Thursday, May 22, 2014

சிவரமணிக்கு...

(மே மாதம் 19 ஆம் திகதி, தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்ட கவிஞர் சிவரமணியின் நினைவாக)


உன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

அந்தகாரத்துக்குள் பிறந்த நான்
அந்தகாரத்துக்குள் பிறந்த நீ
ஒருவரையொருவர் அறிந்துகொள்வோமென்று ஐயமுற்ற அவர்கள்
இறுதித் தாரகையையும் தூள்தூளாக்கினர்
நிரந்தரமான இருளுக்குள்ளேயே
எங்களைப் பிரித்துக் கொன்றுபோட்டனர்

இப்பொழுது பிணங்கள்
கரையொதுங்குகையில்
நீயும் நானும்
தற்கொலை செய்துகொண்டதாக அறிவிப்பார்கள்

நீ வடக்கிலும், நான் தெற்கிலும்
இன்னும் நிரப்பப்படாத
பொதுக் கல்லறைகள் இரண்டினுள்ளே
வெவ்வேறாக படுத்திருப்போம்

இக் குளிர்ந்த நிலக் கருவறைக்குள்ளே இடைவெளியானது
பிணங்களாலும் இருளினாலும் நிறைந்திருக்கிறது

சிவரமணி, அன்பிற்குரிய சகோதரி
வடக்கிலும் தெற்கிலும்
புதைக்கப்பட்ட அனேகரோடும்
இன்னும் நிறைய நாட்கள்
இங்கு நாங்கள் அமைதியாகச் சாய்ந்திருப்போம்

சகோதர விழிகளிலிருந்து உதிரும்
உஷ்ணக் கண்ணீர்த் துளியொன்று வந்து
எமது குளிர்ந்த நெற்றியை மெதுவாக முத்தமிட்டு
இம் மரணத்தின் தொடர்ச்சி
இத்தோடு முடிந்துவிட்டதென உத்தரவாதமளித்து
எம்மை மீண்டும்
வாழ்க்கையை நோக்கி அழைக்கும்வரை
நாமிங்கு அமைதியாகச் சாய்ந்திருப்போம்

ஏனெனில் மரணத்துக்கு முன்னர்
நீ இவ்வாறு எழுதியிருக்கிறாய்

"ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்."

- அஜித் சி. ஹேரத்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லமை இதழ் 
# இனியொரு இதழ்

Tuesday, March 18, 2014

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள்.

கவிதைக்கான குறிப்பு : எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது.

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள 
விபூஷிகா எனும் சகோதரி


உலக வரைபடமே இங்கே பார்
யோசனைகளோடு விம்மியழுது
உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

கொடிய கனவொன்றைப் போல  
மூத்தவர்கள் இருவர் மரித்திட 
முப்பொழுதும் பார்த்திருந்த
இளைய அண்ணனும் கடத்தப்பட 
பனையழகு எல்லாம் அழிந்த பூமியில் 
ஸ்வரம் இழந்த பாடலானாள்
இரட்சகனைத் தேடியதால் - நரகத்துக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ள சகோதரியொருத்தி

கற்றறிந்த சிலுவைக் குறிகளுக்கு
சத்தியத்தில் இடமில்லை
குரலெழுப்பிப் பூத்த மலரொன்று 
சிதைகிறது இரகசியமாக

அவளுமொரு சிறுமி
இருந்திருக்கக் கூடும்  கனவுகள் ஆயிரம்
இன்னும் கண்டிருக்கக் கூடும்
எப்பொழுதாவது ஒரு புன்னகைத் துளியை

உலகம் ஒரு சிறைக்கூடம்
நலிந்தவர்கள் மட்டும் சிக்கிக் கொள்ளும் சதி பீடம்
இன்றும் வலி தந்திருக்கக் கூடும்
ஒரு கொடியவனின் பார்வை

வேண்டுமென்றே கடத்தப்பட்டாள் கறுப்புத் திலகமிட்டவள் 
உருவழித்து தீப்பற்றியெரிகிறது எனது இருதயம் 
உருகவில்லையா செவிமடுக்கையில் உம் மனங்கள்

நரக நதியினின்றும் மீண்டிட 
நீந்திடு விபூஷிகா!

- கஸுன் மகேந்திர ஹீனடிகல
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

# நன்றி - இக் கவிதையை மீள்பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும்!

Wednesday, February 5, 2014

அம்மா

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது - செய்தி)

இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

அம்மா
பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்
சோறு கஞ்சி சமைத்து
என் நாவில் ஊட்டியவள்

நிலவு உதித்திருக்கிறது
இரவுத் தங்கத் தட்டின் மீது
இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்
பசித்தாலும் கூட நான்
கையேந்த மாட்டேன் அம்மா

வந்துவிடு அம்மா என்னருகே
என் பாற்பற்களால் கடித்துன்
கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா

- ஷஸிகா அமாலி முணசிங்க
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி 
# வல்லமை இலக்கிய இதழ் 
# இனியொரு