Tuesday, June 15, 2010

90' - அப்படியுமொரு காலம் இருந்தது


அப்படியும் காலமொன்றிருந்தது

அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்
எமது குழுவில் இருந்தனர்
அவ்வயதையொத்த இளைஞர்களும்

அப்படியும் காலமொன்றிருந்தது

கவிதை நாடகம் பாடல் கூத்து
விவாதம் திரைப்படப் பிரதிகள் என
தேடித் தேடி அலைந்து திரிந்த
எண்ணற்ற அந்திப் பொழுதுகள்

அப்படியும் காலமொன்றிருந்தது

தெய்வத்துக்கு நிகராக
உளளத்தினுள் வீற்றிருந்த பிம்பங்களை
அவ்வாறே காத்திட
உணவின்றி
உறக்கமின்றி
தேனீர்தானுமின்றி
பொழுதுகள் பலவும் வாதம்புரிந்த

அப்படியும் காலமொன்றிருந்தது

எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத
என்னவானாலும்
மீளச் சென்று வர இயலுமானால்
எவ்வளவோ நல்லதென எண்ணக் கூடிய

அப்படியும் காலமொன்றிருந்தது

மூலம் - சஜீவனி கஸ்தூரி ஆரச்சி
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# ஊடறு
# பெண்ணியம்
# கூடு


19 comments:

பூங்குழலி said...

எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத

ஆம் ரிஷான் அப்படியொரு காலம் நிச்சயம் இருந்தது

Cheran Rudhramoorthy said...

உஙகளுடைய மொழி பெயர்ப்புகள் படித்தேன். மிகவும் அருமையான முயற்சி.
சில விமர்சனக் குறிப்புகள்:
எடுத்துக்காட்டாகப் பின் வரும் பந்தியைப் பாருங்கள்-

அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்
எமது குழுவில் இருந்தனர்
அவ்வயதையொத்த இளைஞர்களும்

இந்த மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல் என்றால் " இருபது வயதுகளின் யுவதிகள்" என்பது.இதற்கு மயக்கமான கருத்துக்கள் உள.
Young ladies in their twenties or women in their twenties?
என்னிடம் சிங்கள மூலம் இல்லை. எநினும் ஒரு தரம் பாருங்கள்.
மற்றுமொன்று:
எப்படி/ ஏன் சொற்களைப் பிரிக்கிறீர்கள்? அதற்கு என்ன நியாயப்பாடு?
இதுதான் நவ கவிதையில் முக்கியம் என நான் கருதுகிறேன்.
மற்றவை நேரில்
அன்புடன்
சேரன்

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//எதிர்பார்ப்புகள் கனத்த
புத்திளம் இதயங்களில்
சோகத்தின்
பயத்தின்
சந்தேகத்தின்
நிழலொன்றேனும் வீழ்ந்திடாத

ஆம் ரிஷான் அப்படியொரு காலம் நிச்சயம் இருந்தது//

ஆமாம் சகோதரி. நம்மால் மீட்டெடுக்க முடியாத ஒரு காலம் இருந்தது. எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு வண்ணத்துப் பூச்சி போல வாழ்க்கையை ஒரு நந்தவனமாக எண்ணி சுற்றித் திரிய முடிந்த காலம். இனி அவற்றில் நினைவுகளால் மட்டுமே வாழலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சேரன்,

உங்கள் விமர்சனம் மகிழச் செய்கிறது.

இக் கவிதை சிங்களக் கவிதையொன்றின் மொழிபெயர்ப்பு. சிங்களக் கவிதைகள் இன்னும் மரபு சார்ந்தே எழுதப்படுகின்றன. சிங்கள இலக்கியத்தின் ஆரம்பம், நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தே துவங்கியிருக்கிறது. ஆகவே அக் கவிதைகளின் நவ வடிவத்தில் அப் பாடல்களின் மயக்கம் இன்னும் காணப்படுகின்றது.

இக் கவிதையில் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளமை சரிதான்.

//அக்காலத்தில் நாம்
இருபது வயதுகளின் யுவதிகள்//

இதுதான் சரியான வடிவம். யுவதிகள் எனும் சொல்லிற்குப் பிறகு முற்றுப்புள்ளி அல்லது கமா இட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ் நவீன கவிதைகளில் இந்த முற்றுப்புள்ளி, கமா, கேள்விக்குறி, ஆச்சரியக் குறி ஆகியவற்றின் பயன்பாடு இப்பொழுது இல்லை. அந்தக் குறியீடுகள் தரும் மன உணர்வினை (ஆச்சரியம், நிறுத்தம்) கவிதைகளை வாசிப்பவர்கள் தாமாக உணரச் செய்ய இவை போடப்படுவதில்லை.

ஆகவே இங்கு ஒரு சிங்களக் கவிதையை, தமிழ் நவீன கவிதைக்கு மாற்றும் போது, இக் குழப்பம் நேர்ந்திருக்கிறது. இனிமேல் இப்படி குழப்பம் நேர்வதை தவிர்க்கிறேன் நண்பரே.

கருத்துக்கும், விமர்சனத்துக்கும் நன்றி அன்பு நண்பரே !

சீதாலக்ஷ்மி said...

கடந்த காலத்தின் எச்சங்கள் நினைவுகள்
நினைப்பதுவே இன்பமென்றால் நினைவுகள் வாழட்டும்
அல்லது அவைகள் மாளட்டும்.
சீதாம்மா

M.Rishan Shareef said...

அன்பின் சீதாம்மா,

//கடந்த காலத்தின் எச்சங்கள் நினைவுகள்
நினைப்பதுவே இன்பமென்றால் நினைவுகள் வாழட்டும்
அல்ல்து அவைகள் மாளட்டும் //

நிச்சயமாக அம்மா.
ஆனால் பழங்கால நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுவும் ஒரு வித இன்பம் தானே?

கருத்துக்கு நன்றி அன்பு அம்மா :-)

பாரதி said...

இக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...
கவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.

விஜி said...

*பெருமூச்சோடு!!!..*

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//*பெருமூச்சோடு!!!..*//

நிச்சயமாக.
கருத்துக்கு நன்றி தோழி !

தேனுஷா said...

அம்மே அப்படியெல்லாம் சொல்ல வெச்சிடுமோ காலம் இந்த வயசு இருக்கும் போதே நல்லா
ஜாலியா இருக்கணும்பா

சிவா.ஜி said...

சுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.

ஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.

மொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.

Govindh said...

மனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...
அருமையான பதிவு....
பகிர்வுக்கு மிக்க நன்றி...ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் பாரதி,

//இக்கவிதையை படித்து முடித்ததும் ஏக்கப்பெருமூச்சுதான் வந்தது...
கவிஞருக்கும் மொழிமாற்றித்தந்த உங்களுக்கும் நன்றி நண்பரே.//

நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//சுகமான நினைவுகள்...இன்று சுமையாகிப் போனது.

ஆற்றாமையோடு படித்து ஆயாசப் பெருமூச்சு விட வேண்டியதாயிருக்கிறது.

மொழிமாற்றுக்கும், பகிர்வுக்கும் நன்றி ரிஷான்.//

ஆமாம் நண்பரே.
மீளச் சென்றுவிட முடியாத அழகிய காலங்கள் பொக்கிஷங்கள் அல்லவா?

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் கோவிந்த்,

//மனதில் நீங்கா நினைவுகள்...தனி சுகம்...
அருமையான பதிவு....
பகிர்வுக்கு மிக்க நன்றி...ரிஷான்.//

நிச்சயமாக நண்பரே.
கருத்துக்கு நன்றி :-)

அமரன் said...

இங்க நான் வரக்கூடாது போல.:)

இருபதில அஞ்சு ஆசை!

நாற்பதில இருபது ஆசை!

அறுபதில எல்லாத்திலயும் ஆசை!

நதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..

நதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.

Shibly said...

நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..

கண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு..

M.Rishan Shareef said...

அன்பின் ஷிப்லி,

//நினைவுகளை மீட்டுப்பார்க்கும் கவிதைகள் எப்போதும் ஏக்கப்பெருமூச்சை வெளியிட் வைக்கும்..

கண்ணீரே வந்துவிட்டது..அற்புதமான கவிதை..அழகான மொழிபெயர்ப்பு.. //

கவிதை குறித்தான கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அமரன்,

//இங்க நான் வரக்கூடாது போல.:)

இருபதில அஞ்சு ஆசை!

நாற்பதில இருபது ஆசை!

அறுபதில எல்லாத்திலயும் ஆசை!

நதியோட்டத்துக்கு எதிர் நீச்சல் போடலும் சுகம்..

நதியோட்டத்துக்கு ஒத்து நீந்தலும் சுகமோ சுகம்.//

அழகான கருத்து.
நன்றி நண்பரே !