Wednesday, August 16, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 04 - எம்.ரிஷான் ஷெரீப்



  
   இக் கால சிறுவர்களின் ஞாபகங்களில் நவீன காலத் தொற்றுநோய்களான வீடியோ விளையாட்டுக்கள், கைபேசி விளையாட்டு, விளையாட்டு மின்சாதனங்கள் எனத் தமக்குள் மாத்திரம் குறுகிய விளையாட்டுக்களே வரக்கூடும். எனினும், 1990 ஆம் ஆண்டுகளிலும், அதற்கு முன்பும் சிறுவர்களாக இருந்தவர்களிடம் அவர்களது பால்ய காலங்களைக் குறித்துக் கேட்டுப் பாருங்கள். மிகவும் இனியதான, பலவிதமான அனுபவங்களை சுவைபடக் கூறுவார்கள்.

     அப் பால்யத்தில் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்குமென பலவிதமான விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. அவையெல்லாம், தாலாட்டுக்களைப் போல வழக்கொழிந்து போயுள்ள இக் காலத்தில், அவற்றை நினைவுகூர்வது கூட சந்தோஷத்தையே அளிக்கிறது அல்லவா?

     இலங்கையில் ஒரு காலகட்டம் இருந்தது. அக் காலகட்டத்தைத் தமது சிறு வயதில் சந்தித்தவர்களுக்கு, இனிமையான, மீண்டும் நினைத்துப் பார்க்க உகந்ததான பால்ய கால நினைவுகள் அமையவில்லை. இலங்கையின் வடக்குகிழக்கில் இந்திய அமைதிப்படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

     தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றி வைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும், மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள்தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும்படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும், எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல்வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.

           கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத் தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன.  தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப் பூனைப்படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் மீண்டு வர மாட்டார்கள்.

     இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம், கீழேயுள்ள சிங்களக் கவிதை. வாசித்துப் பாருங்கள், வெகுதொலைவிலுள்ள கிராமமொன்றிலிருந்து, கலகம் செய்தாரென சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் தனது தந்தையைப் பார்க்க வந்து செல்லும் சிறுவனை.

சிறுவன்

முடிவேயற்று மிகவும் நீண்ட
அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த


காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில்
சாயத் தேனீர் குடித்த


அப்பாவைத் தேடி அம்மாவுடன்
*பூஸாவுக்குச் சென்ற...


கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை
பையன்கள் பறித்துப் போகையில்
அவர்களுக்கொரு பாடம் புகட்டிட
அப்பா இல்லாததால்
உதடுகளைக் கடித்து
பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட...

ஒருபோதும் தான் காண அழாத அம்மா
மறைவாக அழுவதைக் கண்டு
உறங்காமல்
உறங்குவது போல் தலையணை நனைய அழுத...


ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை
இரவுப் பூக்கள் மலரும் விதத்தை
நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை
தன்னந்தனியாகப் பார்த்திருந்த...


எவ்வளவு துரத்தியும் போகாத
அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன்
இருக்கிறான் இன்னும்


நள்ளிரவில் விழித்து அவன்
அவ்வப்போது தனியாக அழுகிறான்


ஈரமாகிறது எனது தலையணை
****

*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

     தனது துயரம் சூழ்ந்த பால்யத்தினை நினைத்து வருந்தி இவ்வாறு சிங்களமொழியில் கவிதையெழுதி இருப்பவர் கவிஞர், எழுத்தாளர் இஸுரு சாமர சோமவீர. இலங்கையில் வித்தியாசமான அக உணர்வுகளைக் கொண்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் பாடுபடும் இஸுரு சாமர சோமவீர, சிங்களக் கவிதையுலகில் புரட்சியொன்றைக் கிளப்பியுள்ள, கவிதைகள் மூலமாக உரிமைகளைக் கோரும் கவிஞராக அறியப்பட்டுள்ளார். கவிதைகள் மற்றும் சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

     நம் வருங்கால சந்ததியினரது பால்யத்துக்கான சூழ்நிலை நமது கையில்தான் இருக்கிறது. இனிதான பால்யம் எல்லோருக்கும் வாய்க்கட்டும். வாய்க்க வழி செய்வோம்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்



No comments: