Thursday, August 2, 2012

சேட்டைக்காரக் கறுப்புப் பெண்


அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து 'சேட்டை'ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் செய்திருந்த அலங்கோலம்! அது எவ்விதத்திலும் என் மனதைக் கவரவில்லை. காதுகளில் தொங்கும் பெரிய காதணிகள்! அவற்றுக்கும் நான் விருப்பமில்லை. கூடாரத் துணியால் தைக்கப்பட்ட இறுக்கமான காற்சட்டையும் அதற்குப் பொருத்தமான மேற்சட்டையும் அவளது விருப்பத்துக்குரிய ஆடைகள். எனவே வெளித்தோற்றத்திலேயே எனக்கு அவளைப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனாலும் அவளிடம் மிக அழகானதொரு புன்னகையொன்றிருக்கிறது. அது எவரிடமும் அபூர்வமாகக் காணக் கிடைக்கும் நேர்மையானதொரு புன்னகை. எவ்வாறாயினும் எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.

அவளது நடவடிக்கைகளும் எப்பொழுதும் என் மனதைக் கவரவில்லை. இவ்வாறான கல்வி நிலையங்கள் இருப்பது கற்பதற்குத்தான். அவளுக்கு, அளவுக்கதிகமாக கூச்சலிடும் உற்சாகமான நண்பர்கள் இருந்தனர். அவர்களிலும் அதிகப்படியாக இருந்தவர்கள் பையன்கள்தான். அவர்களுக்கு அதிக வேலையில்லை. நான் மிகுந்த கவனத்தோடும் தேவையோடும் படித்துக் கொண்டிருக்கும்போது கூட அவர்கள் வேடிக்கையாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்கள். கொண்டாட்டம், கொண்டாட்டம் முடிவேயில்லாத கொண்டாட்டம். நான் அவர்களிலொருவனாக இல்லாதது குறித்து மகிழ்கிறேன். நான் தனியாகவே படிக்கின்றேன். கல்வி கற்கவே இது போன்ற கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

ஓர் நாள், அவள் ஓரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விதத்தை நான் கண்டிருக்கிறேன் அல்லவா. அவன் அவளது சகோதரனாக இருப்பதற்கும் அனேக இடமிருக்கிறது. ஆனாலும் அவன், அவளது காதலர்களுள் ஒருவனாக இருப்பானென்றே நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு எண்ணுவதற்கே நான் மிகவும் விரும்புகிறேன். அவளுக்குப் பல காதலர்கள் இருக்கக் கூடும்.

நான் வகுப்பு முடிந்து, வீட்டுக்குப் போவதற்காகப் பேரூந்தில் ஏறினேன். அவளும் அதே பேரூந்தில் ஏறினாள். உள்ளே காலியாக இருந்த ஒரேயொரு இருக்கையில் நான் அமர்ந்தேன். அதே ஆசனத்தில் எனது வலது பக்கத்தில் அவள் அமர்ந்தாள். நான் யன்னலினூடாக தூரத்தே பார்வையைச் செலுத்தினேன். பேரூந்து நகரத் தொடங்கியது. சிறிது தூரம் பயணித்துக் கொண்டிருக்கையில், நடத்துனர் வந்து பணம் கேட்டார். அவள் பணம் கொடுக்க முற்படுகையில் ஐந்து ரூபாய் நாணயமொன்று அவளது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து உருண்டு வந்து எனது இரு பாதங்களினருகில் நின்றது. நான் அதைக் காணாதது போல இருந்தேன். அவள் என்னையும் நாணயத்தையும் மாறி மாறிப் பார்க்கும் விதம் எனது ஓரக் கண்ணில் தெரிந்தது. 'தேவையிருந்தால் கேட்கட்டும்.' நான் அப்படியே இருந்தேன். சிறிது நேரத்தில் அவளும் அது குறித்த எண்ணத்தைக் கை விட்டிருக்கக் கூடும்.

கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும்போது சிறுவர்கள் இருவர் பேரூந்தில் ஏறினர். ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும். அவர்கள் அமர்வதற்கு இடமொன்றைத் தேடினர். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். எனக்கென்றால் அவர்களிடம் எந்த விஷேசமும் தென்படவில்லை. பொதுவான வகைப்படுத்தலுக்கமைய அவர்கள் துர்நாற்றம் வீசும் சிறு விலங்குகள். அவள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் புன்முறுவலொன்றைத் தேக்கி பார்த்துக் கொண்டேயிருந்தாள். இதென்றால் பைத்தியமேதான்! சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களை அருகில் வருமாறு தலையால் சைகை செய்தாள். அவர்களும் முந்திக் கொண்டு வந்தனர். அவள் அவர்களை தன்னருகில் அழைத்துக் கொண்டாள். அத்தோடு நின்றுவிடாமல் தன் மடியிலும் அமர்த்திக் கொண்டாள்.

