Friday, October 5, 2012

சினேகிதனொருவன்

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு
ஒரு பயனுமற்ற பொறுக்கியென
அனேகர் கூறும்படியான

அவ்வப்போது நள்ளிரவுகளில்
பயங்கரமான கனவொன்றைப் போல
உறக்கத்தைச் சிதைத்தபடி
வருவான் அவன் எனதறைக்கு

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை
எனது கையில் திணிக்குமவன்
வரண்ட உதடுகளை விரித்து
குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு
சிவந்த விழிகளைச் சிறிதாக்கி
புரியாதவற்றை வினவுவான்
எனது தோள்களைப் பிடித்து
பதிலொன்றைக் கேட்டு
இரு விழிகளையும் ஊடுருவுவான்

அத்தோடு எனது தோள்மீது
அவனது தலையை வைத்து
கண்ணீர் சிந்துவான்

நிறுத்தும்படி கேட்கும்
எனது பேச்சைச் செவிமடுக்காது
ஒரு கணத்தில் இருளில்
புகுந்து காணாமல் போவான்

பகல்வேளைகளில் வழியில்
தற்செயலாகப் பார்க்க நேர்கையில்
தெரியாதவனொருவனைப் போல
என்னைத் தாண்டிச் செல்வான்

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# மலைகள் இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை 
# பதிவுகள் 

3 comments:

பூங்குழலி said...

உங்கள் கவிதைகள் என்றுமே அடர்ந்த உணர்வுகள் சொல்பவையாகவே இருக்கின்றன ரிஷான் ,இதுவும் அப்படியே

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உங்கள் கவிதைகள் என்றுமே அடர்ந்த உணர்வுகள் சொல்பவையாகவே இருக்கின்றன ரிஷான் ,இதுவும் அப்படியே //

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உங்கள் கவிதைகள் என்றுமே அடர்ந்த உணர்வுகள் சொல்பவையாகவே இருக்கின்றன ரிஷான் ,இதுவும் அப்படியே //

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !