Thursday, August 14, 2014

மில்லியன் மக்கள் பேரணிக் கவிதை

குறிப்பு - அமெரிக்காவில் வசித்த பத்து இலட்சத்துக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் வாஷிங்டன் டீ.சி.யில் ஒன்று கூடி தமது உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.16 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும் பார்க்க, விசாலமானதாக அமைந்திருந்தது. 


இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

தொலைதூர சமுத்திரக் கரைதனில்
மரித்துப் போன நீல ஆகாயத்தின் கீழ்
நீங்கள் எட்ட இயலாத் தொலைவில்
கூந்தலால் பிடிக்கப்பட்டு நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்
உங்கள் கைகள் பிணைக்கப்பட்டிருந்தன
உங்கள் வாய்கள் கட்டப்பட்டிருந்தன
குறைந்தபட்சம் உங்களால்
எனது பெயர் கூறி அழைக்கக் கூட
இடமளிக்கப்படவில்லை
எந்தவொரு ஆதரவுமற்ற நீங்களும்
என்னைப் போலவே
ஆனால் துரதிர்ஷ்டவசமாக
வரலாறு முழுவதும் நீங்கள்
அவமானம் எனும் அடையாளத்தைச் சுமந்தபடி

மீண்டும் சொல்கிறேன்
இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

ஆனாலும் இன்று
புராதன ஆத்மாக்களின் ஒலி எழுகிறது
நூற்றாண்டுகளையும் வருடங்களையும் கடந்து
சமுத்திரங்களையும் கடல்களையும் தாண்டி
ஆழமான வார்த்தைகளால் எம்மிடம் உரைக்கின்றன
'ஒன்றாயிணைந்து இனத்தைக் காப்பாற்றுங்கள்
தொலைதூர இடமொன்றில் விடுதலை வேண்டி நீங்கள்
ஏற்கெனவே இழப்பீட்டைச் செலுத்தி விட்டீர்கள்'

எமது அடிமைச் சங்கிலிகள்
விடுதலை வேண்டி மீண்டும் மீண்டும்
தம் இழப்பீட்டைச் செலுத்தியதை
அவை நினைவுபடுத்துகின்றன

இரவு நீண்டிருக்கிறது
காயம் ஆழமானதாயிருக்கிறது
இருண்டிருக்கிறது பள்ளம் - அதன்
சுவர்கள் செங்குத்தானவை

நாம் வாழ்ந்த,
இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும்
நரகமானது,
எமது புலன்களைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது
எமது இலக்குகளை இறுக்கமாக்கியிருக்கிறது

இரவு நீண்டிருக்கிறது
இன்று காலை உங்கள் வேதனைகளினூடு
உங்கள் ஆன்மாக்களை எட்டிப் பார்த்தேன்
ஒருவரோடு ஒருவர் நம்மை நாமே
பூரணப்படுத்திக் கொள்ளலாமென நானறிவேன்

உங்கள் நிலைப்பாட்டினூடும் மறைந்த மாறுவேடத்தினூடும்
நான் பார்த்தேன்
உங்கள் கபிலநிற விழிகளில் தேங்கியிருந்த
உங்கள் குடும்பம் மீதுள்ள நேசத்தை நான் கண்டேன்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
இணைந்துகொள்வோம் இச் சந்திப்பு மைதானத்தில்

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
பழகிக் கொள்வோம் ஒருவரோடொருவர் நேசத்தோடு

நான் கூறுகிறேன் கை தட்டுங்கள்
ஒன்றாய் எழுவோம் தாழ்ந்த பாதையினூடு

கை தட்டுங்கள் ஒன்றாக வந்து
வெளிப்படுத்துவோம் எம் இதயங்களை

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது மனநிலைகளை மாற்றியமைக்க

ஒன்றாயிணைந்து வருவோம்
எமது ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்த

கை தட்டுங்கள் இறுமாப்புக்களைக் களைந்து
எம் வரலாற்றைத் திரிபுபடுத்துவதை நிறுத்துவோம்

கை தட்டுங்கள்
ஓரங்கட்டப்பட்ட ஆன்மாக்களை அழைப்போம்

கை தட்டுங்கள்
வரவேற்போம் நாம்
எமது உரையாடல்களில் மகிழ்ச்சியை
எமது படுக்கையறைகளில் மரியாதையை
எமது சமையலறைகளில் கருணையை
எமது முன்பள்ளிகளில் பாதுகாப்பை

மூதாதையர் நினைவுருத்துகின்றனர்
வரலாறானது வேதனை மிக்கதெனினும்
நாம் முன்னே செல்லும் வழித்தோன்றல்களென்பதையும்
மீண்டும் எழும் மனிதர்களென்பதையும்

நாங்கள் எழுவோம்
மீண்டும் மீண்டும் !

- மாயா ஏஞ்சலோ  
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


மாயா ஏஞ்சலோ (1928 - 2014) :

            1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

            தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.
  
நன்றி
# அம்ருதா இதழ், ஜுலை - 2014
# பதிவுகள் இதழ்
# இனியொரு இதழ்
# காற்றுவெளி இதழ்

Tuesday, June 10, 2014

எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்


மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத

கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்

காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்
வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்
வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்
எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்

- ஷஸிகா அமாலி முணசிங்க

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
# நன்றி - வல்லமை இதழ்

Thursday, May 22, 2014

சிவரமணிக்கு...

(மே மாதம் 19 ஆம் திகதி, தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்ட கவிஞர் சிவரமணியின் நினைவாக)


உன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

அந்தகாரத்துக்குள் பிறந்த நான்
அந்தகாரத்துக்குள் பிறந்த நீ
ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்
இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்
நிரந்தரமான இருளுக்குள்ளேயே
எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

இப்பொழுது பிணங்கள்
கரையொதுங்குகையில்
நீயும் நானும்
தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

நீ வடக்கிலும், நான் தெற்கிலும்
இன்னும் நிரப்பப்படாத
பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே
வெவ்வேறாக படுத்திருப்போம்

இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது
பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி
வடக்கிலும் தெற்கிலும்
புதைக்கப்பட்ட அனேகரோடும்
இன்னும் நிறைய நாட்கள்
இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

சகோதர விழிகளிலிருந்து உதிரும்
உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து
எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு
இம் மரணத்தின் தொடர்ச்சி
இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து
எம்மை மீண்டும்
வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை
நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

ஏனெனில் மரணத்துக்கு முன்னர்
நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

"ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்."

- அஜித் சி. ஹேரத்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லமை இதழ் 
# இனியொரு இதழ்