Thursday, January 25, 2018

அவர்கள் நம் அயல் மனிதர்கள் - 10 – எம்.ரிஷான் ஷெரீப்



     இந் நவீன உலகில் அனைத்துமே இலகுவானதாக இருக்கிறது. தொலைவிலிருப்பவர்களுடனான தொடர்பாடலும் அவ்வாறுதான். சமுத்திரங்கள் கடந்து வெகு தொலைவில் வசித்துவரும் ஒருவருடன் ஏன் விண்வெளியில் சஞ்சரிப்பவருடன் கூட கணப் பொழுதில் தொடர்பினை ஏற்படுத்தி உரையாடிவிட முடிகிறது. இந்த அதிவேகமான சூழலுக்குப் பழக்கப்பட்டுப் போனதாகவே நவீன தலைமுறை உருவாகி வருகிறது.


     ஆனாலும், இந்த வேகத்தை எட்டும் முன்பாக, தகவல் தொடர்பாடலில் நாம் கடந்து வந்திருக்கும் பயணத்தை எவராலுமே மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அத் தகவல்களை எம்மிடம், எமது மூதாதையர்கள் கொண்டு வந்து சேர்த்ததைப் போல, நாம் அவற்றை நமக்குப் பிறகான நவீன தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது எமது கடமையாகிறது.



     ஒரு காலம் இருந்திருக்கிறது. தொலைவில் இருக்கும் ஒருவருடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள கடிதப் போக்குவரத்து பரவலாக இருந்த காலம் அது. தபாலக ஊழியர் கடிதங்களோடு, வீட்டு வாசலுக்கு வந்து மணியடித்து அழைக்கக் காத்திருந்த காலம், தமது அன்புக்குரியவர்களிடமிருந்து கடிதங்களை எடுத்து வந்து தரும் அவர் ஒரு தேவதூதனாகவே மக்களுக்குத் தோன்றினார். அவரது வரவுக்காகப் பலரும் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தனர்.



     அக் காலத்தில் அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்ள கையெழுத்தில் எழுதப்பட்டு அனுப்பப்படும் கடிதங்களே பேருதவியாக இருந்திருக்கின்றன. அக் கையெழுத்துக்கள் அன்பையும், பிரிவின் வேதனையையும், வாழ்த்துக்களையும், கோபங்களையும் தெளிவாகப் பிரதிபலித்தன. இக் கால மின்னஞ்சல்களிலோ, குறுந்தகவல்களிலோ அவற்றைக் காண முடியாது என்பது கவலை தரத் தக்க உண்மை.



     வெவ்வேறு நாடுகளுக்கிடையேயும், பிரதேசங்களுக்கிடையேயும் கடிதங்கள் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவென்றே அன்று பேனா நண்பர்கள் என்று ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அளவற்ற நேசத்தோடு, தமது நிலத்தின் அற்புதத் தகவல்களையும், தமது நாட்டு முத்திரைகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாதத்திற்கொரு தடவையாவது உறவினருக்குக் கடிதமனுப்பி எல்லோரையும் நலம் விசாரித்துக் கொள்ளுமொரு வழமை இருந்திருக்கிறது.  தொலைதூரநாடுகளுக்கு உழைத்து வரச் சென்றிருந்தவர்கள் கடிதங்களிலேயே தம் உறவுகளைக் கண்டார்கள். நேரத்தை அவர்களுக்கென ஒதுக்கி, கையெழுத்தில் எழுதப்படும் அக் கடிதங்கள் உறவின் வலிமையைக் கூட்டின. ஆனால் சகல வசதிகளும் நம் காலடியிலேயே வந்திருக்கும் இன்று?



     இந்த ஆதங்கத்தையே ஒரு கவிதையில் பதிந்திருக்கிறார் சிங்கள மொழிக் கவிஞர் டீ.திலக பியதாஸ. மின்னஞ்சல்களும், தொலைபேசிக் குறுந்தகவல்களும் நிறைந்து வழியும் இக் காலத்தில், தனது இளம்பராயத்தில் வழமையிலிருந்த கையெழுத்துக் கடிதங்களை மீண்டும் காணும் ஆசையில் அவர் இக் கவிதையை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.



அனைத்து உறவினர் நண்பர்களுக்கும்



உறவினர்களே, மனம் கவர்ந்தவர்களே

எனதன்பின் நண்பர்களே.....

புரட்டிப் பாருங்கள் உங்களது

கடந்தகால நாட்குறிப்பொன்றில் அல்லது

எங்காவது எழுதப்பட்டதொன்றிருக்கும்

என்பதில் சந்தேகமில்லை

உங்களுக்கென்றொரு பாசத்துக்குரிய நேச மடல்.





இப்பொழுதினி.....

கொப்பித் தாளொன்றைக் கிழித்து

எழுதுங்கள்,

அன்பான வாக்கியங்கள் ஓரிரண்டு.

அல்லது திட்டுக்கள் ஓரிரண்டு.

எழுதி முடித்து உறையிலிட்டு முகவரியெழுதி...

தபாலிலனுப்புங்கள் எனது பெயருக்கு.

அவையெதுவும் இயலாதிருப்பின்,

இன்னுமிருக்கின்றன தபாலட்டைகள்....

தபாலகங்களில்.





மன்னிக்கவும் அன்பர்களே இவையெல்லாவற்றுக்கும்,

எதற்காக இவையெனில்....

துண்டுத் தாளொன்றில் எழுதப்படும்,

எழுத்துக்களிணைந்து உருவாகும் சொற்களை,

சொற்களிணைந்து உருவாகும் வாக்கியங்களை,

நானின்னும் நேசிக்கிறேன்.

மனதோடு நெருக்கமான.....

அவ்வெழுத்துக்களுக்கும், சொற்களுக்கும்

உயிரிருக்கிறதென எண்ணுகிறேன் நான்.



***



     பிரத்தியேகமாக நமக்கென மாத்திரமே கையெழுத்தில் எழுதி அனுப்பப்படும் கடிதங்களை வாசிக்கும் ஆவல் உள்ளுக்குள் நம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளும் வழமைதான் நாளுக்கு நாள் அருகிக் கொண்டே வருகிறது. டீ.திலக பியதாஸவின் கவிதையில் புலப்படும் ஆதங்கம், நம் அனைவருக்குமானதுதான்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com


அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 05 இங்கே 
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 06 இங்கே  
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 07 இங்கே        
அவர்கள் நம் அயல் மனிதர்கள் – 08 இங்கே  

No comments:

Post a Comment