ஆகவே அவர்கள் மகிழ்வாகப் பயணித்தார்கள். குட்டிச் சிறுமி ஏதோவொரு பெரிய கதையை சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தாள். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவளைக் கூர்ந்து நோக்கி, மிகுந்த கவனத்தோடு அதற்குச் செவிமடுத்தாள். குட்டிச் சிறுவனும் தன் மழலைக் குரலில் ஏதோ கூறினான். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செவிமடுத்தாள். அவர்களைச் செல்லம் கொஞ்சினாள். நான் இவற்றையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்தபடியிருந்தேன். அவர்களோடு செல்லம் கொஞ்சி விளையாடும் ஆசை எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் நான் மிகுந்த முயற்சியோடு அதைத் தவிர்த்துக் கொண்டேன்.  சேட்டைக்காரக் கறுப்புப் பெண் மீது எனக்கிருக்கும் வெறுப்பினாலோ, எனது பாதங்களுக்கருகிலிருக்கும் நாணயத்தினாலோ நான் அதனைத் தவிர்த்திருக்கலாம். மெல்லிய வேதனையொன்று என்னுள்ளே எழுந்தது. நான் அனுபவிக்காத பேரானந்தமொன்றை அவள் அனுபவிக்கிறாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். நான் துயரத்தோடு இருக்கிறேன்.

கொஞ்ச தூரம் பயணித்த பின்பு சிறுவர்கள் இருவரும் இறங்கிச் சென்றனர். அவர்களது விளையாட்டு முடிந்தது. அடுத்து வரும் நிறுத்தத்தில்  சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணும் இறங்கிப் போவாள். ஆகவே நான் தனித்துப் போவேன். வழமையைப் போன்ற தனிமைக்குள்ளேயே தனித்துப் போவேன். எனக்கு கர்வமளிக்கக் கூடிய, பிரகாசமான, செழிப்பான எதிர்காலம் நோக்கிச் செல்லும் எனது இப் பயணத்தின் ஒவ்வொரு கணத்திலும் நான் அனுபவிக்கும் வேதனை மிகுந்த தனிமைக்குள்ளேயே மீண்டும் நான் தனித்துப் போவேன். பேரூந்திலிருந்து இறங்கப் போகும் அவளையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பேரூந்திலிருந்து இறங்கிப் போனாள். நான் எடுத்துக் கொடுக்காத ஐந்து ரூபாய் நாணயம் குறித்து அவள் மறந்திருப்பாளா? அது  இன்னும் எனது பாதங்களுக்கருகில்தான். நான் அதைப் பொறுக்கியெடுத்தேன். நாளைய தினம் அவளைச் சந்திக்கும்போது அதைக் கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்த குழப்பமொன்று என் மனதில் உண்டானது. எவ்வாறாயினும் நாளைய தினம் அவள் புன்னகைத்தால், நானும் பதிலுக்கு புன்னகைப்பேன்.

மூலம் - அனுஷ்க திலகரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,  
இலங்கை

நன்றி
# யாத்ரா இதழ் 21 - ஜூன் 2012
# எதுவரை இதழ் 03 - ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை

Monday, July 2, 2012

சித்திரவதைக் கூடத்திலிருந்து




அடுத்த கணம் நோக்கி
எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர
முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ
ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்
அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து
தப்பிக்கொள்ள முடியவில்லை
சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே
எண்ணங்கள் காணாமல் போயின

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்
உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்
மரண ஓலங்கள்
அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்
பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன

பயங்கரத்தைத் தவிர
இங்கிருப்பது
மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை
சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்
ஒரே அன்பான தோழன்
மரணமே
அவனும்
எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்
குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

சேவல் கூவ முன்பு
மூன்றாவது முறையாகவும்
எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி
காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக
அச்சம் தரும் மரணத்தையும்
கெஞ்சுதலுக்குப் பதிலாக
சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி
எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த
இறுதிக் கண்ணீர்த் துளிகளை
சமர்ப்பித்தது உன்னிடமே

உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவாக
பகலுணவோடு கிடைத்த யோகட் கோப்பையின்
அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்
அதை எரிந்து மிதிக்கிறான்
அடுத்தது யார்

இங்கு வாழ்க்கை இதுதான்
இங்கு மரணம் எது?
முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்
தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும்

பட்டியலிடப்படாத வாழ்க்கை
பட்டியலிடப்படாத மரணத்தோடு
வந்து சேர்கிறது

பைத்தியக் கனவுகளோடு
நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன்
எனினும் நான் இங்கேயேதான்
இந்தத் தெளிவு கூட
கண்டிப்பாகப் பயங்கரமானது

இங்கு படுகொலை செய்யப்பட்ட
அனேகருக்கு
மனித முகமொன்று இருந்தது
எனது இறுதிச் சாட்சியாக
எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

- அஜித் சி. ஹேரத், 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# 361 டிகிரி சிற்றிதழ் - 03
# எங்கள் தேசம்
# மலைகள் இதழ்
# உயிர்மை
# திண்ணை