Wednesday, September 18, 2013

எதிரி

    நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை.

    நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்னர் நான் அமைதியாக இருப்பது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே இரத்தத்தில் உண்டான பந்தம் இது.

    நான் 'அத்மகாம்' பாலத்தை நெருங்கினேன். எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப் புறத்தில் அமைந்திருந்தது. அதனை நெருங்க எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். திருடனைப் போல வலதுக்கும் இடதுக்கும் எனது பார்வையைச் செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக் கொண்டு தேசத்தின் எல்லையைக் கடந்து செல்ல முயன்றேன். எனினும், சில அடிச்சுவடுகளைப் பதித்து முன்னேறிச் செல்கையில் பலத்த சப்தத்தோடு கூக்குரலிடும் ஓசையைக் கேட்டேன்.

    'நில்!'

    நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே சிலையாக நின்றேன். முன்னே பார்த்த எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி என்னை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.

    "இந்தியனொருவன்" என எனது முக லட்சணத்தைப் பார்த்த ஒரு இராணுவ வீரன் கத்தினான்.

    "கைது செய் அவனை" என அடுத்தவன் கத்தினான்.

    "இல்லை...இல்லை... ஐயா நான் இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும் இல்லை. நானொரு காஷ்மீர்வாசி. அதோ அங்கே கேரனிலிருக்கும் சிறிய வீடொன்று தென்படுகிறது அல்லவா? அதுதான் எனது வீடு. ஆற்றின் மறுகரையிலிருக்கும் அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது அல்லவா? அங்கேதான் எனது சகோதரன் வசிக்கிறார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவருக்கென்று கூற அங்கு யாரும் இல்லை. அவரது உதவிக்கு யாராவது வரும்படி தகவலொன்று கிடைத்தது. ஐயா, தயவுசெய்து எனக்கு ஒரு அரை மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதெனப் பார்த்து, முடிந்தால் மருந்துகளும் வாங்கிக் கொடுத்து..சிலவேளை அது தண்ணீர் மாத்திரமாகவும் இருக்கலாம்...அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்."

   

எனது கழுத்தில் துப்பாக்கிப் பிடியால் தாக்கப்பட்டேன். எனது இரு பாதங்களுக்குக் கீழே பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன். அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு இழுத்துச் சென்றனர்.

    "இந்தியனொருவன் - எதிரி உளவாளியொருவன்" என இன்னுமொரு இராணுவ வீரன் என்னைப் பார்த்துக் கூறினான். அதனைத் தொடர்ந்து அவர்கள் சித்திரவதைகள் செய்ய ஆரம்பித்தனர். நான் பாகிஸ்தானுக்கு எதிராக வேவு பார்க்க வந்த இந்திய உளவாளியொருவனென வாக்குமூலமளிக்கும்படி அவர்கள் என்னை மிரட்டினர்.

    நான் எதனை வாக்குமூலமளிப்பது? நான் எனது சகோதரனின் எதிரியெனக் கூற இயலுமா?

    எனது சகோதரனின் வீட்டிற்கு அண்மையில் அமைந்திருந்த அவர்களது தலைமையகத்துக்கு அவர்கள் என்னைக் கொண்டு சென்றனர். திரும்பவும் நான் கெஞ்சினேன்.

    "தயவு செய்யுங்கள் ஐயா. எனது சகோதரன் அடுத்த வீட்டில்தான் இருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐயா, எனக்கு கைவிலங்கிட்டாலும் பரவாயில்லை. அதனோடு என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள். அவருக்கு எப்படியிருக்கிறதென விசாரிக்கக் கிடைத்தாலும் போதும்"

    எனினும் அவர்கள் செவிமடுக்கவில்லை. எனது நகங்களைப் பிடுங்கிய அவர்கள், அக் காயங்களின் மேல் உப்பிட்டனர். நான் மயக்கமுற்றேன். எனது சகோதரன் மிகுந்த சிரமத்தோடு சுவாசித்தபடி, தண்ணீர் கேட்டு முனகும் ஓசை எனக்குக் கேட்டது. எனது சகோதரனுக்கு அண்மையில் நான் கொண்டு வரப்பட்டுள்ளேன் என்பதனை நான் உணர்ந்தேன். எனினும் எனக்கு விலங்கிட்டு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தேன். சுற்றிவர எங்கேயுமே தண்ணீர் தென்படவில்லை. கை விலங்கின் கூரிய முனையொன்றில் எனது இடது கையை வெட்டிக் கொண்டேன். கையின் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குருதி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. வலது உள்ளங்கையைக் குவித்து அக் குருதியைச் சேமித்து எனது சகோதரனின் தாகத்தைத் தணிக்க முயன்றேன். எனினும் எனது கைகள் விலங்கிடப்பட்டிருந்த காரணத்தால் எனது சகோதரனின் உதடுகளை என்னால் நெருங்குவது சிரமமாக இருந்தது. இறுதியில் தண்ணீர் கேட்டு இறுதி முனகலொன்றை வெளிப்படுத்திய அவர் அமைதியடைந்தார். நான் அழுது அரற்றினேன்.

