Friday, October 1, 2010

இறுதி மணித்தியாலம்


கிலட்டின் தயாராகிறது
இறுதி உணவுபசாரத்துக்கும்
சூழ்ச்சி செய்யாமல்
தேர்ந்தெடுங்கள்
தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும்
எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப் பெயரிட்டுள்ளனர்

ராசாக்கள் தந்த சுகம்
மாளிகை அந்தப்புரம்
கை விட்டுப்போகுமென்ற நடுக்கத்தில்
தேசக் காதலர்கள் அழுகிறார்கள்
வெளிப்படையாகவே அவர்கள்
பகல் கொள்ளைக்காரர்கள்
ஊழல்காரர்கள் கொலைகாரர்கள்
சுரண்டிச் சாப்பிடுபவர்கள்

ரோசா நிறத்து விடுதலைவிரும்பிகள்
(சுய இருத்தலுக்கான)
உபாயமொன்றை
மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
தேர்ந்தெடுத்த அனைத்தும் தவறானவை
பொருட்டின்றிக் கைவிடப்பட்ட
வலுவோடும் அன்போடும்
துயில்கின்றனர் பெருநிலத்தின் கீழே
வடக்கிலும் தெற்கிலும்
பல்லாயிரக் கணக்கில்
தொண்டைகிழிய
இரு கைகளுயர்த்திச் சொல்கிறார்கள்
அவர்களது தந்தையினதும் சகோதரனினதும்
அயலவனினதும் கொலைகாரர்கள்
எமது மீட்பர்கள்தானென

கனவுகளைக் காண்பவனும்
கனவுகளைக் கட்டியெழுப்புபவனும்
எம்முடனேயே மரித்துப்போகட்டுமென விதிக்கப்பட்டுள்ளது
இப்பொழுதே
கண்டங்களின் வேட்டைக்காரர்கள்
துணிச்சல்காரர்களை
விலைக்கு வாங்கிவிட்டனர்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை

நன்றி
# உயிர்நிழல் இதழ் 32, ஏப்ரல் - ஜூன், 2010
# உயிர்மை
# திண்ணை

11 comments:

உமா வரதராஜன் said...

"தேசக் காதலர்கள் எல்லா இடங்களிலும் அவ்வாறுதான் உள்ளார்கள்.மொழிபெயர்ப்புக்குரிய நல்ல தெரிவு. வாழ்த்துகள் ரிஷான் ."

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் உமா வரதராஜன்,

//"தேசக் காதலர்கள் எல்லா இடங்களிலும் அவ்வாறுதான் உள்ளார்கள்.//

நிச்சயமாக நண்பரே.

//மொழிபெயர்ப்புக்குரிய நல்ல தெரிவு. வாழ்த்துகள் ரிஷான் ."//

:-)
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

உமா வரதராஜன் said...
This comment has been removed by a blog administrator.
உமா வரதராஜன் said...

இம் மாத காலச் சுவடு இதழில் தங்களுடைய மேலும் சில மொழி பெயர்ப்பு கவிதைகள் வந்துள்ளன.
காலையில் உலாவச் செல்லும் வயோதிபனின் பார்வையில் உங்கள் தோட்டம் நிதமும் தென் படுகின்றது. தொடர்ந்து அங்கே மலரும் பூக்களுடன் சேர்ந்து அவனும...பூரிக்கின்றான்.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் உமா வரதராஜன்,

காலச்சுவடு இதழ் கிடைத்தது. அம் மொழிபெயர்ப்புக் கவிதைகள் குறித்தான உங்கள் கருத்தினையறிய ஆவலாக இருக்கிறேன்.

இம் மாத இதழ் சுராவின் பெறுமதியான பக்கங்களால் நிறைந்திருக்கின்றன அல்லவா?
...
உங்கள் நாவல் குறித்த விமர்சனம் பார்த்தேன். தினகரனிலும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் தேடித் தோற்றேன். எங்கு கிடைக்கும் நண்பரே?

//காலையில் உலாவச் செல்லும் வயோதிபனின் பார்வையில் உங்கள் தோட்டம் நிதமும் தென் படுகின்றது. தொடர்ந்து அங்கே மலரும் பூக்களுடன் சேர்ந்து அவனும...் பூரிக்கின்றான்.//

நான் மிகவும் ரசித்த வரிகள். அது சரி..வயோதிபனென உங்களைச் சொல்கிறீர்களா என்ன? தொலைக்காட்சி பார்க்கும் யாரும் அதை நம்ப மாட்டார்கள். :-)

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

உமா வரதராஜன் said...

இதழ் கிடைத்த அன்றே உங்கள் கவிதைகளைப் படித்து விட்டேன். முதல் மனப் பதிவில் அவை தேறியே இருந்தன.
எந்த மொழி ஆயினும் என்ன? மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டல்லவா. இன்னும் ஒரு
தடவை கூர்ந்து படித்து , புதிதாக ஏதாவது ... அபிபிராயம் உருவானால் தங்களுக்கு அறியத் தருவேன்.
வயோதிபன் கூற்று பற்றி: தன் அந்திம காலத்திலும் எம்.ஜி.ஆர் . அவ்வாறுதான் திரைப் படங்களில் தோன்றிக்
கொண்டிருந்தார். ' வெறுங் காட்சிப் பிழையன்றோ?'

