Thursday, August 3, 2017

வெள்ள நிவாரண முகாம்




        நயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.


         அறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.


         அவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.


         பிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின் பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள்.


         நண்டொன்று குறுக்கே அடி வைத்து புத்தகங்களின் மேலால் ஓடியது. ‘பாம்புகளும் இருக்குமோ தெரியாது’ எனப் பயந்து சடுதியாக பின்புறம் அடியெடுத்து வைத்தவள் சகதியில் வழுக்கினாள். சட்டென நிலைக் கதவைப் பற்றிப் பிடித்து கீழே விழாது தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். சுவரிலிருந்த அட்டைப் புழுவொன்று நசுங்கி அவளது கைகளில் அதன் சதைத் திரவம் படிந்தது. மிகுந்த அறுவெறுப்பாக உணர்ந்தாள். சுவரிலேயே பல தடவைகள் கையைத் தேய்த்தாள். ஏனைய நாட்களில் சுவரை அழுக்காக்க வேண்டாம் என மகனை மிரட்டுபவள் அவள்.


         அவளது கணவன் சேறாலும் சகதியாலும் மூடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மிகவும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டை விட்டுச் செல்லும்போதே வயல்வெளியின் மத்தியில் செல்லும் பாதை கழுத்தளவு நீரில் மூழ்கிப் போயிருந்தது. அவர்களை கடற்படையின் படகொன்று வந்து வெள்ள நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றது. எதையுமே எடுத்துச் செல்ல வழியிருக்கவில்லை. வாழ்நாளில் பாடுபட்டு வாங்கிய தமது முதல் வாகனத்தை வீட்டிலேயே விட்டுச் செல்ல அன்று நேர்ந்தது. இப்போதும் பஸ் செல்லும் தெருவுக்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் சேற்றில் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். அயல்வீட்டுத் தம்பி நுவன் வாடகைக்கு ஓட்டும் முச்சக்கரவண்டிக்கும் கூட மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட கதியே நிகழ்ந்திருக்கிறது.


         அவள் தையல் இயந்திரத்தின் போர்வையை அகற்றினாள். தண்ணீர் உள்ளே சென்றிருந்த போதும் சகதி சொற்பமாகவே படிந்திருந்தது. மின்சார மோட்டார் பழுதடைந்திருக்கக் கூடும். புதிய மின்சார மோட்டார் எவ்வளவு விலை வரும் என அவளுக்கு ஒரு கணம் யோசனை எழுந்தது. தைக்கும் புடவைகளை வைத்திருந்த பெட்டியில் படிந்திருந்த சேற்றினிடையே சிறு குழந்தையின் சட்டையொன்றில் பதிக்கப்பட்டிருந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது. கார்ட்டூன் கதாபாத்திரமொன்று தூண்டிலிடப் போகும் காட்சி அங்கிருந்தது.


         சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவேனும் அவளுக்குத் தோன்றவில்லை. சமையலறை ஒரு படிக்கட்டின் கீழாக அமைந்திருந்தது. அதைப் பார்த்தால் தனக்கு மயக்கமே வரக் கூடுமென அவள் அச்சமுற்றாள். கணவன் குளியலறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனது தோளின் மேலாக அவளும் எட்டிப் பார்த்தாள். கழிவறையில் தண்ணீர் வற்றியிருக்கவில்லை.


         ‘கடவுளே, வாழ்நாள் முழுதும் தேடி சம்பாதிச்சது எல்லாமே தண்ணில.. நாங்க திரும்பவும் தலை தூக்குறது எப்படி?” என அவளது வாய் தானாக முணுமுணுத்தது. மாதவிடாய் தோன்றக்கூடிய அறிகுறிகளை இன்று காலையிலிருந்து அவளது உடல் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக சேறும் சகதியும் மூடியிருந்த துண்டுகள், உள்ளாடைகள், சட்டைகள், சேலைகள், கட்டில் விரிப்புகள், தலையணைகள், பிள்ளைகளின் ஆடைகள், கணவனின் ஆடைகள், சட்டிகள், பானைகள், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த மசாலா, மிளகாய்த் தூள்களிட்ட போத்தல்கள் போன்ற இன்னும் பலவும் அவளது நினைவில் தோன்றிக் கொண்டேயிருந்தன.


        இதையெல்லாம் நாம துப்புரவாக்க முடியாது. எனக்கு இங்க இருக்கவும் பயமா இருக்கு.. வாங்க போகலாம்” என்றாள். சுற்றுச்சூழல் முழுவதும் பாழடைந்து, மர்மமான துயரம் நிரம்பி, பரிதாபத்துக்குரியதாகவிருந்தது. வானம் கூட கரிய மேகங்களால் கனத்துப் போயிருந்தது. மீண்டும் பலத்த மழை பெய்யக் கூடும். அமைதியான துயரம் சூழ்ந்து பாழடைந்த அமைதியைக் குழப்பியவாறு வெட்டுக்கிளியொன்று சிறகடிக்கும் ஓசை கேட்டது.


