Monday, November 15, 2010

பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் ஐயாக்களோடு...

நானா?

ஓமோம்

இப்பொழுது பத்தாம் வகுப்புக்குத்தான் போகிறேன்
கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு

ஐயோ ஓம்
எழுத்துக்களையும் வாசிக்க முடியும்
பாண் தேயிலை சீனி சுற்றித் தரும்
தாள் துண்டுகளை வாசித்தே
நாட்டுநடப்புகளும்
கொஞ்சமேனும் புரிகிறது
உபகாரப் பணம்பெறும் படிவங்கள்
கிராமசேவகர் தாளெல்லாம்
பூரணப்படுத்துவது நான்தான்

ஆங்கிலம்....?

இல்லை ஐயா,

இங்கு ஆசிரியர்கள் இல்லையே
முழுப் பள்ளிக்கூடத்துக்குமே
இருவர்தான் இருக்கிறார்கள்

அரச தேர்வோ?
ஐயோ
அது மிகக் கடினமாம்
ஆசிரியர்கள் இல்லையே

கற்பிக்கவில்லை எங்களுக்கு
விஞ்ஞானம்
கணிதம்
அத்தோடு மொழியையேனும்

சமயமா?

சமயப் பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்திருப்பவை
மட்டுமே தெரியும்

நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஐயோ இல்லை ஐயா...

வீண் கனவுகளெதற்கு?
எழுதுவினைஞர்
ஆசிரியர்
பதவிகளை வகிக்க
எண்ணிப் பார்க்கவும் முடியாது எம்மால்
குறைந்தது
அட்டெண்டண்ட் வேலையாவது எடுக்கமுடியாது
ஆறு பாடமாவது சித்தியடையாமல்

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
*கார்மண்டுக்காவது போக வேண்டும்
காமண்டிலிருந்தென்றால் வெளிநாடுகளுக்கும்
அனுப்புகிறார்களாமே
அப்படியாவது போக முடியுமென்றால்
கொஞ்சமாவது
தலை தூக்க இயலுமாகும்

பொய்க் கனவுகளெதற்கு?

இந்தக் கொஞ்ச காலத்தையும்
இப்படியே கடத்திக் கொண்டு போய்
கார்மண்டுக்காவது போகவேண்டும்

* கார்மண்ட் - ஆடை தயாரிப்பு நிலையம்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உயிர்மை
# திண்ணை
# ஊடறு
# தடாகம்

Tuesday, November 2, 2010

காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை


முதியவளான என்னில்
துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி
என்ன தேடுகிறாய் பிள்ளையே
வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி
வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்

வெடிக்கக் கூடியவை அனேகம்
பலவீனமான என் நெஞ்சுக்குள் உள்ளன
தென்படாது உன் இதயத்துக்கு அவை
நானும் உன் மத்தியில் இன்னுமொரு தாய்தான்

உன் புன்சிரிப்பைக் காணவென
பாசத்தின் ஈரத்தை நிரப்பி
உனை நோக்கிப் புன்னகைக்கிறேன்
உனது வதனத்திலொரு மாற்றத்தைக் காண இயலாவிடினும்
இச் சீருடையைக் களைந்ததன் பின்னர்
எப்பொழுதேனுமுனக்கு
புன்முறுவல் தோன்றுமென்பது நிச்சயம்

மூலம் - தர்மசிறி பெனடின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 

இலங்கை


நன்றி
# காலச்சுவடு இதழ் - 130, அக்டோபர் 2010
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை
# ரவி (ஓவியம்)

Tuesday, October 26, 2010

நீ மூழ்கி இறந்த இடம்


நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும்  அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப்  பறந்து செல்கிறது

நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....

உற்றார் உறவென்று யாருமற்ற
இடையச் சிறுவனொருவன்
இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும்
தண்டனையின் நிமித்தம் இழந்தவனாக
தொலைந்து போன மாடொன்றைத் தேடியவாறு
இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து
உடைந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை
தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது  இன்னும்

மூழ்காமல் இருந்திடத் தனது கை கால்களை அடிக்கும் வேளை
நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை
இக்கரையை அடைந்த யாரோ மூச்சு இரைத்தவாறு
ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம்,
சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி,
பெயரைத் தானும் அறிந்திராத தனது தாய் தந்தையரிடம்
துயரத்தைச் சொல்லி தனியே விம்மும்
அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல்
எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர்
அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு.

பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே
கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது
அந்த அனாதைப் பிள்ளையின் சடலம்.
ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.

கூடியிருந்த யாவரும்  கலைந்து சென்றதன் பின்னர்,
எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து
வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்பதற்காக
உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை
நானும் பின் தொடர்ந்தேன்
அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்

பள்ளிகூடம் போய்வரும்  இடைவழியில்
பிஸ்கட்டுகளைக்
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு
கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே
மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச்  சிரித்தவாறு கையசைக்கும்
உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து...
நின்று பார்க்கையில்
மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும்
நீ அணிந்திருந்த கந்தல் சட்டை
உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட
ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன்
பல காலம் சென்ற பின்பும்

இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்போழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ
நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே
மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ......
தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில்
சேற்றினிடையே ஒளிந்து கொண்டு,
இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.....

மூலம் - அஜித் சி ஹேரத்
தமிழில் - ஃபஹீமாஜஹான்


நன்றி
# கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்