இலங்கையை ஆட்கொண்டிருந்த யுத்த
மேகம் அகற்றப்பட்டு வருடங்களாகின்றன. போர் சூழ்ந்த தீவின் தேகம், நோய் நீங்கி படிப்படியாக
ஆரோக்கியத்தின் பக்கம் மீண்டு கொண்டிருக்கிறது. பழைய காயங்களின் தழும்புகள் இப்பொழுதும்
இருக்கின்றனதான். தேசத்தின் ஆயுட்காலம் முடிவதற்குள் அவற்றைக் காலம் ஆற்றியும், மாற்றியும்
விடும். அடுத்தடுத்த தலைமுறைகள் நாட்டின் புது மினுமினுப்பிலும், பளபளப்பிலும் அமர்ந்து
இலங்கையின் போர் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

இரு தரப்பினரையுமே போர் மிக ஆழமாகவும்,
மோசமாகவும் மென்றது. அதன் பற்களில் அகப்பட்டு உயிரோடு எஞ்சிய போர் வீரர்கள் பலரும்
தம் வாழ்நாள் முழுவதும் அங்கவீனர்களாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த மக்களது
சௌபாக்கிய வாழ்க்கைக்காக தமது உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ அந்த வீரர்களது கண்ணீருக்கும்,
உயிர்களுக்கும், காயங்களுக்கும் மதிப்பற்றுப் போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இலங்கையின் பெருநகரங்களை விடவும்,
வறுமை சூழ்ந்த கிராமங்களிலிருந்து தமது வாழ்வாதாரத்துக்காக வேண்டி இராணுவத்தில் இணைந்து
போரிட்ட இளைஞர்களே அதிகம். அவர்களுள் பலரும் இன்றும் கூட உடலின் பாகங்களை இழந்து ஊனமுற்றவர்களாகவே
இருக்கிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட அவர்களைப் புறந் தள்ளிவிடும் உலகில், அவர்கள்
வழிபடும் தெய்வங்கள் மாத்திரமே அவர்களை இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்து,
வாழச் செய்து கொண்டிருக்கின்றன.
அவ்வாறாக ஊனமுற்றுள்ள இராணுவ வீரனது
ஒரு நாள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது கவிஞர் மஹேஷ் முணசிங்ஹவின் இக் கவிதை.
ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும்
முதியோர்
காயமுற்றோர் மற்றும்
நோயாளிகள்
குழந்தைகள் -
வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக்
கண்ணுற்றேன்
பாவங்களை
ஊக்குவிக்கும்
துறவிகளின்
உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும்
கட்டப்பட்டது
'நாட்டைக்
காக்கும்' எனக்கு காவல் கிட்டவென
பிரார்த்தித்த
தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென
தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை
மகிமைமிக்கது
கிராமவாசிகளுக்கு
மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப்
பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத
புத்தர் விழிகள்
கண்ணெதிரே
தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட
மனிதர்கள்
ஆங்காங்கே
வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான்
கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை
இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும்
புன்முறுவல்
தென்படாதிருக்க இரு
விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு
விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட
உயர்த்தாமலிருக்கிறேன்
* பிரித் நூல்
- பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
அரச கட்டளைக்கிணங்க தான், தேடித்
தேடிக் கொன்றொழித்த தன் தேச மக்களது ஆத்மாக்கள், நினைவுகள் வழியாக அந்த இராணுவ வீரனை
கணந்தோறும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. அந்த ஞாபகங்கள் கொடியவை. யுத்தம் செய்து
அங்கவீனத்தோடு மீண்டு வந்துள்ள ஒவ்வொரு போர்வீரனுக்குள்ளும் இவ்வாறான காயங்களுடனான
பல ஞாபகங்கள் உள்ளன. அவை ஒரு போதும் ஆற்ற முடியாதவை.
- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 07 இங்கே
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 07 இங்கே
No comments:
Post a Comment