                “நீ போ” என அவளது கணவன் சந்தன கவலை தோய்ந்த கோபத்தோடு கூறுவது கேட்டது.


         நிச்சயமாக அவள் போயாக வேண்டும். பன்னிரண்டு வயதான மகளையும், எட்டு வயது மகனையும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்தாள். கணவனினதோ, அவளதோ ஊர்களுக்குச் செல்லக் கூட அவர்கள் எவரிடமும் நல்ல ஆடைகள் எவையும் இப்போது இல்லையென்பது அவளுக்குத் தோன்றியது. எனினும், அவ்வாறு இலகுவில் விட்டுச் சென்றுவிடவும் முடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையானது கொழும்போடு கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கணவனின் தொழில், அவளது தையல் பணி, பிள்ளைகளின் கல்வி என அனைத்துமே அழுக்கு வாடை வீசும், வடிகான்கள் பெருக்கெடுக்கும், வாகன நெருக்கடியில் இளைப்பாறும், சுவாசிக்கக் கூட முடியாதளவு உஷ்ணமான இக் கொழும்பு நகரத்திலேயே தங்கியிருக்கின்றன.


         மகளுக்கு கழிப்பறைக்குப் போக வேண்டிய தேவையேற்பட்டால் கூட அவள் தனியாக வெள்ள நிவாரண முகாமிலிருக்கும் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. நாலாபக்கமும் மலமும், சிறுநீரும், எச்சிலும், பீடி சிகரெட் துண்டுகளும்  பரந்திருக்கும் அப் பாடசாலைக் கழிப்பறைக்குச் செல்ல விருப்பமற்றதால் மகள் மாத்திரமல்லாது அவளும் கூட அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் மாத்திரமே கழிப்பறைக்குச் செல்கின்றனர்.


            “ஆஹ் தங்கச்சி… இப்ப நாங்களும் இங்கேதான்… நீங்களும் இங்கேதான் இல்லையா?” என மகள் மாலைவகுப்புக்கு போய் வரும் வேளைகளில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டுப் பையன் ஒரு நாள் அவளுக்கும் கேட்கவே கூறியிருந்தான். எனவே மகளின் பாதுகாப்பு குறித்து நயனாவுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது.


        மகனுக்கு தடிமன் பிடித்திருக்கிறது. மூக்கைச் சிந்தித் துடைக்கவேனும் கைக்குட்டையொன்று இருக்கவில்லை. தண்ணீரில் இறங்கி ஓடியாடி நடப்பதால் அவனது கால்களும் அரிப்பெடுத்திருக்கின்றன. பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்த வயதான பெண்மணியும் ஒரு நோயாளி. நீரிழிவுக்கும், உயர் குருதியழுத்தத்துக்கும் மருந்து பாவித்துக் கொண்டிருப்பவளின் அனைத்து நோய் மருத்துவப் பத்திரங்களும் கூட வெள்ளத்தில் போய்விட்டிருந்தன.


         மகனின் ஆரம்பப் பாடசாலையே வெள்ள நிவாரண முகாமாக ஆகியிருந்தது. வகுப்புக்களிலிருந்த பிள்ளைகளின் உபகரணங்கள், புத்தகங்கள், படைப்புக்கள் ஆகியவை முழுவதுமாக சேதமாகிப் போயிருந்தன. பாதிக்கப்பட்ட இம் மக்கள் இம் முகாமிலிருந்து முழுமையாக வெளியேறும் வரைக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை. மகனுக்கென்றால் இப் புதிய அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கிறது.


         எனினும், மஞ்சள் நிற இருள் சூழ்ந்த மின்குமிழ் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும், பூச்சிகளும் நுளம்புகளும் நிறைந்த, மக்கள் முணுமுணுக்கும், இருமும், காரித் துப்பும், குடிகாரர்களின் புலம்பும் ஓசைகளும் நிறைந்த முகாமில், இரும்புக் கால்களைக் கொண்ட பாடசாலைக் கதிரைகள் தரையோடு உரசுவதால் உடைந்து போன தரையின் மீது பன்சலை விகாரையால் தரப்பட்ட அழுக்குப் பாயில் உறங்குவதற்கென படுத்திருக்கும்போது ‘அம்மா, நாங்க நம்ம வீட்டுக்குப் போறது எப்போ?’ என மகன் எப்போதும் கேட்பான்.


            சந்தன கோபத்திலிருந்தான். நிவாரண முகாமுக்குக் கொண்டு வந்து பகிரப்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் பெரிதும் விருப்பமின்றியே வரிசையில் நிற்பான். உணவும், குடிநீரும் தவிர்ந்த வேறெதற்கும் அவன் வரிசையில் நிற்பதில்லை.