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் உமா வரதராஜன்,

//எந்த மொழி ஆயினும் என்ன? மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டல்லவா. இன்னும் ஒரு
தடவை கூர்ந்து படித்து , புதிதாக ஏதாவது ... அபிபிராயம் உருவானால் தங்களுக்கு அறியத் தருவேன்.//

நிச்சயமாக நண்பரே..
மனித மனங்களின் உணர்வுகளை மொழி தீர்மானிக்காது. அதிலும் மனசாட்சிக்கு எந்த மொழியாயிருந்தாலென்ன? ஒருவரின் வரிகள் வாசிப்பவரின் மனதோடு இழைவதிலும், சிறிதளவேனுமொரு பாதிப்பை ஏற்படுத்துவதிலும்தான் படைப்பின் வெற்றி தங்கியிருக்கிறதல்லவா?

//வயோதிபன் கூற்று பற்றி: தன் அந்திம காலத்திலும் எம்.ஜி.ஆர் . அவ்வாறுதான் திரைப் படங்களில் தோன்றிக்
கொண்டிருந்தார். ' வெறுங் காட்சிப் பிழையன்றோ?'//

அவர் ஒப்பனையால் இருக்கலாம். யாரோ எழுதித் தருவதை கேமரா முன்னால் அபிநயங்களுடன் பேசி விடுவதால் வயோதிபத்தை மறைக்கச் செய்யலாம்தான். (தற்கால உதாரணம் ரஜினிகாந்த்..கணினித் தொழில்நுட்பங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்..எம்.ஜி,ஆர் காலத்தில் கணினித் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் கணினி தப்பித்துக் கொண்டது.) :-)

உங்களது வயோதிபம் வயதிலோ, தோற்றத்திலோ இல்லை நண்பரே..அனுபவத்தில் மட்டும்தான்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

உமா வரதராஜன் said...

அனுபவங்களை எப்போதும் பகிர்ந்து கொள்வேன். வழி காட்டியாக அல்ல.சக நண்பனாக. தொடர்ந்து சுறு சுறுப்பாக
இயங்குங்கள். உலகத்தின் ஆக சிறந்த படைப்பாளிகளின் அநேகமான நல்ல படைப்புகள் அவர்களுடைய இளமைக்
காலங்களில் எழுதப் பட்டவைதான். வயதாக ,ஆக எழுத...்தாளர்கள் திண்ணைக்குப் போய் அரட்டை அடிக்கத் தொடங்கி விடுவார்கள். அல்லது தற் காப்பு யுத்தங்களில் இறங்கி விடுவார்கள். அதிரடி ஆட்டம் ஆட இதுதான்
வயது. புகுந்து விளையாடுங்கள்.

Anbu Mohideen Rozan Akther said...

Rizan shareef உங்களின் எழுத்துக்கள் காலச்சுவடு ,உயிரோசை இல் தொடர்ச்சியாக பார்க்கக்கிடைக்கிறது .தீவிரமான இயக்கம் மகிழ்ச்சிக்குரியது ,வாழ்த்துக்கள்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் உமா வரதராஜன்,

//அனுபவங்களை எப்போதும் பகிர்ந்து கொள்வேன். வழி காட்டியாக அல்ல.சக நண்பனாக. தொடர்ந்து சுறு சுறுப்பாக
இயங்குங்கள். உலகத்தின் ஆக சிறந்த படைப்பாளிகளின் அநேகமான நல்ல படைப்புகள் அவர்களுடைய இளமைக்
காலங்களில் எழுதப் பட்டவைத...ான். வயதாக ,ஆக எழுத...்தாளர்கள் திண்ணைக்குப் போய் அரட்டை அடிக்கத் தொடங்கி விடுவார்கள். அல்லது தற் காப்பு யுத்தங்களில் இறங்கி விடுவார்கள். அதிரடி ஆட்டம் ஆட இதுதான்
வயது. புகுந்து விளையாடுங்கள்.//

நிச்சயமாக முயற்சிக்கிறேன் நண்பரே. நவீன நாகரீக உலகில் தொழில்நுட்ப வசதிகள் பெருகப் பெருக நேரமின்மை என்பதுவும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நிறைய எழுத ஆசைதான். எழுத்தின் கவனத்தைத் திசை திருப்பி விடக் கூடியவை பலதும் சூழ இருக்கின்றன. கவனத்தை ஒரு முகப் படுத்தவே பெரிதும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. :-)

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நண்பரே.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அன்பு மொஹிதீன் ரொஸான் அக்தர்,

//Rizan shareef உங்களின் எழுத்துக்கள் காலச்சுவடு ,உயிரோசை இல் தொடர்ச்சியாக பார்க்கக்கிடைக்கிறது .தீவிரமான இயக்கம் மகிழ்ச்சிக்குரியது ,வாழ்த்துக்கள்//

:-)
...இவ் வார 'விடிவெள்ளி' இதழில் எனது சிறுகதையொன்றும், 'ராவய' பத்திரிகையில் சிங்களக் கவிதையொன்றும்,'ஞாயிறு வீரகேசரி'யில் சிறுகதையொன்றும் வெளியாகியிருக்கிறது. பார்த்துச் சொல்லுங்கள்.
உங்கள் கருத்தும் அன்பான வாழ்த்துக்களும் மகிழ்வைத் தருகிறது. மிகவும் நன்றி நண்பரே.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்