Wednesday, December 19, 2012

எனது குடும்பம்

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா                         
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்
விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்
பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து
இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்

எமக்கென இருக்கிறது
நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று

- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் - 05, செப்டம்பர் 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# திண்ணை 

# Artist - Roshan Dela Bandara

Saturday, December 1, 2012

என்னை மன்னித்து விடு குவேனி

மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய
கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில்
இப்பொழுதும்…
அதிர்ந்து போகிறதென் உள்மனது

தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான்
நினைவிருக்கிறதா அந் நாட்களில்
தாங்கிக்கொள்ள முடியாத குளிர்
விசாலமாக உதித்த நிலா

பொன் நிற மேனியழகுடன்
எனதே சாதியைச் சேர்ந்த
எனது அரசி
எமதிரட்டைப் படுக்கையில்
ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக

குழந்தையொன்றை அணைத்தபடி
அரண்மனை மாடியில் நின்று
கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற
கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்

இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது
அம் மோசமான நிலா
மண்டபத்திலிருந்து
மயானத்தின் பாழ்தனிமையை
அறைக்குக் காவி வருகிறது

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# உயிர்மை
#  திண்ணை
# பதிவுகள்

Saturday, November 17, 2012

பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

சந்திரசோம
நீ காலமானதும்
பத்மினி அழவில்லை
வேறு பெண்களென்றால்
நிலத்து மண் தின்று
உளறி உளறி ஓலமிட்டு
ஒப்பாரி வைத்தழுது
துயருறும் விதம் நினைவிலெழ
பத்மினி உன்னை நேசிக்கவில்லையென
கவலை கொண்டாயோ சந்திரசோம

எனினும்
நீயறியாய் சந்திரசோம
மூன்று நான்கு மாத காலத்துக்குள்
பேச்சு வார்த்தை குறைந்து
நடக்கவும் முடியாமல் போய்
திடீரெனச் செத்துப் போனாள்
பத்மினி

- தக்ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் - 05, செப்டம்பர் 2012
# திண்ணை

Sunday, November 4, 2012

சிறுவன்

முடிவேயற்று மிகவும் நீண்ட

அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த,
காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில்
தேயிலைச் சாயம் குடித்த,
அப்பாவைத் தேடி அம்மாவுடன்
*பூஸாவுக்குச் சென்ற...

கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை
பையன்கள் பறித்துப் போகையில்
அவர்களுக்கொரு பாடம் புகட்டிட
அப்பா இல்லாததால்
உதடுகளைக் கடித்து
பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட...

ஒருபோதும் தான் காண அழாத அம்மா
மறைவாக அழுவதைக் கண்டு
உறங்காமல்
உறங்குவது போல் தலையணை நனைய அழுத...

ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை
இரவுப் பூக்கள் மலரும் விதத்தை
நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை
தன்னந்தனியாகப் பார்த்திருந்த...

எவ்வளவு துரத்தியும் போகாத
அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன்
இருக்கிறான் இன்னும்
நள்ளிரவில் விழித்து அவன்
அவ்வப்போது தனியாக அழுகிறான்

ஈரமாகிறது எனது தலையணை

*பூஸா - இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

- இஸுரு சாமர சோமவீர
- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் 35 - ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்
# பதிவுகள் 

Friday, October 19, 2012

ஏதோவொன்று

வருவதையும் போவதையும்
கூற முடியாத
குளிரொன்றைப் போன்ற அது
தென்படாதெனினும் உணரலாம்
எம்மைச் சுற்றி இருப்பதை

அது எம்மைத் தூண்டும்
கண்டதையும் காணாதது போல
வாய் பொத்தி, விழிகள் மூடி
ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க

பசியின் போதும்
குருதி பீறிடும் போதும்
அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும்
அமைதியாக
சடலங்களின் மேலால் பாய்ந்து
நாம் வேலைக்குச் செல்லும் வரை

அது
என்னது?
எங்கிருந்து வந்தது?

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் 35 - ஜூலை 2012
# எதுவரை
# உயிர்மை
# திண்ணை

Monday, October 15, 2012

வழி தவறிய கவிதையொன்று

நடுச்சாமத்தில்
உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே
மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்
அறியா வெளிகளுக்கும்.

‘டொக் டொக் டொக்’
யாரது? உள்ளம் கேட்கும்

‘யார் நீ?’
உரத்த குரலில் வினவுகிறேன் நான்.

