Tuesday, September 5, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 05 - எம்.ரிஷான் ஷெரீப்



 

     அலுவலக நேரங்களில், நகரத்தின் ரயில், பேரூந்து நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டு பயணிப்பவர்களுக்குத் தெரியும் அவற்றுக்குள்ளிருக்கும் இன்னல்கள். ஆண்களும், பெண்களுமாய் ஜீவிக்க வேண்டி அனுபவிக்க நேரும் இவ்வாறான சிக்கல்கள்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றன. எவருமே இக் கஷ்டங்களை வரவேற்பதில்லை. 

     வீட்டிலிருந்து, அழகாக, நேர்த்தியாக உடையணிந்து பேரூந்திலேறும் ஒருவர் அலுவலகத்துக்கருகில் இறங்கும்போது அவரது ஆடைகளைப் போலவே, கசங்கி விட்டிருப்பார். அவ்வாறே வேலைசெய்து களைத்து, அலுவலகத்திலிருந்து வெளியேறி, பேரூந்திலேறி வீட்டுக்கு வந்து சேரும்போது அவரது அனைத்துப் பலமும் உறிஞ்சப்பட்டு, சக்கை போல ஆகி விட்டிருப்பார். ஆண்களைப் போலவே பெண்களும் இக் கொடுமைகளை அனுபவித்த போதிலும், பெண்கள் இவற்றை விட மேலதிகமாகவும் பல கொடுமைகளை பிரயாணங்களின் போது அனுபவிக்கின்றனர்.

     இச் சிங்கள மொழிக் கவிதையைப் பாருங்கள். எழுதியிருப்பவர் பெண் கவிஞர் ஷஸிகா அமாலி முணசிங்க. ஒரு சட்டத்தரணியான இவர் கவிஞர், விமர்சகர், சமூக ஆர்வலர், கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சிங்கள மொழியில், வாழ்வின் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதும் இவரது கவிதைகள் பல காத்திரமான இதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இக் கணத்தின் யதார்த்தம்

சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு
பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில்
தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன்
பேரூந்தின் கர்ப்பத்துக்குள்
மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன்


வியர்வையில் தெப்பமாகி
இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன்
விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன்
சரிகிறேன் எழுகிறேன்
சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே
நான் சிந்திக்கிறேன்


'யார் நான்
கவிதாயினியா
மிக அழகிய இளம்பெண்ணா
அவ்வாறும் இல்லையெனில்
உயர்பதவியேதும் வகிப்பவளா
காதலியா, தாயா, அன்பான மனைவியொருத்தியா
இதில் எது பொய்யானது
தீயாயெரியும் பேரூந்தொன்றுக்குள் சிறைப்பட்டு
களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி
இக்கணத்தில் வேறெவர்?'


யதார்த்தம் என்பது என்ன
பேரூந்திலிருந்து இறங்கி
வீட்டில் காலடி வைக்கும் கணம்
குறித்துக் கனவு காண வேண்டுமா
குளிர்ந்த நீரில் உடல் கழுவி
தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா
எனில் யதார்த்தம் எனப்படுவது இக்கணம்தான்


பெரும் காரிருளில் மூழ்கி
இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும்
என்னை நானே சந்திக்கும் இக் கணம்
'நான்' வீழ்ந்துடைந்து அழிந்து போகும் இக் கணம்


கவிஞனான போதும்
இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான்
இங்கு வைத்தியரோ, வேறெவராயினுமொருவரோ
பெண்ணோ, ஆணோ
தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும்
விலங்கொன்றன்றி வேறெவர்
இது இக்கணத்தின் யதார்த்தம்
இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்
கதவைக் காணக்கூடிய கணம்


பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு
வெளிச்சம் என்னை நெருங்கட்டும்
இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும்

****

     நகர வாழ்க்கை ஒரு மாயை. அது பல விதக் கிராம மக்களால்தான் ஒளியூட்டப்படுகிறது. அப் பளபளப்பான வெளிச்சம், இன்னுமின்னும் கிராம மக்களை ஜீவிக்கவென நகரத்துக்கு ஓடி வரும்படி செய்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் இதை வாசிக்கும் இக் கணமும் எவரேனும் ஒருவர் புதிதாக, நகரத்துப் பேரூந்தில் வந்து இறங்கியிருப்பார் பாருங்கள். அதுதான் வாழ்க்கை.

- எம்.ரிஷான் ஷெரீப்


mrishanshareef@gmail.com
  
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்

No comments: