Sunday, March 22, 2015

குடை


மழை பெய்து கொண்டிருக்கிறது
துளை விழுந்த குடையொன்றுடன்
தெருவைக் கடக்கிறேன் நான்
சிவப்பு விளக்குக்குப் பின்னால்
எனது நெற்றி வரிகளின் மீது கவனத்தைச் செலுத்தும்
ஒரு பெண்ணின் பச்சை நிறப் பார்வை
மழை வடிவம் கொண்டு
இந்தத் தெருவில் கரையக்கூடியது

தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டேயிருக்கிறது மழை
என்னிடமில்லை அந்தக் குடை இப்பொழுது
அந்தப் பெண்ணின் கரங்களில்
அதோ எனது குடை

-ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதை 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் மஹ்மூத் ஃபலாகி (கவிஞர் பற்றிய குறிப்பு)

   
         ஈரான் தேசத்து கஸ்பியன் கடற்பிரதேசத்தை அண்டிய நகரமொன்றில் 1951 ஆம் ஆண்டு பிறந்த கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, தனது ஆரம்பக் கல்வியை ஈரானில் கற்றதோடு பட்டப்படிப்பை ஜேர்மனியில் பூர்த்தி செய்துள்ளார். மன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அவரது ஆட்சிக்கெதிரான அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்ததன் காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கவிஞர் மஹ்மூத் ஃபலாகி, மூன்று வருடங்களின் பிறகு, 1979 ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதோடு, தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

            தொடர்ந்து ஈரானின் திறந்த பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்த இவர், புதிய ஆட்சியில் கவிதைகள் எழுதுவது தடை செய்யப்பட்டு, கவிஞர்களுக்கு ஆபத்தான சூழல் உருவானதால், நாட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 1986 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

            தற்போது பாரசீக மொழி மற்றும் இலக்கியங்கள் சம்பந்தமான விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், கவிதைகள், நாவல், புனைவு, விமர்சனங்கள் என எழுதி, இதுவரையில் கிட்டத்தட்ட 19 தொகுப்புக்களை பாரசீக மற்றும் ஜேர்மன் மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். இவரது கவிதைகள் இதுவரையில் ஆங்கிலம், ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

நன்றி - # அம்ருதா 100 ஆவது சிறப்பிதழ், # மலைகள் இதழ், # வல்லமை இதழ், # பதிவுகள் இதழ், # நவீன விருட்சம் இதழ் # காற்றுவெளி இதழ் # வார்ப்பு இதழ் # தமிழ் எழுத்தாளர்கள் இதழ்