‘நான். வந்து… வந்து…
வழி தவறிய கவிதையொன்று.
கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’

கவிதையொன்றாம்.
வழி தவறி விட்டதாம்.
திறப்பதா கதவை?
எனது கதவைத் திறக்காது விடின்
வழி தவறிப் போகும் கவிதை.
கதவைத் திறப்பின்….
வழி தவறிப் போவேன் நான்.

பரவாயில்லை வருவது வரட்டும்.
மெதுவாகக் கதவைத் திறந்து
கவிதை உள்ளே வர விடுகிறேன்.
எப்படியும் எந்நாளும்
எனதிதயம் வழிதவறிக் கொண்டுதானே இருக்கிறது

- டீ.திலக பியதாஸ
தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை

Friday, October 5, 2012

சினேகிதனொருவன்

சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு
ஒரு பயனுமற்ற பொறுக்கியென
அனேகர் கூறும்படியான

அவ்வப்போது நள்ளிரவுகளில்
பயங்கரமான கனவொன்றைப் போல
உறக்கத்தைச் சிதைத்தபடி
வருவான் அவன் எனதறைக்கு

வடையொன்றை, கடலைச் சுருளொன்றை
எனது கையில் திணிக்குமவன்
வரண்ட உதடுகளை விரித்து
குழந்தைப் புன்னகையை எழுப்புவான்

உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு
சிவந்த விழிகளைச் சிறிதாக்கி
புரியாதவற்றை வினவுவான்
எனது தோள்களைப் பிடித்து
பதிலொன்றைக் கேட்டு
இரு விழிகளையும் ஊடுருவுவான்

அத்தோடு எனது தோள்மீது
அவனது தலையை வைத்து
கண்ணீர் சிந்துவான்

நிறுத்தும்படி கேட்கும்
எனது பேச்சைச் செவிமடுக்காது
ஒரு கணத்தில் இருளில்
புகுந்து காணாமல் போவான்

பகல்வேளைகளில் வழியில்
தற்செயலாகப் பார்க்க நேர்கையில்
தெரியாதவனொருவனைப் போல
என்னைத் தாண்டிச் செல்வான்

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்


நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35, ஜூலை 2012
# மலைகள் இலக்கிய இதழ்
# உயிர்மை
# திண்ணை 
# பதிவுகள் 

Saturday, September 22, 2012

கருப்பு விலைமகளொருத்தி


வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில்
நான் சந்தித்த விலைமகள்
மிகவும் அகங்காரத்துடனும்
அழகுடனும்
கருப்பாகவுமிருந்தாள்


காலையில் நாம் உணவுக்காகச் செல்லும்
உணவகத்தின் இன்னுமொரு மூலையில்
பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள்
அவளது வயிறு மேடிட்டிருப்பதை
கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன்
கருவுற்றிருந்தாள்
பசியகன்றதும்
மரத்தடிக்குச் சென்றாள்


நாள்தோறும் சந்திக்க நேரும்
அவ் வதனத்தை
எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்
வங்கி முன்னாலிருக்கும்
ஒரேயொரு சிறு நிழல் மரம்
அவளது இருப்பிடம்
ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான
அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பாள்
இன்னும் சிறு குழந்தைகள் இருக்கக் கூடும்இறுதி நாளில்
நான் விசாரித்தேன்
உணவக முகாமையாளரிடமிருந்து
சில தகவல்கள் கிடைத்தன
'ஆம். அவள் கருவை அழித்துக் கொண்டாள்
இப் பக்கத்து ஆட்களல்ல.'


கவலையோடு சேர்த்து கோபமும் எழுந்ததன்
காரணம் எனக்குத் தெரியும்
என்னால் அப் பெண்ணின் உள்ளத்தைப்
புரிந்துகொள்ள இயலாது
வயிறு நிறையச் சாப்பிட்டு
செய்வதறியாது
எழுந்து நடந்தேன்


- குமாரி பெர்னாந்து, 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# மலைகள் கலை, இலக்கிய இதழ்
# உயிர்மை
# ஊடறு
# திண்ணை 

Sunday, September 9, 2012

பாற்சிப்பிகள்


சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும்
மென்மையான பாற்சிப்பிகளை
உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை
ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை
அச்சமா???

எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம்
இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே…                                               
எல்லையில் வானும் கடலும்
இணையாதென்பது குறித்து நன்கறிந்தும்
ஏன் பொய்யான கனவுக் கவிதைகள்
கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?

சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை
கடலுக்குள் இறங்காமல்
கரையில் சுகமாக இருந்துகொண்டு…

- இஸுரு சாமர சோமவீர, 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# எதுவரை - இதழ் 04, ஆகஸ்ட் 2012
# உயிர்மை
# திண்ணை 

Thursday, August 2, 2012

சேட்டைக்காரக் கறுப்புப் பெண்


அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து 'சேட்டை'ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் செய்திருந்த அலங்கோலம்! அது எவ்விதத்திலும் என் மனதைக் கவரவில்லை. காதுகளில் தொங்கும் பெரிய காதணிகள்! அவற்றுக்கும் நான் விருப்பமில்லை. கூடாரத் துணியால் தைக்கப்பட்ட இறுக்கமான காற்சட்டையும் அதற்குப் பொருத்தமான மேற்சட்டையும் அவளது விருப்பத்துக்குரிய ஆடைகள். எனவே வெளித்தோற்றத்திலேயே எனக்கு அவளைப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனாலும் அவளிடம் மிக அழகானதொரு புன்னகையொன்றிருக்கிறது. அது எவரிடமும் அபூர்வமாகக் காணக் கிடைக்கும் நேர்மையானதொரு புன்னகை. எவ்வாறாயினும் எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.

அவளது நடவடிக்கைகளும் எப்பொழுதும் என் மனதைக் கவரவில்லை. இவ்வாறான கல்வி நிலையங்கள் இருப்பது கற்பதற்குத்தான். அவளுக்கு, அளவுக்கதிகமாக கூச்சலிடும் உற்சாகமான நண்பர்கள் இருந்தனர். அவர்களிலும் அதிகப்படியாக இருந்தவர்கள் பையன்கள்தான். அவர்களுக்கு அதிக வேலையில்லை. நான் மிகுந்த கவனத்தோடும் தேவையோடும் படித்துக் கொண்டிருக்கும்போது கூட அவர்கள் வேடிக்கையாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்கள். கொண்டாட்டம், கொண்டாட்டம் முடிவேயில்லாத கொண்டாட்டம். நான் அவர்களிலொருவனாக இல்லாதது குறித்து மகிழ்கிறேன். நான் தனியாகவே படிக்கின்றேன். கல்வி கற்கவே இது போன்ற கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

ஓர் நாள், அவள் ஓரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விதத்தை நான் கண்டிருக்கிறேன் அல்லவா. அவன் அவளது சகோதரனாக இருப்பதற்கும் அனேக இடமிருக்கிறது. ஆனாலும் அவன், அவளது காதலர்களுள் ஒருவனாக இருப்பானென்றே நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு எண்ணுவதற்கே நான் மிகவும் விரும்புகிறேன். அவளுக்குப் பல காதலர்கள் இருக்கக் கூடும்.

நான் வகுப்பு முடிந்து, வீட்டுக்குப் போவதற்காகப் பேரூந்தில் ஏறினேன். அவளும் அதே பேரூந்தில் ஏறினாள். உள்ளே காலியாக இருந்த ஒரேயொரு இருக்கையில் நான் அமர்ந்தேன். அதே ஆசனத்தில் எனது வலது பக்கத்தில் அவள் அமர்ந்தாள். நான் யன்னலினூடாக தூரத்தே பார்வையைச் செலுத்தினேன். பேரூந்து நகரத் தொடங்கியது. சிறிது தூரம் பயணித்துக் கொண்டிருக்கையில், நடத்துனர் வந்து பணம் கேட்டார். அவள் பணம் கொடுக்க முற்படுகையில் ஐந்து ரூபாய் நாணயமொன்று அவளது கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து உருண்டு வந்து எனது இரு பாதங்களினருகில் நின்றது. நான் அதைக் காணாதது போல இருந்தேன். அவள் என்னையும் நாணயத்தையும் மாறி மாறிப் பார்க்கும் விதம் எனது ஓரக் கண்ணில் தெரிந்தது. 'தேவையிருந்தால் கேட்கட்டும்.' நான் அப்படியே இருந்தேன். சிறிது நேரத்தில் அவளும் அது குறித்த எண்ணத்தைக் கை விட்டிருக்கக் கூடும்.

கொஞ்ச தூரம் போய்க் கொண்டிருக்கும்போது சிறுவர்கள் இருவர் பேரூந்தில் ஏறினர். ஒரு சிறுமியும் ஒரு சிறுவனும். அவர்கள் அமர்வதற்கு இடமொன்றைத் தேடினர். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். எனக்கென்றால் அவர்களிடம் எந்த விஷேசமும் தென்படவில்லை. பொதுவான வகைப்படுத்தலுக்கமைய அவர்கள் துர்நாற்றம் வீசும் சிறு விலங்குகள். அவள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் புன்முறுவலொன்றைத் தேக்கி பார்த்துக் கொண்டேயிருந்தாள். இதென்றால் பைத்தியமேதான்! சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவர்களை அருகில் வருமாறு தலையால் சைகை செய்தாள். அவர்களும் முந்திக் கொண்டு வந்தனர். அவள் அவர்களை தன்னருகில் அழைத்துக் கொண்டாள். அத்தோடு நின்றுவிடாமல் தன் மடியிலும் அமர்த்திக் கொண்டாள்.

ஆகவே அவர்கள் மகிழ்வாகப் பயணித்தார்கள். குட்டிச் சிறுமி ஏதோவொரு பெரிய கதையை சுவைபடச் சொல்லிக் கொண்டிருந்தாள். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அவளைக் கூர்ந்து நோக்கி, மிகுந்த கவனத்தோடு அதற்குச் செவிமடுத்தாள். குட்டிச் சிறுவனும் தன் மழலைக் குரலில் ஏதோ கூறினான். சேட்டைக்காரக் கறுப்புப் பெண் அதையும் மிகுந்த ஈடுபாட்டோடு செவிமடுத்தாள். அவர்களைச் செல்லம் கொஞ்சினாள். நான் இவற்றையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்தபடியிருந்தேன். அவர்களோடு செல்லம் கொஞ்சி விளையாடும் ஆசை எனக்குள்ளும் எழுந்தது. ஆனாலும் நான் மிகுந்த முயற்சியோடு அதைத் தவிர்த்துக் கொண்டேன்.  சேட்டைக்காரக் கறுப்புப் பெண் மீது எனக்கிருக்கும் வெறுப்பினாலோ, எனது பாதங்களுக்கருகிலிருக்கும் நாணயத்தினாலோ நான் அதனைத் தவிர்த்திருக்கலாம். மெல்லிய வேதனையொன்று என்னுள்ளே எழுந்தது. நான் அனுபவிக்காத பேரானந்தமொன்றை அவள் அனுபவிக்கிறாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். நான் துயரத்தோடு இருக்கிறேன்.

கொஞ்ச தூரம் பயணித்த பின்பு சிறுவர்கள் இருவரும் இறங்கிச் சென்றனர். அவர்களது விளையாட்டு முடிந்தது. அடுத்து வரும் நிறுத்தத்தில்  சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணும் இறங்கிப் போவாள். ஆகவே நான் தனித்துப் போவேன். வழமையைப் போன்ற தனிமைக்குள்ளேயே தனித்துப் போவேன். எனக்கு கர்வமளிக்கக் கூடிய, பிரகாசமான, செழிப்பான எதிர்காலம் நோக்கிச் செல்லும் எனது இப் பயணத்தின் ஒவ்வொரு கணத்திலும் நான் அனுபவிக்கும் வேதனை மிகுந்த தனிமைக்குள்ளேயே மீண்டும் நான் தனித்துப் போவேன். பேரூந்திலிருந்து இறங்கப் போகும் அவளையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு பேரூந்திலிருந்து இறங்கிப் போனாள். நான் எடுத்துக் கொடுக்காத ஐந்து ரூபாய் நாணயம் குறித்து அவள் மறந்திருப்பாளா? அது  இன்னும் எனது பாதங்களுக்கருகில்தான். நான் அதைப் பொறுக்கியெடுத்தேன். நாளைய தினம் அவளைச் சந்திக்கும்போது அதைக் கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்த குழப்பமொன்று என் மனதில் உண்டானது. எவ்வாறாயினும் நாளைய தினம் அவள் புன்னகைத்தால், நானும் பதிலுக்கு புன்னகைப்பேன்.

மூலம் - அனுஷ்க திலகரத்ன
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,  
இலங்கை

நன்றி
# யாத்ரா இதழ் 21 - ஜூன் 2012
# எதுவரை இதழ் 03 - ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை