Monday, January 1, 2018

அவர்கள் நம் அயல் மனிதர்கள் 09 – எம்.ரிஷான் ஷெரீப்




    காதலும் அன்பும் நேசமும் அனைத்து உயிர்களுக்குமே பொதுவானது. அந்த உணர்வுதான் ஒவ்வொன்றையுமே இவ்வுலகில் ஜீவிக்கச் செய்கிறது. வாழ்க்கை மீது பேராவல் கொள்ளச் செய்கிறது. தினமும் வாழ நேரும் புதுப்புது மாற்றங்களுடனான வாழ்வில், சக உயிரிடமிருந்து மாறாத அன்பைப் பெறுவது ஒரு பாக்கியமன்றி வேறென்ன?

     சகல வசதிகளும் காலடியில் கிட்டக்கூடிய இக் காலத்தைப் போலவன்றி, அக் காலத்தில் தொலைதூரம் சென்ற தம் அன்புக்குரியவர்களுக்கு கடிதம் எழுதியனுப்பி விட்டு, அதற்கு பதில் கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுதும் கூட அந்த அன்பைக் குறித்து சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அவர்களை அவ்வாறு காத்திருக்கச் செய்ததுவும் ஒரு ஆத்மார்த்தமான அன்புதான் இல்லையா?

     தாய் - சேய் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான அன்பு போலவே யார்,  எவரென்றே அறியாது ஏதோவொரு சந்திப்பின் போது அல்லது சடுதியாகக் கிடைத்த தொடர்பொன்றின் மூலம் இருவருக்கிடையில் தோன்றக்கூடிய உறுதியான அன்பும் கூட போற்றத்தக்கதுதான். சமகாலத்தில் உண்மையான அன்புக்கெல்லாம் சாத்தியமில்லை என நேசத்தில் தோற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். உண்மையான அன்பு எங்கும் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பாதுகாக்கத் தேவையான விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும், பூரண நம்பிக்கையும்தான் அரிதாகிக் கொண்டு வருகிறது.

     காதலையும், நேசத்தையும், அன்பையும் தடுப்பது நியாயமற்றது. அது ஒரு காட்டாறு. அதன் போக்கிலேயே பாய விடுவதன் மூலமே அது செல்லும் பாதையெல்லாம் வாடிய பயிர்களைத் துளிர்க்கச் செய்யும். கட்டுப்படுத்துவதன் மூலமோ, நிபந்தனைகளை விதிப்பதன் மூலமோ அதனை அடக்கிவிட முடியாது. எல்லாவற்றையும் மீறி அது பாய்ந்து கொண்டேயிருக்கும்.


எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து
தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று
என்னிடத்தில்


தென்படாத வர்ணக் கறையைப் போல
மிகப் பெரிதாகவும்
கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும்
இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய
நானறியாத ஏதோவொன்று
என்னிடம்


இந்தளவு தனிமை
எங்கிருந்துதான் உதித்ததோ
எனக்குள்ளே மூழ்கிப் போயிருந்த ஒன்று
எப்படி உனக்குரியதாயிற்றோ


எனது இதயத்தின்
எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்
இந்தளவு துயர் தந்து போக?

***

     உறவைப் பிரிந்து விலகிச் செல்பவர், தனக்குரியவற்றையெல்லாம் எடுத்துச் சென்ற போதிலும், அவர் ஏதோவொன்றைத் தவறுதலாக விட்டுச் செல்வதாகத் தோன்றுகிறது. அது நேசித்த மனதை மிகவும் பாரமாக அழுத்துகிறது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் துரத்துகிறது. இவ்வளவு துயரத்தையும்,  தனிமையையும் மீதமாகத் தந்து விட்டுப் போகும் அளவிற்கு,  இத்தனை காலமாக எனது இதயத்தின் எந்த இடத்தில்  நீ ஒளித்துக் கொண்டிருந்தாய் எனக் கேட்கச் செய்கிறது அன்பு.

     இந்தக் கவிதையை எழுதியிருக்கும் கவிதாயினி காஞ்சனா அம்லானி இலங்கையில் பத்திரிகைத் துறையில் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருபவர். சிங்கள மொழியில் சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இவரது புதிய கவிதைத் தொகுப்பான ‘உனதிரு விழிகளும் பூமராங்குகள்’ இம் மாதம் ஏழாம் திகதி சிறப்பாக வெளியிடப்பட்டது.

     இரு ஜீவிதங்கள் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆரம்பிக்கும் காதல், திருமணம் ஆகிய உறவுகளில் அன்பின் நெருக்கம், அப் பந்தங்களை இன்னுமின்னும் நெருங்கச் செய்கிறது. அப் பிணைப்புக்களில் ஏற்படும் பிரிவும், விலகலும் அந்த உள்ளங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்கிறது. கவிதாயினி காஞ்சனா அம்லானியின் இக் கவிதையும் கூட, இதயத்தில் ஆழமான வலியை மீதமாகத் தந்து விட்டுப் போன காதலொன்றைக் குறித்தே அமைந்திருக்கிறது. காதலும், நேசமும், அன்பும் அனைவருக்குமே பொதுவானது. அதன் பிரிவு தரும் வலியும் அவ்வாறுதான்.

- எம். ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே  
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 07 இங்கே      

Tuesday, November 7, 2017

உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று



செய்திஇலங்கை, கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது.




இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க


கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்


சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள் எமது மகள்


தேயிலைச் சாயத்தால் மாத்திரம்
வயிறு நிரம்பும் நாட்கள் அநேகம்
ஒவ்வொரு ரூபாயாகச் சேமிப்பாள்
புத்தகங்களை வாங்கவென
சீருடையும் கூடக் கிழிந்து
கந்தலாகிக் கறை படிந்து கிடக்கையில்
பிளவுண்ட இதயத்தை நிரப்புவது இப்
பெருந் துயரம் மாத்திரமே


வாந்தியெடுக்கும் பட்டினி வயிறுகள்
முடிவற்றவை
பசியை அறியாதவர்களுக்கு அவை
தெளிவற்றவை
மனிதாபிமானமற்ற உயரதிகாரிகளுக்கு
போதுமானவையா பதவிகள் மாத்திரம்
எவரும் எதையும் கண்டுகொள்ளாமல்
வாய் கண் மூடிக் கிடப்பதுவும் விசித்திரம்தான்


இம் மகளே எமதுலகின் ராஜ கிரீடம்
சந்திர சூரியனாக ஒளிரும்
எமது ஆகாயத்தின் பெரு வெளிச்சம்
கலங்கிய நீர்க்குளத்தின் உச்சியில்
எப்போதும் பூத்திருக்கிறாள் எமது மகள்
செந்தாமரைகள் எழுவது சேற்றிலிருந்துதான்


இருக்கக் கூடும் இம் மகளைப் போலவே
அழுது புலம்பும் பல மகள்கள்
இப் பார் முழுதும்
யாருக்கெல்லாம் கேட்கின்றன
அந்த அழுகுரல்கள்?
அதிகாரத்துக்கே எவரும் தலைசாய்க்கும் நிலையில்
நூலிழையில் முடிந்து வைக்கவா
இருக்கிறது நீதி?

- துஷாரி ப்ரியங்கிகா
தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - விடிவெள்ளி, கல்குடாநேசன், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம்

Wednesday, November 1, 2017

அவர்கள் நம் அயல்மனிதர்கள் - 08 - எம்.ரிஷான் ஷெரீப்



     இலங்கையை ஆட்கொண்டிருந்த யுத்த மேகம் அகற்றப்பட்டு வருடங்களாகின்றன. போர் சூழ்ந்த தீவின் தேகம், நோய் நீங்கி படிப்படியாக ஆரோக்கியத்தின் பக்கம் மீண்டு கொண்டிருக்கிறது. பழைய காயங்களின் தழும்புகள் இப்பொழுதும் இருக்கின்றனதான். தேசத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அவற்றைக் காலம் ஆற்றியும், மாற்றியும் விடும். அடுத்தடுத்த தலைமுறைகள் நாட்டின் புது மினுமினுப்பிலும், பளபளப்பிலும் அமர்ந்து இலங்கையின் போர் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

     ஆனாலும், நாம் மறந்து விடக் கூடாத, மறந்து விட முடியாத போர் வீரர்கள் இரு தரப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமது மொழிக்காகவும், தமது மண்ணுக்காகவும், தமது மக்களுக்காகவும் தாம் கொண்ட இலட்சியத்துக்காகவும் எந்தப் பிரதிபலனையும் பாராது தமது உயிர், பலம், இளமை, ஆரோக்கியம் என அனைத்தையும் அர்ப்பணித்து யுத்தம் செய்தவர்கள் ஒரு புறம். வறுமை, வேலை வாய்ப்பின்மை, அரச உத்தியோகம், நல்ல வேதியம், சமூகத் தொண்டு, ஒரே தாய்நாடு போன்ற பல காரணங்களுக்காக அரசாங்கத்தோடு இணைந்து போராடியவர்கள் மறுபுறம்.

     இரு தரப்பினரையுமே போர் மிக ஆழமாகவும், மோசமாகவும் மென்றது. அதன் பற்களில் அகப்பட்டு உயிரோடு எஞ்சிய போர் வீரர்கள் பலரும் தம் வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மக்களது சௌபாக்கிய வாழ்க்கைக்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ அந்த வீரர்களது கண்ணீருக்கும், உயிர்களுக்கும், காயங்களுக்கும் மதிப்பற்றுப் போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இலங்கையின் பெருநகரங்களை விடவும், வறுமை சூழ்ந்த கிராமங்களிலிருந்து தமது வாழ்வாதாரத்துக்காக வேண்டி இராணுவத்தில் இணைந்து போரிட்ட இளைஞர்களே அதிகம். அவர்களுள் பலரும் இன்றும் கூட உடலின் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட அவர்களைப் புறந் தள்ளிவிடும் உலகில், அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மாத்திரமே அவர்களை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்து, வாழச் செய்து கொண்டிருக்கின்றன.

     அவ்வாறாக ஊனமுற்றுள்ள இராணுவ வீரனது ஒரு நாள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது கவிஞர் மஹேஷ் முணசிங்ஹவின் இக் கவிதை.

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்


பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது


'நாட்டைக் காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து


விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்


ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமைமிக்கது


கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்


கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்


நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா


பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்


கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்

****

* பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.

     அரச கட்டளைக்கிணங்க தான், தேடித் தேடிக் கொன்றொழித்த தன் தேச மக்களது ஆத்மாக்கள், நினைவுகள் வழியாக அந்த இராணுவ வீரனை கணந்தோறும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஞாபகங்கள் கொடியவை. யுத்தம் செய்து அங்கவீனத்தோடு மீண்டு வந்துள்ள ஒவ்வொரு போர்வீரனுக்குள்ளும் இவ்வாறான காயங்களுடனான பல ஞாபகங்கள் உள்ளன. அவை ஒரு போதும் ஆற்ற முடியாதவை.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்