Wednesday, April 18, 2012

எனது பாதாளத் திரைப்படம் நீ

திரையிட்டுக் காட்டவியலா
பாதாளத் திரைப்படத்திற்கு நிகர்
 நீ
எக்காலத்திலும் வர்ணம் பெற்றிடா
கறுப்பு வெள்ளைக் கனவு
 நீ
கீதமிசைத்துப் பாடிடக் குரலொன்றற்ற
நானெழுதிய அழகிய கவிதை
 நீ
எடுத்துரைக்கப் பெயரறியாத
தாங்கிக் கொள்ள முடியா மலர்வாடை
 நீ

நிசி முழுதும்
பனிக் கண்ணீர் சிதறிட அழுது ஓலமிடும்
தொலைதூர இருள்
முடிவிலியில் மறைந்து செல்லும்
விடியலுக்கு உரித்தற்ற
நிரந்தரமான கனவு
 நீ
நாளையென்றவொன்றைக் காணா
எதிர்பார்ப்புகள் மரணித்துப் போன
எனது வாழ்வின் இக்கணம் நீ

- சந்திமா நிஸ்ஸங்க 
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை

Friday, March 2, 2012

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்

அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்

அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு

நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் - இஸுரு சாமர சோமவீர
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# 'தாமரை' இலக்கிய இதழ் - ஜனவரி, 2012
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Wednesday, February 1, 2012

நான் வெளியேறுகையில்…


நான் வெளியேறுகையில்
என்னைத் தொடர்ந்து
புன்னகைத்தபடி
வருவதில்லை நீ வாசல்வரை
முன்பு போல

கட்டிலிலே சாய்ந்து
என்னையும் தாண்டி
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்
தொலைதூரத்தை

அமைதியாக
பறக்கிறது பட்டம்
மிகத் தொலைவான உயரத்தில்
நூலிருக்கும் வரை

தெரியும் உனக்கும்
என்னை விடவும் நன்றாக

- இஸுரு சாமர சோமவீர
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை