Friday, January 22, 2010

முதற்காதல்



நினைவுகளின் ஒழுங்கைகள் வழியே
இறந்த காலத்தின் புத்தகத்தைப் பார்க்கிறேன்
கள்ளிமுட்களும், செஞ்சந்தனக் கரியும்
பாதங்களை முத்தமிட்ட பாதையில்
அகழிகள், மலைத்தொடர்கள் ஊடாகப்
பின்நடை போடுகிறேன்

கபிலம், கருமை, சாம்பல் நிறங்களில்
இருண்ட கறைகள் நிறைந்த
காலத்தின் மாபெரிய புத்தகத்தில்
ஒரேயொரு பக்கமே உள்ளது
அதில் ஒரேயொரு ஓவியம் உள்ளது
அநேக வர்ணங்கள் நிரம்பிய
வேறெந்த ஓவியத்திலும்
படிந்திராத வர்ணங்கள் நிரம்பிய

காலத்தின் ரேகைகளின் மீது
இன்னும் பளிச்சிட்டவாறு
இறந்த காலத்துக்குச் சொந்தமான
நாளொன்று உள்ளது அப்புத்தகத்தில்
பிரபஞ்சத்தின் அனேக நிறங்களை
ஒன்றாகக் கலந்து வரைந்த
வாழ்வின் அழகான ஓவியமொன்று
உள்ளது அதில்

பற்பல நிறங்களைக் கலந்து
இன்னும் வரைகின்ற
வாழ்வுப் புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாய் மூடிச்செல்கின்ற
ஒருபோதும் மீளப் பொருந்திவந்து
வரையப்பட முடியாத அது
புதிய தோற்றம் உள்ள
ஒரேயொரு ஓவியமே
இன்றும்

மூலம்: குமுதுனீ வித்யாலங்கார (சிங்களம்)
தமிழில் : ஃபஹீமாஜஹான்

2 comments:

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

அருமையான கவிதையொன்று, உங்கள் மொழிபெயர்ப்பில் இன்னும் அழகாகியிருக்கிறது.

பாராட்டுக்கள் சகோதரி.
தொடருங்கள் !

mohamedali jinnah said...

படமும் --கவிதையும் அழகு. உங்களுக்கு இது கை வந்த கலை, .மனதில் ஒரு மயக்கம்.