         ‘நாங்க பிச்சைக்காரர்களில்ல.. எங்களுக்கு வேறொண்ணும் தேவையில்ல’ என கோபமாகச் சொல்வான்.


         நிவாரணப் பொருட்களைப் பகிரும் குழுவினர் வந்தால் அயல்வீட்டுப் பெண்மணி பிள்ளைகளை மறந்து வரிசையில் முண்டியடிக்கச் சென்றுவிடக் கூடும். உடல் பலம் கொண்ட முரட்டு ஆண்கள் வந்து கொடுக்கப்படுபவற்றைப் பறித்துக் கொண்டு செல்வர். அவர்களில் பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களல்ல என பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறியிருக்கிறாள். பல ஊர்மக்கள் சேர்ந்திருக்கும் முகாம் மிகவும் சிக்கலானது. கிராம சேவக அதிகாரியான பெண்மணியால் மாத்திரம் அச் சிக்கலைத் தீர்ப்பது சிரமமானது.


         பக்கத்து வீட்டு பெண்மணியைச் சூழவும் எப்போதும் நிவாரணப் பொருட்கள் நிறைந்திருந்தன. பால்மா, பருப்பு, மீன் டின்கள், சீனி, தேயிலை, ஆடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், வர்ணப் பெட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவற்றையும் பொலிதீன் பைகளில் சேகரித்து வைத்திருந்தாள். அவள் பாவாடை சட்டை அணிபவள். எனினும் மகளிர் அமைச்சினால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருந்த இளம்பெண்களின் உள்ளாடைகளையும் ‘மகளுக்குக் கொடுக்கலாம்’ என இலவசமாக வாங்கி வைத்திருந்தாள். மகள் வந்து நிவாரணப் பொருட்கள் நிரம்பிய பொதிகளை வாங்கிச் சென்றாளே தவிர, தாயை தன்னோடு  கூட்டிக் கொண்டு போகவில்லை.


         அயலில் வசித்து வந்த திலினி இப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலையில் சென்று தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவள் அங்கு சென்றால் அவளது ஏனைய இரண்டு குழந்தைகளையும் அவளது கணவனே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பிறகு வெள்ளத்தில் சிக்கியுள்ள அவர்களது வீட்டை துப்புரவு செய்வது யார்?


         ‘கீழே படுக்க, உட்கார, எழுந்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா’ என திலினி எப்போதும் கூறுவாள். முகாமில் ஆடை மாற்றுவதில் கூட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மோசமான ஆண்களின் காமப் பார்வை எல்லாப் புறத்திலிருந்தும் மின்சார விளக்குகளைப் போல பளிச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன. எவ்வாறாயினும் அதுதான் இப்போது இவர்களின் இருப்பிடம்.


         “நாங்கள் போவோம்” எனக் கூறியவாறு நயனா தனது கணவனின் கையைப் பிடித்தாள்.


         “நீ போ… என்னால முடியாது” என அவன் கையைத் தட்டி விட்டான்.


         இப்போது அவன் மிகவும் கோபமுற்றிருக்கிறான். முகாமில் ஒருவன் திடீரென கதிரைகளைக் கீழே தள்ளிப் பாய்ந்து தனது மனைவியைத் தாக்கியதை அவள் நேற்று காண நேர்ந்தது. ஏனையவர்கள் அவனைப் பிடித்து வேறு புறத்துக்கு இழுத்துச் சென்றனர். குழப்பத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி சப்பாத்துக் கால்களுடன் நயனாவின் பாயை மிதித்தவாறு கடந்து சென்றார். அந்தச் சப்பாத்துக்களில் என்னென்ன அழுக்குகள் மிதிபட்டிருக்கக் கூடும்?


         முகாமுக்குச் சென்ற நாளிலிருந்து குளிக்கவில்லை. பாடசாலையில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயினருகே கால்களில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு சேறு நிறைந்திருந்தது. அவளது தலை அரிப்பெடுத்தது. தலைமயிர்களிடையே விரலை நுழைத்துப் பார்த்தாள். அழுக்கு எண்ணெய்ப் பிசுக்கு அங்கிருந்தது. கால்களும் அரிப்பெடுத்தன.


             “மகளை நினைச்சாப் பயமாயிருக்கு… வீட்டைத் துப்புரவாக்க உதவுங்கன்னு, உதவிக்கு வந்திருக்குற அந்தத் தம்பிகள்ட சொல்லுவோம். வாங்க இப்ப போகலாம்.”


         மகளின் நிலையைப் பற்றிச் சொன்னதும் சந்தனவின் மனம் மாறுவதை நயனா உணர்ந்தாள்.


- அஜித் பெரகும் திஸாநாயக
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
மொழிபெயர்ப்புச் சிறுகதை
(சிங்கள மொழிச் சிறுகதை)

நன்றி - விடிவெள்ளி வார இதழ், மலைகள், வல்லமை, தமிழ் எழுத்தாளர்கள், பதிவுகள்

No comments: