Sunday, August 1, 2010

திருகோணமலை சந்திரன்

சதுர்ஷன்
ராஜனின் இளைய மகன்
தினந்தோறும் மாலையில்
விழிகளால் வானைத் தொட்டு
நிலவையழைப்பான்
சின்னஞ்சிறு கரங்களை அசைத்தவாறு

..நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா..

அதோ அவ்வேளைதான்
கோணேஸ்வரன் தேவாலய உச்சி நோக்கிக்
கைகூப்பியவாறு
திருகோணமலை வானத்துக்கு
நிலவு எழுந்து வரும்

மார்கழி மாதக் குளிர் நாளொன்றில்
இரவு மறந்து போய்
நிலவை கைவிட்டுச் சென்றிருந்தது வானில்
பனிப்புகாரில் சூரியன் மூடுண்ட வேளையில்
மல்லிகைகள் கண்கலங்கி
மகரந்தங்களை வழியவிட்டு அழுதன

போகுமிடம் தெரியாமல்
சீனத் துறையின் உள்ளே
நங்கூரமிட்ட நிலவு
வெண்பனித் துகள்களை ஒவ்வொன்றாய்ச் சேகரித்தது
திருகோணமலையின் சந்தியொன்றில்
இரத்தத் துளிகளில் தோய்ந்த
மல்லிகையொன்றிலிருந்து சுகந்தம் வீசியது

பட்சிகளின் பூபாளம் கேளாத
திருகோணமலையின்
காலைப் பொழுதொன்றில்
முற்றத்தில் இறங்கிய புதல்வனுக்கு
நிலவின் தனித்துப் போன இரு விழிகள் தெரிந்தன
இளஞ்சூரியனின் கிரணங்களுக்குப் புலப்படாத
மிருதுவான விரல்நுனிகளால் அது
புதல்வனின் தலைமீது சாமரம் வீசியது

அந்த மார்கழி முதல்
பணி முடித்துச் சூரியன் போகும் அந்தியானால்
சின்ன விழியொன்று  வானைத் தொட்டு
நிலவையழைக்கும்
பிஞ்சுக் கரங்களை அசைத்தவாறு

மூலம் - மஞ்சுள வெடிவர்தன (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


நன்றி
# எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
# உயிர்மை
# கூடு

6 comments:

மச்சான் said...

நல்ல கவிதை நண்பரே ரிஷான் ஷெரிப்....! வாழ்த்துக்கள்.

பாலன் said...

ஆழமான உணர்வு வெளிப்பாடு. கவிஞரின் உணர்வை அப்படியே தமிழாக்கி தந்த* விதம் அழகு. வாழ்த்துக்கள் திரு.ஷெரீப்.

M.Rishan Shareef said...

அன்பின் மச்சான்,

//நல்ல கவிதை நண்பரே ரிஷான் ஷெரிப்....! வாழ்த்துக்கள். //

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பாலன்,

//ஆழமான உணர்வு வெளிப்பாடு. கவிஞரின் உணர்வை அப்படியே தமிழாக்கி தந்த* விதம் அழகு. வாழ்த்துக்கள் திரு.ஷெரீப். //

கவிஞர் ஒரு வேற்று இனத்தவராக இருப்பினும், தமிழரின் உணர்வறிந்து எழுதியிருக்கிறார் அல்லவா.

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

புல்லாங்குழல் said...

மொழி பெயர்ப்பு என சொல்ல முடியாத உயிர்ப்பான மொழி பெயர்ப்பு. உணர்வுகளுக்கு மொழி ஏது?

M.Rishan Shareef said...

அன்பின் ஒ.நூருல் அமீன்,

//மொழி பெயர்ப்பு என சொல்ல முடியாத உயிர்ப்பான மொழி பெயர்ப்பு. உணர்வுகளுக்கு மொழி ஏது?//

நிச்சயமாக நண்பரே :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)