Tuesday, July 18, 2017

அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 03



   
         இருவரதும் ஜீவித காலத்துக்கும், எத் துயரம் வந்தாலும் இருவரும் ஒன்று சேர்ந்தே இருப்போம் என உறுதி கொண்டு இணையும் பல தம்பதிகள், திருமணத்துக்குப் பிறகு வரும் சிறு, சிறு பூசல்களுக்கும் விவாகரத்து செய்து பிரிந்து செல்லும் மிக மோசமான மனப்பாங்கு அண்மைக்காலமாகப் பரவிவருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனங்களும், ஊடகங்களும் இப் பிரிவுகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.

            தாம் பெற்ற குழந்தைகளது எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொள்ளாது, தம்பதிகள் இருவரும், தமது நலன்களை மாத்திரம் கருத்திற் கொண்டு விலகிச் செல்லும் இப் போக்கு கிராமப்புறங்களை விட, நகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. என்றாலும், நகரங்களை விடவும் கிராமங்களில் இடம்பெறும் இவ்வாறான ஒன்றிரண்டு நிகழ்வுகள் கூட அக் கிராமங்களில் பெரிதாகப் பேசப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, தற்கொலை வரை கொண்டு சென்று விடுகின்றன.

            கதைப்பதற்கு எளிதாகத் தோன்றும் இவ் விடயம், சம்பந்தப்பட்டவர்களது வாழ்க்கையை, அவர்களது இடத்திலிருந்து பார்த்தால்தான் உண்மையான சிக்கல் புரியும். நாட்டில் திருமண மண்டபங்கள் பெருகிவருவதைப் போலவே, விவாகரத்து வக்கீல்களும் தினந்தோறும் பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.

            இனி, விவாகரத்து சம்பந்தப்பட்ட கவிதையொன்றைப் பார்ப்போம். சிங்கள மொழியில் இக் கவிதையை எழுதியிருப்பவர் பெண் கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி.

விவாகரத்தின் பின்னர்

உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது
வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண்
அவளது இரு புறமும்
சிறு குழந்தைகளிரண்டு



கீழே
முற்புதர்கள், கற்சிதறல்கள்
நாகம், விரியன், மலைப்பாம்புகள்
நிறைந்திருக்கும் பாதாளம்
அகன்ற வாயைத் திறந்துகொண்டு



அவளது தலைக்கு மேலே
இரவின் கனத்த இருட்டு
ஊளையிடும்
மழையும் கோடை இடியும்
வெற்றியுடன் ஒன்றிணைந்து



ஏற்றி விட்டவர் எவரோ
இவளை
இந்த மா மலை மீது



மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்தவாறு
அவளைக் கைவிட்டு
அவர்களெல்லோரும் சென்று விட்டாலும்


கீழே மரக் கிளையொன்றில்
மறையக் காத்திருக்கும் சூரிய ஒளியில்
பிசாசொன்றைப் போல காற்றுக்கு அசையும்
இற்றுப் போன புடைவைத் துண்டொன்று



இந்தக் கொடுமையிலிருந்து தப்பித்து
முட்புதர்களை சீராக  வெட்டியகற்றி
பாதையொன்றை அமைத்தபடி
நாளைக் காலையில்
அவள் வருவாளா ஊருக்கு


நாளைய சூரியன் உதிக்கும் வேளை
இருக்குமோ
அவளது ஆடையும்
மரத்தின் கிளையொன்றில் சிக்கியவாறு

****

            கவிஞர் சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி ஒரு வழக்கறிஞர். இலங்கையில் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்து வரும் பெண் சட்டத்தரணி இவர். தமிழை எழுத, வாசிக்கக் கற்றிருக்கிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு சிறந்த இளைஞர் இலக்கியத்துக்கான விருதினை வென்றது. இந்தக் கவிதையும் அத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒன்றாகும்.

            ஒரு தம்பதியினது விவாகரத்து எனப்படுவது, அதனைக் கேள்விப்படுபவர்களுக்கு, ஒரு செய்தியாக மாத்திரமே இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், சமூகத்தில் அதன் பிறகு எதிர்கொள்ள நேரும் இன்னல்கள் அனேகமானவை. தம்பதிகளுக்கிடையேயான சிறிய பிரச்சினைகளுக்குக் கூட, விவாகரத்து எனும் மலை மீது ஏற்றிவிட பலரும் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்றி விட்டுக் கைவிட்ட பின்பு, அம் மலை மீதிருந்து அவர்களால் சகஜ வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினமானதாக இருக்கும்.  இக் கவிதை உணர்த்திச் செல்வது, ஒரு சமூகத்துக்கு மாத்திரமேயான துயரத்தையல்ல.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்


 

No comments: