Monday, April 5, 2010

சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில்
தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம்
நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும்
இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில்
கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும்
பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத
எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய
பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும்
இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக்
கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்
துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்
எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்
சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


நன்றி
# சொல்வனம் இதழ் - 20
# கூடு இலக்கிய இதழ்
# உயிர்மை
# நவீன விருட்சம்



4 comments:

ISR Selvakumar said...

மொழிபெயர்த்தது போலவே தெரியவில்லை.
அபாரம்...
நேரடியாக உங்கள் மனவெளியில் இருந்து வழிந்தது போல இருக்கிறது இந்தக் கவிதை.

நிறைய இன்னும் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துகள்!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் செல்வக்குமார்,

//மொழிபெயர்த்தது போலவே தெரியவில்லை.
அபாரம்...
நேரடியாக உங்கள் மனவெளியில் இருந்து வழிந்தது போல இருக்கிறது இந்தக் கவிதை.

நிறைய இன்னும் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துகள்!//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மிகவும் மகிழ்வினைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Swaminathan said...

miga arumaiyana mozhi peyarppu. valigalin vedhanaiyai varigal moolam theriyavikkiraar rishaan. valthugal.

Velan said...

rishaan sherifeen mozhi peyarppu kavithaikku melum azhagoottugiradhu. valthugal.