Wednesday, August 10, 2016

பூனையாகிய நான்…


உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

உங்களைப் போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப் போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப் போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

- தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்


   ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

     பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

     பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - நவீன விருட்சம், வல்லமை, இனியொரு, று, பதிவுகள்

Wednesday, July 27, 2016

சித்திரவதைச் சிறைப் பெண்ணின் உண்மைக் கதை

2005 ஆம் ஆண்டு வேனிற்பருவ காலத்தில் ஒரு மாலைநேர விருந்து வைபமொன்றின் போது நாம் ஒரு ஈரான் நாட்டுத் தம்பதியைச் சந்தித்தோம். நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் பல விடயங்களைக் கதைத்தோம். எமது அன்றாட செயற்பாடுகள் குறித்து, எமது தொழில்கள் குறித்து, பிள்ளைகளின் கல்வி குறித்து நாம் நிறையக் கதைத்தோம். நாம் முற்றத்தில் வைத்து இரவுணவை அருந்தினோம். இரவில் குளிர் அதிகரித்தபோது இனிப்புக்களை எடுப்பதற்காக நாம் ஹோட்டலின் உள்ளே சென்றோம்.

எமக்கு கோப்பி வழங்குகையில் பணிப்பெண் என்னுடன் கதைக்கத் தொடங்கினாள். அவள் என்னை நன்கறிவாள். எனது புத்தகம் எப்பொழுது வெளிவருகிறதென அவள் என்னிடம் வினவினாள். ஈரானியப் பெண்ணுக்கு எனது புத்தகத்தின் கதை சுவாரசியமானது. அவரது பெயர் ஃபரீஸா. புத்தகத்தைப் பற்றி அவர் என்னிடம் கேட்டார்.

"16 வயதில் சிறைக்குச் சென்ற நானொரு அரசியல் சிறைக் கைதி. எவீன் சிறைச்சாலை. நான் அந்த வாழ்க்கை பற்றி புத்தகமொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.

ஃபரீஸா கொஞ்ச நேரம் அமைதியாக எனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மெதுவாகச் சொன்னார். "நானும் சில மாதங்கள் எவீன் சிறைச்சாலையில் இருந்தேன்."

எம்முடனிருந்த அனைவருமே அமைதியானார்கள். அனைவரும் எம்மிருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் பார்த்தால் நானும் ஃபரீஸாவும் எவீன் சிறைச்சாலையில் ஒரே காலப்பகுதியில்தான் இருந்திருக்கிறோம். இருபுறத்திலுள்ள இரு அறைகளில் இருந்திருக்கிறோம். எமதிருவரதும் வேதனை மிகுந்த ஞாபகங்களோடு எம்முடன் சிறையிலிருந்த தோழிகள் குறித்தும் கதைத்தோம்.

"எவருமே அவ்வாறான அனுபவங்களை வெளிப்படையாகக் கதைக்க விரும்ப மாட்டார்கள்" ஃபரீஸா கூறினார்.

"நானும் இருபது வருடங்களுக்குப் பிறகு அச் சம்பவங்களைப் பற்றி ஒருவருடன் கதைத்த முதல் சந்தர்ப்பம் இது."

நான் சிறையிலிருந்து விடுதலையானதன் பிற்பாடு எமது குடும்பத்தினர் அனைவரும் ஏதோ அவ்வாறான எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல அவற்றை மறந்துவிட்டிருந்தனர். எவருமே சிறைச்சாலையைப் பற்றி ஞாபகப்படுத்தவில்லை. அங்கு என்ன நடந்தது எனக் கேட்கவுமில்லை. சிறைச்சாலை வாழ்க்கை பற்றிக் கதைப்பது எனக்கும் வேதனையாக இருந்தது.

சிறைக்குச் செல்ல முன்பு இருந்த அந்த அப்பாவிப் பெண்ணைக் காண்பதே எனது குடும்பத்தினருக்குத் தேவையாக இருந்தது. எனவே எவரும் எனது ஞாபகங்களைக் கிளறவில்லை. அவர்கள் அப் பயங்கரமான கடந்த காலத்தைப் புதைத்து விட்டனர்.

ஃபரீஸா என்னுடன் பல தடவைகள் தொலைபேசி மூலமாகக் கதைத்தார். நாம் எம்முடைய ஞாபகங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொண்டோம்.

சில வாரங்களின் பின்னர் ஃபரீஸா என்னை அழைத்து அவ் வாழ்க்கை குறித்து இனிமேல் கதைக்க விரும்பவில்லை எனக் கூறினார். சுருக்கமாக அது குறித்து நினைவுகூரக் கூட விரும்பவில்லை என்றார்.

"என்னால் அந்த வேதனையை நினைவுபடுத்த முடியாது" என அழும் குரலில் அவர் கதைத்தார். நான் ஃபரீஸாவைப் புரிந்து கொண்டேன். வாதிடவில்லை. தான் என்ன செய்ய வேண்டுமென ஃபரீஸா தேர்ந்தெடுத்துள்ளார். நான் செய்யவேண்டியவை எனக்கு மீதமாக இருந்தது.

( தற்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், சித்திரவதைச் சிறையில் சிக்கிக் கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் உண்மைக் கதையான 'Prisoner of Tehran: a memoir' மரீனா நிமத்தின் சுயசரிதை நூலிலிருந்து ஒரு பகுதி )
- எம்.ரிஷான் ஷெரீப்

Monday, June 1, 2015

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


இதற்கு முன்னர் ஒருபோதும்
என் போன்ற யுவதியொருத்தியை
சந்தித்ததில்லையென
தம் மனைவியரிடத்தில் சவால்விடுத்தனர்
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

எனது வீடு பரிசுத்தமானதெனச் சொன்னது அவர்கள்தான்
நானுரைத்த எச் சொல்லிலும் தப்பான எதுவுமிருக்கவில்லை
எப்போதும் என்னிடத்தில் அமைதியான தென்றலிருந்தது
எனினும்
அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்

அனைத்து ஆண்களினதும் உரையாடல்கள்
என்னைப் பற்றித் துதி பாடின
அவர்கள் எனது புன்னகையை விரும்பினர்
எனது மடியில்
நவநாகரீகத்தில் ஆர்வம் கொண்டனர்
எனினும்...

அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்


- மாயா ஏஞ்சலோ  
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 - 2014) :

            1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர்.

            தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன. 
  
நன்றி 
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், 
பதிவுகள் இதழ், 
இனியொரு இதழ், 
காற்றுவெளி இதழ், வல்லமை இதழ், வார்ப்பு இதழ்