதையும் அத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒன்றாகும்.

            ஒரு தம்பதியினது விவாகரத்து எனப்படுவது, அதனைக் கேள்விப்படுபவர்களுக்கு, ஒரு செய்தியாக மாத்திரமே இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், சமூகத்தில் அதன் பிறகு எதிர்கொள்ள நேரும் இன்னல்கள் அனேகமானவை. தம்பதிகளுக்கிடையேயான சிறிய பிரச்சினைகளுக்குக் கூட, விவாகரத்து எனும் மலை மீது ஏற்றிவிட பலரும் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்றி விட்டுக் கைவிட்ட பின்பு, அம் மலை மீதிருந்து அவர்களால் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினமானதாக இருக்கும்.  இக் கவிதை உணர்த்திச் செல்வது, ஒரு சமூகத்துக்கு மாத்திரமேயான துயரத்தையல்ல.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்


 

Wednesday, July 5, 2017

அவர்கள் நம் அயல் மனிதர்கள் - 02



     இன்று நாம் கடந்து வரும் ஒவ்வொரு தெருவும் செப்பனிடப்பட்டு, பயணங்களுக்கு இலகுவானதாக சீராக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், அவற்றுக்கு செலவான நமது அரசாங்கத்தின் பணத்தைக் குறித்தும் விவாதித்துக் கொள்கிறோம். ஆனால் இவற்றைத் தாண்டி, அப் பாதைகளைச் செப்பனிடப் பயன்பட்ட மனித உழைப்பை மிக எளிதாக மறந்து விடுகிறோம் அல்லது கவனத்தில் கொள்ள மறுத்து விடுகிறோம்.

     கொதித்து, உருகி வழியும் தார்வாளியை சுமந்தபடி, கருங்கல் பரப்பிய பாதையில் முழங்கால் வரையில் பொலிதீன் பைகளைக் கட்டியவாறு, சொற்பக் கூலிக்காகக் கடுமையாகப் பாடுபடும் ஒவ்வொரு கூலித் தொழிலாளிக்கும் ஒரு குடும்பமிருக்கிறது. அவ்வாறான ஒரு சூழலிருந்து கலை, இலக்கியத் துறைக்கு வந்து சாதித்துள்ளவர் சிங்கள மொழிக் கவிஞர், எழுத்தாளர் மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல.

     அரச சாகித்திய, இலக்கிய விருதுகளை கவிதை மற்றும் நாவல்களுக்காக வென்றுள்ள இவர், விவசாயத்தையும், கூலித் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்ட கிராமத்தில், உயர்தரம் வரை கற்றுவிட்டு, தொழில் தேடி தலைநகரத்துக்கு வந்தவர். பின்னர், தொலைக்காட்சித் தொடர்நாடகங்களில் மிகவும் கீழ்மட்டத்திலிருந்து தனது பங்களிப்பை வழங்கி, கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறி, சிறந்த உதவி இயக்குனருக்கான அரச விருதினையும் வென்றுள்ளார்.

     வியட்நாமில் நடைபெற்ற தெற்காசிய கவிஞர்கள் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டு சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தான் வறுமையில் வாடிய சிறுபராயத்தில், பாடசாலைக் காலங்களில் இலக்கியத்தினால், கவிதைகளினால் இந்தளவு கௌரவிக்கப்படுவோமென எதிர்பார்த்தும் இருக்கமாட்டார் இல்லையா? அந்த வகையில், இக் காலத்தில் வறுமையோடு எழுதி வரும் பலரும் இவரை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

     இனி, இவரது கவிதையொன்றைப் பார்ப்போம். நகர மைதானங்களிலும், மேடை இசைக் கச்சேரிகளிலும் ஏன் திரைப்படங்களிலும், பாடல்களுக்கு நாயகர், நாயகி, பாடகரோடு பாதி உடையில் நடனமாடும் இளம்பெண்களைப் பார்க்கிறோம். அவர்களது பூச்சு தடவிய முகங்களை, அழகான உடல்களை, அங்க அசைவுகளை ரசிக்கும் எத்தனை கண்கள் அவர்களது சிரமமான வாழ்வியலைக் குறித்துக் கவனிக்க முற்பட்டிருக்கின்றன? 


ஓர் மடல்

*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்


விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவுமுழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்


உடலழகு தொலைந்துவிடுமென்று
இரவுணவையும் தருகிறார்களில்லை
இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்
அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்


பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்
ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும் மேலதிகமாக
ஆனாலும்
மூட்டுக்களிலும் முதுகெலும்பிலும் வலியெடுக்கும்


புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்
கவரப்பட்ட செல்வந்தனொருவன்
பரிசுகள் தந்திட அழைக்கிறான்
நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்


விழா நாட்களில் எனக்கு எனது
அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன
உண்மைதான் சில விழிகளில்
பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்


ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க
நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது
ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்
வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்


அம்மாவின் மருந்துகளையும்
அப்பாவின் திதிக்கான பொருட்களையும்
வாங்கத் தேவையான பணத்தை இதோஅம்மா
இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்


சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து
எப்பொழுதேனும் மகள் வருவாளென
வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி
அம்மாபார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது

** நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி - கிராமிய ஆடல், பாடல்வகைகள்

     பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக் கவிதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடனத் திறமையை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண், தனது தாய்க்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. நகரங்களின் தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்

 

Wednesday, June 7, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 01



     இலங்கையில் தினந்தோறும் அவர்களைக் காண்கிறோம். பேரூந்துகளில், அலுவலகங்களில், வியாபார ஸ்தலங்களில், சந்தைத் தெருக்களில் எல்லா இடங்களிலும், அவர்களும், அவர்களது மொழியும் வியாபித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

     இலங்கையின் மூன்று தசாப்த காலப் போரின் வடுக்களாக, அவர்களையும், அவர்களது மொழியையும் கொடூர எதிரிகளாக சித்தரித்துக் காட்டியுள்ளன சர்வதேச ஊடகங்கள். அதன் பலனாக, இன்றும் கூட தமிழ் வாசகர்களிடத்தில் பரிச்சயமாக உள்ள ரஷ்ய இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்களுக்கு மத்தியில், புறக்கணிக்கப்பட்டு, தொலைவாகிப் போயுள்ள மொழியாக சிங்கள மொழி மாறி விட்டிருக்கிறது.

     சிங்கள மொழி, உலகில் இலங்கை எனும் நாட்டில் மாத்திரமே பாவனையிலுள்ள ஒரு பிரத்தியேகமான மொழி என்பதில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவ்வாறே சிங்கள மொழி இலக்கியங்களும், நம் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றன. நம் மூதாதையர்கள் கூறி மகிழ்ந்த எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளை இன்னும் பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா?

     இந்தப் பத்தித் தொடர் மூலமாக, நம் பழங்கால வாழ்வியலை, நிகழ்கால ஜீவிதத்தை சிங்களக் கவிதைகளினூடாக உணரத் தலைப்படும் அதே வேளை, தமிழ் வாசகர்கள் பெரிதும் அறிந்திராத சிங்கள மொழிக் கவிஞர்களை அறியச் செய்யும் முயற்சியாகவும் அமைகிறது.

எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் கவிஞரும், எழுத்தாளருமான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி, நவீன தலைமுறை சிங்களக் கவிஞர்களில், படைப்புக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரியையாக இருப்பதால், சமகால சிறுவர்கள், மாணவர்களின் உளப்பாங்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவரது கவிதைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தி, வளர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.

சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் இவர், இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 சிறுவர் இலக்கியப் பிரதிகள், 3 சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல் என பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதையொன்றைக் கீழே தருகிறேன்.

உதிக்காதே சூரியனே



வேண்டாம் சூரியனே நீ உதிக்க
எனக்குப் பிடித்திருக்கிறது
இப்படியே சுருண்டு படுத்திருக்க
உதிக்கவே இல்லையாயின் சூரியன்
உலகம் எவ்வளவு அழகானதாயிருக்கும்

சூரியன் உதித்ததுமே
ஓடத் தொடங்குவாள் எனது தாய்
என்னையும் இழுத்தபடி.

கழிவறைக்குப் போனாலும் அம்மா கத்துவாள்
'சீக்கிரம் வா… தாமதமாகுது'
வழிநெடுக காலையுணவைப் பாதி தின்றவாறு
சீருடையைச் சரி செய்தபடி ஓடிப் போய் நின்றால்
தடியை நீட்டியவாறு அதிபர் கேட்கிறார்
'விரைவாக வரத் தெரியாதா… தாமதிக்கிறாய்'

தாமதமானவர்களின் வரிசையில் காத்திருந்து
வகுப்பறைக்குப் போனால்
ஆசிரியை உத்தரவிடுகிறாள்
'வீட்டுப் பாடம் செய்யவில்லைதானே
முழங்காலில் நில் வெளியே போய்'

பள்ளிக்கூடம் விட்டு
பிரத்தியேக வகுப்புக்கும் சென்றுவிட்டு
வீட்டுக்கு வந்தால்
அப்பாவின் கட்டளை
'விளையாடப் போகக் கூடாது,
தொலைக்காட்சி பார்க்கக் கூடாது,
புத்தகத்தைக் கையிலெடு'

உதிக்காதே சூரியனே
எனக்கு சுருண்டு படுத்திருக்க
இரவு எவ்வளவு அழகானது
  ***

ஒரு சிறுபராயத்துப் பிள்ளையின் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ள இக் கவிதை, தற்கால சமூகத்தில், அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் மிகவும் பொருந்துகிறது அல்லவா? குழந்தைகளுக்கான எல்லாச் சட்டங்களும் பெற்றவர்களாலேயே இயற்றப்படுகின்றன. குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுவதிலேயே அவர்களது எதிர்காலத்தின் வெற்றி அமைந்திருக்கிறது என்பதை மறந்து விடுபவர்களுக்கு, இவ்வாறான கவிதைகளே அதை நினைவுபடுத்துகின்றன.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்