    "எல்லாம் முடிந்து விட்டது. ஆண்டவனின் இராசதானி உடைந்து வீழ்ந்து விட்டது. மனித எண்ணங்கள் யாவும் அழிந்து விட்டன. சகோதரனொருவன், தனது சகோதரனுக்கே எதிரியாகி விட்டான்."

    திடுக்கிட்டு எழுந்த நான் இராணுவ வீரர்களின் விழிகளும் கலங்கியிருப்பதைக் கண்டேன். யன்னலினூடே வெளியே பார்க்கும்படி அவர்கள் எனக்குக் கூறினர். நான் அதனைக் கண்ணுற்றேன். எனது சகோதரனின் உடலானது ஒரு சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.

    "என்னைப் போக விடுங்கள். எனது சகோதரனின் முகத்தைப் பார்க்க விடுங்கள். எனது இறுதி மரியாதையைச் செலுத்த விடுங்கள். உங்களுக்குத் தெரியுமா? அவர் எனது சகோதரன்."

    காலஞ்சென்றவர் எனது சகோதரன் என்பதை தாம் நன்கறிவோம் என அவர்கள் கூறினர். எனினும் அவரது இறுதிக் கிரியைகளில் பங்குகொள்ள எனக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர்கள் அறியத் தந்தனர்.

    "எம்மால் எதுவும் செய்ய முடியாது" என அவர்கள் கூறினர்.

    "உங்கள் அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்கிக் கொடுங்கள்" எனத் தாழ்மையாகக் கேட்டேன்.

    "அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது" என அவர்கள் பதிலளித்தனர்.

    "அவ்வாறெனில் அதிகாரிகளின் தலைவர்களிடமிருந்து எனக்கு அனுமதி வாங்கிக் கொடுங்கள்."

    "அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது" என்பதே எனக்குக் கிடைத்த பதிலாக இருந்தது.

    "அதுவும் அவ்வாறெனில் எனக்கு உதவி செய்யக் கூடியவர் யார்? அதிகாரம் யாரிடம் இருக்கிறது?"

    "அது எமக்குக் கூடத் தெரியாது."

- ஏ.ஜி. அத்தார் (காஷ்மீர்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
----------------------------------------------------------------

 எழுத்தாளர் பற்றிய குறிப்பு :

எழுத்தாளர் அப்துல் கனி அத்தார், ஜம்மு காஷ்மீர் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் கவிதைகள், சிறுகதைகள், நாடகப் பிரதிகள் ஆகிவற்றை எழுதியிருக்கிறார். சிறுகதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

நன்றி
# சமூக நோக்கு இதழ் 01, ஜூலை - ஆகஸ்ட் 2013
# விடிவெள்ளி வார இதழ் 12.09.2013
# பதிவுகள்
# திண்ணை
# நவீன விருட்சம்

Tuesday, July 16, 2013

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்


கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
"ரத்து மார்கரெட் நோனா"
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக் கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று  அறுபதாம் தோட்டத்தில்

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)
தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# மகுடம் - கலை இலக்கிய இதழ் 04
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை
# பதிவுகள்

Wednesday, June 5, 2013

மட்டக்களப்பில் வைத்து...

தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…

களப்பில் எப்போதேனும் அலையெழும்.
வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து
நெஞ்சில் அடித்தழுது
தடதடவென்று செட்டைகளை அசைத்து
வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி
நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும்
உறுதியான கணமொன்றில் மாத்திரமே

 தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும்
களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.

கல்லடிப்பாலம்
அரண் போல உயர்ந்து எழுந்தாலும்
தன் தலை கவிழ்ந்து விழி புதைத்து
புன்னகைக்க மறந்து துயர் தாங்கும்
ஓர் தந்தையைப் போல

சிந்தனை மறந்த வாகனங்கள்
பாலத்தை அவசரமாய்க் கடந்து செல்லும்
அர்த்தமற்ற தம் வெளிச்சங்களை
களப்பின் மீது நீண்ட கோடுகளாய்த் தீட்டி

இந்தக் களப்பு அம்மாவைப் போன்றது.
ஆழ்ந்த விழிகளால் மெளனித்து
எல்லாத் துயரங்களையும் தாங்கும்
முகத்தில் அலையெழுப்பும் தென்றலுக்குப் புன்னகைக்கும்
எல்லா ஒளிக்கோடுகளையும் கலக்கும் இணைக்கும்
களப்பின் மார்பு அலைகளையும் சுழிகளையும் உயிர்ப்பிக்கும்.

