Wednesday, July 5, 2017

அவர்கள் நம் அயல் மனிதர்கள் - 02



     இன்று நாம் கடந்து வரும் ஒவ்வொரு தெருவும் செப்பனிடப்பட்டு, பயணங்களுக்கு இலகுவானதாக சீராக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், அவற்றுக்கு செலவான நமது அரசாங்கத்தின் பணத்தைக் குறித்தும் விவாதித்துக் கொள்கிறோம். ஆனால் இவற்றைத் தாண்டி, அப் பாதைகளைச் செப்பனிடப் பயன்பட்ட மனித உழைப்பை மிக எளிதாக மறந்து விடுகிறோம் அல்லது கவனத்தில் கொள்ள மறுத்து விடுகிறோம்.

     கொதித்து, உருகி வழியும் தார்வாளியை சுமந்தபடி, கருங்கல் பரப்பிய பாதையில் முழங்கால் வரையில் பொலிதீன் பைகளைக் கட்டியவாறு, சொற்பக் கூலிக்காகக் கடுமையாகப் பாடுபடும் ஒவ்வொரு கூலித் தொழிலாளிக்கும் ஒரு குடும்பமிருக்கிறது. அவ்வாறான ஒரு சூழலிருந்து கலை, இலக்கியத் துறைக்கு வந்து சாதித்துள்ளவர் சிங்கள மொழிக் கவிஞர், எழுத்தாளர் மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல.

     அரச சாகித்திய, இலக்கிய விருதுகளை கவிதை மற்றும் நாவல்களுக்காக வென்றுள்ள இவர், விவசாயத்தையும், கூலித் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்ட கிராமத்தில், உயர்தரம் வரை கற்றுவிட்டு, தொழில் தேடி தலைநகரத்துக்கு வந்தவர். பின்னர், தொலைக்காட்சித் தொடர்நாடகங்களில் மிகவும் கீழ்மட்டத்திலிருந்து தனது பங்களிப்பை வழங்கி, கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறி, சிறந்த உதவி இயக்குனருக்கான அரச விருதினையும் வென்றுள்ளார்.

     வியட்நாமில் நடைபெற்ற தெற்காசிய கவிஞர்கள் மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டு சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தான் வறுமையில் வாடிய சிறுபராயத்தில், பாடசாலைக் காலங்களில் இலக்கியத்தினால், கவிதைகளினால் இந்தளவு கௌரவிக்கப்படுவோமென எதிர்பார்த்தும் இருக்கமாட்டார் இல்லையா? அந்த வகையில், இக் காலத்தில் வறுமையோடு எழுதி வரும் பலரும் இவரை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

     இனி, இவரது கவிதையொன்றைப் பார்ப்போம். நகர மைதானங்களிலும், மேடை இசைக் கச்சேரிகளிலும் ஏன் திரைப்படங்களிலும், பாடல்களுக்கு நாயகர், நாயகி, பாடகரோடு பாதி உடையில் நடனமாடும் இளம்பெண்களைப் பார்க்கிறோம். அவர்களது பூச்சு தடவிய முகங்களை, அழகான உடல்களை, அங்க அசைவுகளை ரசிக்கும் எத்தனை கண்கள் அவர்களது சிரமமான வாழ்வியலைக் குறித்துக் கவனிக்க முற்பட்டிருக்கின்றன? 


ஓர் மடல்

*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்


விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவுமுழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்


உடலழகு தொலைந்துவிடுமென்று
இரவுணவையும் தருகிறார்களில்லை
இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்
அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்


பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்
ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும் மேலதிகமாக
ஆனாலும்
மூட்டுக்களிலும் முதுகெலும்பிலும் வலியெடுக்கும்


புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்
கவரப்பட்ட செல்வந்தனொருவன்
பரிசுகள் தந்திட அழைக்கிறான்
நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்


விழா நாட்களில் எனக்கு எனது
அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன
உண்மைதான் சில விழிகளில்
பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்


ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க
நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது
ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்
வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்


அம்மாவின் மருந்துகளையும்
அப்பாவின் திதிக்கான பொருட்களையும்
வாங்கத் தேவையான பணத்தை இதோஅம்மா
இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்


சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து
எப்பொழுதேனும் மகள் வருவாளென
வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி
அம்மாபார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது

** நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி - கிராமிய ஆடல், பாடல்வகைகள்

     பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக் கவிதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடனத் திறமையை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண், தனது தாய்க்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. நகரங்களின் தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்

 

No comments: