
இலங்கையின் மூன்று தசாப்த காலப் போரின் வடுக்களாக,
அவர்களையும், அவர்களது மொழியையும் கொடூர எதிரிகளாக சித்தரித்துக் காட்டியுள்ளன சர்வதேச
ஊடகங்கள். அதன் பலனாக, இன்றும் கூட தமிழ் வாசகர்களிடத்தில் பரிச்சயமாக உள்ள ரஷ்ய இலக்கியங்கள்,
ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்களுக்கு மத்தியில், புறக்கணிக்கப்பட்டு, தொலைவாகிப்
போயுள்ள மொழியாக சிங்கள மொழி மாறி விட்டிருக்கிறது.
சிங்கள மொழி, உலகில் இலங்கை எனும் நாட்டில் மாத்திரமே
பாவனையிலுள்ள ஒரு பிரத்தியேகமான மொழி என்பதில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அவ்வாறே சிங்கள மொழி இலக்கியங்களும், நம் வாழ்வியலோடு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றன.
நம் மூதாதையர்கள் கூறி மகிழ்ந்த எத்தனையோ நாட்டுப்புறக் கதைகளை இன்னும் பொக்கிஷமாக
நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா?
இந்தப் பத்தித் தொடர் மூலமாக, நம் பழங்கால வாழ்வியலை,
நிகழ்கால ஜீவிதத்தை சிங்களக் கவிதைகளினூடாக உணரத் தலைப்படும் அதே வேளை, தமிழ் வாசகர்கள்
பெரிதும் அறிந்திராத சிங்கள மொழிக் கவிஞர்களை அறியச் செய்யும் முயற்சியாகவும் அமைகிறது.
எளிய குடும்பத்தில் பிறந்து,
கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றி
வரும் கவிஞரும், எழுத்தாளருமான தக்ஷிலா ஸ்வர்ணமாலி, நவீன தலைமுறை சிங்களக் கவிஞர்களில்,
படைப்புக்கள் மூலம் குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரியையாக இருப்பதால்,
சமகால சிறுவர்கள், மாணவர்களின் உளப்பாங்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவரது
கவிதைகள் யதார்த்தமாக வெளிப்படுத்தி, வளர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துகின்றன.
சமூகம்
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதிவரும் இவர், இதுவரையில் 3 கவிதைத் தொகுப்புகள்,
2 சிறுகதைத் தொகுப்புகள், 2 சிறுவர் இலக்கியப் பிரதிகள், 3 சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள்,
ஒரு நாவல் என பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதையொன்றைக் கீழே தருகிறேன்.
உதிக்காதே சூரியனே
வேண்டாம்
சூரியனே நீ உதிக்க
எனக்குப்
பிடித்திருக்கிறது
இப்படியே
சுருண்டு படுத்திருக்க
உதிக்கவே
இல்லையாயின் சூரியன்
உலகம் எவ்வளவு
அழகானதாயிருக்கும்
சூரியன்
உதித்ததுமே
ஓடத் தொடங்குவாள்
எனது தாய்
என்னையும்
இழுத்தபடி.
கழிவறைக்குப்
போனாலும் அம்மா கத்துவாள்
'சீக்கிரம்
வா… தாமதமாகுது'
வழிநெடுக
காலையுணவைப் பாதி தின்றவாறு
சீருடையைச்
சரி செய்தபடி ஓடிப் போய் நின்றால்
தடியை நீட்டியவாறு
அதிபர் கேட்கிறார்
'விரைவாக
வரத் தெரியாதா… தாமதிக்கிறாய்'
தாமதமானவர்களின்
வரிசையில் காத்திருந்து
வகுப்பறைக்குப்
போனால்
ஆசிரியை
உத்தரவிடுகிறாள்
'வீட்டுப்
பாடம் செய்யவில்லைதானே
முழங்காலில்
நில் வெளியே போய்'
பள்ளிக்கூடம்
விட்டு
பிரத்தியேக
வகுப்புக்கும் சென்றுவிட்டு
வீட்டுக்கு
வந்தால்
அப்பாவின்
கட்டளை
'விளையாடப்
போகக் கூடாது,
தொலைக்காட்சி
பார்க்கக் கூடாது,
உதிக்காதே
சூரியனே
எனக்கு சுருண்டு
படுத்திருக்க
இரவு எவ்வளவு
அழகானது
***
ஒரு
சிறுபராயத்துப் பிள்ளையின் மனப்பாங்கில் எழுதப்பட்டுள்ள இக் கவிதை, தற்கால சமூகத்தில்,
அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் மிகவும் பொருந்துகிறது அல்லவா? குழந்தைகளுக்கான எல்லாச்
சட்டங்களும் பெற்றவர்களாலேயே இயற்றப்படுகின்றன. குழந்தைகளை, குழந்தைகளாக வாழ விடுவதிலேயே
அவர்களது எதிர்காலத்தின் வெற்றி அமைந்திருக்கிறது என்பதை மறந்து விடுபவர்களுக்கு, இவ்வாறான
கவிதைகளே அதை நினைவுபடுத்துகின்றன.
- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - Tamil Mirror, மலைகள் இதழ்