புத்தரின் நினைவெழும் நிக்கினி போயா கூட – வெறும்
சுண்ணாம்பாய்க் களத்தினுள் கரைகிறது,
புத்தபிரான் சொர்க்கம் நுழைந்த பினர பௌர்ணமியும் – கடும்
இருளாயே இங்கு விடிகிறது.

வசந்தம் உதயமானாலும் உதிக்க மறக்கிறதா சூரியன்?
இது கிழக்கு!

- மஞ்சுள வெடிவர்தன
தமிழில் – ஃபஹீமாஜஹான்


நன்றி
# மகுடம் இதழ் - 03
# எதுவரை
# திண்ணை

Wednesday, May 1, 2013

நவீன தோட்டிகள்


'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
கூரிய பார்வைகளும்
குற்றச்சாட்டுகளும்
குத்தும் ஊசிமுனைகளும்
முடிவற்றவை

தலைக்கு மேலே சூரியனும்
நோயுற்ற தீக் காற்றும்
கொதிக்கச் செய்கிறது குருதியை.
பரம்பரை வழித் திண்ணையும்
செந்தணலாய்ச் சுடுகிறது

காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன
எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள்
'இங்கும் அதே தமிழன்தான்
அங்கும் இதே தமிழன்தான்'
என்கின்றனர்

- விஜய நந்தன பெரேரா
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

Monday, April 1, 2013

சித்தண்டி கண்ணீர்

(மட்டக்களப்பு சித்தாண்டியில், திகிலி வெட்டை அரச பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஒன்பது வயது சிறுமியொருத்தி மூன்று இராணுவ வீரர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டாள். அதனை எதிர்த்த ஊர்வாசியொருவரின் உயிரற்ற சடலம் மறுநாள் தடாகமொன்றிலிருந்து கிடைத்தது.)


திகிலி வெட்டை குளமதில் பூத்த தாமரையொன்றில்
உதிர்ந்த இதழ்களிடையே சிங்கத்தின் உரோமங்கள் சிக்கிக் கிடந்தன
தாமரையில் கண்ணீர் தேங்கியிருந்தது
அது இருளில் கிடந்த
ஆயிரக்கணக்கான விழிகளைத் திறக்கச் செய்தது

கிழக்கில்  உதயமாகிச்  சூரியனும்  உச்சிக்கு வந்தது
ஒளி வழங்காத சூரியனிடமிருந்து இருளே கசிந்தது
வெள்ளை நிற மல்லிகை மொட்டொன்று இருளில் தனித்துப் போனது
மெல்லிய புகைபோன்று சூரியன் கசிந்து கொண்டிருந்தது

வாளினை ஏந்திச் சிங்கம் கொடிதனில் அசைந்தாடியது
இலிங்கத்தை ஏந்தியபடி இராணுவம் எங்கும் அலைந்தது
மல்லிகை மொட்டொன்றை நடுவீதியில் சிதைத்தது
கீதம் பாடும் மீனொன்றை வதைத்துக் கொன்றது

அரசனோ இளவரசனோ ஒப்புதல் தந்தது
அத்துனை எளிதாயிற்றா மகளை சிங்கத்துக்குக் கொடுத்தது
தங்க விதைகளையா இனியும் தேடுவது
சிங்கங்களே இனி உங்களை நாய்களென்றா அழைப்பது

தாய்ப்பால் வாசனை மறவாத அழகிய பூவொன்றுக்கு
தான் விளையாடித் திரியும் ஊர்மனை தொலைதூர இடமில்லை
தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் இருக்கும் பாதையில்
செளபாக்கியமெங்கே சுவாசிக்கக் கூட முடியவில்லை

புற்பூண்டிழந்து போய்க் கிடக்கின்றது சித்தண்டி - அங்கே
மனமெங்கும் வியாபித்திருந்த விஷத்தை மட்டுமா கொட்டினீர்கள்
வாய் திறந்தாலே தர்ம போதனைகளை உரைக்கின்றவர்களே
இந்த நரகக் கிடங்கு உங்களுக்கு அழகாகத் தெரிகிறதா

மூலம்மஞ்சுள வெடிவர்தன
தமிழில்ஃபஹீமாஜஹான்

நன்றி
# மகுடம் இலக்கிய இதழ் - 03
# எதுவரை இலக்கிய இதழ் - மார்ச், 2013
# ஓவியர் நளீம்.