நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட
நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும் அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப் பறந்து செல்கிறது
நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....
உற்றார் உறவென்று யாருமற்ற
இடையச் சிறுவனொருவன்
இரவுணவாகக் கிடைக்கும் பாதி ரொட்டியையும்
தண்டனையின் நிமித்தம் இழந்தவனாக
தொலைந்து போன மாடொன்றைத் தேடியவாறு
இரவு முழுதும் புதர்கள் தோறும் அலைந்து திரிந்து
உடைந்து போன கரகரத்த குரலெழுப்பி மாடுகளை அழைக்கும் ஓசை
தொலைவில்
ஓடைக்கு அக்கரையிலிருந்து
கேட்டவாறுள்ளது இன்னும்
மூழ்காமல் இருந்திடத் தனது கை கால்களை அடிக்கும் வேளை
நீர்ப்பரப்பு கொந்தளிக்கும் ஓசை
இக்கரையை அடைந்த யாரோ மூச்சு இரைத்தவாறு
ஈரத் துணியொன்றை உதறிப்போடும் சப்தம்,
சிறுதடியால் புதரொன்றுக்கு அடித்தவாறு
மிக அருகே அடிவைத்து வரும் ஒலி,
பெயரைத் தானும் அறிந்திராத தனது தாய் தந்தையரிடம்
துயரத்தைச் சொல்லி தனியே விம்மும்
அந்தப் பிள்ளையின் அழுகைக் குரல்
எதையுமே கேளாதவாறு தூங்கிய எனது அழகிய ஊர்
அன்று போலவே இன்றும் உறங்குகிறது,
நிலா இரவை மரித்தோருக்கென வைத்துவிட்டு.
பதினாறாம் குறிச்சியின் புளிய மரத்தின் கீழே
கரை மீட்டெடுத்துக் கிடத்தப்பட்டிருந்தது
அந்த அனாதைப் பிள்ளையின் சடலம்.
ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.
கூடியிருந்த யாவரும் கலைந்து சென்றதன் பின்னர்,
எஞ்சியிருந்த ஓரிருவர் இணைந்து
வயல்வெளிக்கு அப்பாலுள்ள ஒதுக்குப்புற நிலத்தில் புதைப்பதற்காக
உனது சடலத்தைக் கொண்டு சென்ற வேளை
நானும் பின் தொடர்ந்தேன்
அழுவதற்கு யாருமற்ற இறுதிக்கிரியை ஊர்வலமொன்றில்
பள்ளிகூடம் போய்வரும் இடைவழியில்
பிஸ்கட்டுகளைக்
காட்டில் சேகரித்து வரும் காய்களுக்கு
கைமாற்றிக் கொண்ட அதே புளிய மரத்தின் கீழே
மந்தைக் கூட்டம் சூழ்ந்திருக்கச் சிரித்தவாறு கையசைக்கும்
உனது உருவைக் கண்டு
கணப்பொழுது மறந்து...
நின்று பார்க்கையில்
மரக்கிளையொன்றில் இற்றுப் போய்க்கொண்டிருக்கும்
நீ அணிந்திருந்த கந்தல் சட்டை
உனது மரணத்துக்காக ஏற்றப்பட்ட
ஒரேயொரு வெண்கொடியாக நிலைத்திருந்ததைக் கண்டேன்
பல காலம் சென்ற பின்பும்
இராட்சத ஓடை எழுப்பும் இந்த நீரலைகள்
எப்போழுதேனும்
நிலவலையும் இரவொன்றில் நீ
நீர்ப்பரப்பிலிருந்து வெளிப்பட்டு யாரும் காண்பதற்கு முன்பே
மீள மூழ்கிடுகையில் தோன்றுகின்ற கொந்தளிப்போ......
தொலைவிலிருந்து வந்து
பள்ளம் நோக்கி மிதந்து செல்லும்
இந்தச் சேற்று நுரை
இராட்சத ஓடையின் அடிப்பரப்பில்
சேற்றினிடையே ஒளிந்து கொண்டு,
இன்னும் குமிழ்களாயெழுகின்ற
உனது இறுதி மூச்சோ.....

மூலம் - அஜித் சி ஹேரத்
தமிழில் - ஃபஹீமாஜஹான்
நன்றி
# கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ்
# உயிர்மை
# ஊடறு
# பெண்ணியம்
3 comments:
ஒரு நிகழ்வின் எதிரொலி ஞாபகம் ஏங்கும் வியாபிக்க , பார்வையாளனாய் மட்டுமே இருக்க முடிந்த வேதனை , அந்த சிறுவனுக்காக துடிக்கின்ற மனம் ...குமிழிகளில் கூட இன்னும் வேதனையை காண்கின்ற தவிப்பு .....
மனம் கனகின்றது , கவிதை அருமை ...
சிங்களவர்களிலும் கவித்துவமிக்க படைப்புகளை உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள்.
அதனை தமிழ்ப்படுத்தும்
அளவுக்கு தமிழிலும் சிங்களத்திலும் பாண்டித்தியமுடைய முஸ்லிம் பெண்களும்
இருக்கிறார்கள். அவற்றை உலக
அளவுக்குக் கொண்டு செல்லும் ரிஷான் ஷரீஃபும் இருக்கிறார். வாழ்க நீங்கள்.வளர்க
உங்கள் அரும்பணி.
யார் செய்த சதியோ - சூதோ, எந்தப் பாவி வைத்த சூன்யமோ ஒரு நல்ல நாட்டை நாசமாக்கி
விட்டார்களே என்று
எண்ணும் போது நெஞ்சமெல்லாம் வேகிறது.
(ஒரு நாளும் நிரம்பியிராத வயிறு,
பெருமூச்சுகள் இறுகிய சுவாசப்பைகள்
இராட்சத ஓடையின் சேற்று நீரால் நிரம்பியிருந்ததால்
மூழ்கிச் செத்ததாகத் தீர்ப்பாயிற்று.)வாசிக்க வாசிக்க நிகழ்வுகளாக என் கண்முன்னே வந்து நிற்க கண்கள் குளமாகின!வாழ்த்துக்கள் சகோதரி ஃபஹீமாஜஹான்
பதிந்தமைக்கு நன்றி ...ரிஷான்
Post a Comment